படித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு! 5 நிமிட எனர்ஜி கதை

ஒன்பது வயது, எந்த விவரமும் முழுதாக அறியவில்லை, பள்ளிக்கு செல்வதும் மாலை நேரத்தில் தந்தையின் ஸ்டுடியோவுக்கு சென்று உதவியாக இருப்பது,  இசை கற்றுக் கொள்வதும் தான் அந்தச் சிறுவனின் வேலை. திடீரென தந்தை இறந்துவிடுகிறார். என்ன நோயால் இறந்தார் என்பது கூட அந்தச் சிறுவனுக்குத் தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் தெரிந்தது. இனி அந்தக் குடும்பத்துக்கு அவனது உழைப்பும் மிகவும் தேவை என்பதுதான் அது.

 

ஆயிரம் முறை கேட்ட கதைதான், ஏ.ஆர்.ரஹ்மானுடையது. ஆனாலும் அதிலிருந்து எடுத்துக் கொள்ள புதிது புதிதாக விஷயங்கள் இருக்கின்றன. தந்தை ஆர்.கே.சேகர் விட்டுச் சென்றது சில இசைக் கருவிகள் மட்டும்தான். அவற்றை வாடகைக்கு விட்டுத்தான் அந்தக் குடும்பத்தின் பிழைப்பு. காலையில் பள்ளி, மாலையில் இசைக் கருவிகளை பிற ஸ்டுடியோக்களுக்குக் கொண்டு செல்வது, வாங்கி வருவது என அந்தச் சிறுவனின் பள்ளி கால வாழ்க்கை இப்படித்தான் சென்றது. விளையாட்டு, பொழுதுபோக்கு எதுவுமில்லை. இசைக் கருவிகள் மூலம் வாடகை கிடைக்கிறது, சரி. இதை நாமே வாசித்தால் இன்னும் அதிகமாகப் பணம் கிடைக்குமே என்ற எண்ணத்திலும் தாயின் ஊக்கத்திலும் கொஞ்ச நாட்களில் கீ-போர்ட் வாசிக்கத் தொடங்கி பிற இசையமைப்பாளர்களுக்கு வாசிக்கிறான். அதன் பின்னர் அடுத்த கட்டம், ஒரு ஸ்டுடியோவை சொந்தமாகக் கட்டியது. ‘பஞ்சதன்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்ட ஸ்டுடியோவை முழுமையாகப் பயன்படுத்த வேண்டுமே என்று தானே இசையமைக்கத் தொடங்கி, பல விளம்பரங்களுக்கு இசையமைக்கிறான்.

a.r.rahman with mother

அவர் பணியாற்றிய ஒரு விளம்பரமான ‘லியோ’ காபி விளம்பர இசை மிகப் பிரபலம். அந்த இசைக்கு விருது வழங்கப்பட்டதற்கான விழாவில் இயக்குனர் மணிரத்னத்தை சந்திக்கிறார். இருவருக்கும் உண்டாகும் நட்பு, இணைந்து பணிபுரிய வழி வகுக்கிறது. ‘ரோஜா’ வெளியாகி தேசிய விருது, புகழ், வந்தே மாதரம், பாம்பே ட்ரீம்ஸ், ஜெய் ஹோ, ஆஸ்கர், ‘ஒன் ஹார்ட்’,  2.0 என அனைத்தும் நாம் அறிந்தவைதான். ஆனால், அந்த நிகழ்வுகள் நமக்களிக்கும் பாடங்கள், எனர்ஜி, எப்பொழுதும் புதிது. ஒன்பது வயதில் தந்தையை இழந்து, குடும்பத்துக்காக இசைக் கருவிகளைத் தூக்கிச் சுமந்து, பதினோராம் வகுப்பிலேயே படிப்பை விட்டு தன் முயற்சியால் வளர்ந்த அவரின் இசை இன்று உலகமெங்கும் ஒலிக்கிறது, பிரெஞ்சு விளம்பரத்தில் இவர் இசை ஒலித்துள்ளது, கனடா நாட்டில் ஆண்டரியோவில் ஒரு தெருவுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

திறன், ஆற்றல், அறிவு அனைவருக்கும் உள்ளதுதான் அல்லது உழைப்பால் வளர்த்துக் கொள்ளக் கூடியதுதான். ஆனால், இவை அனைத்தும் உள்ள அனைவரும் உயரங்களை அடைவதில்லை. எது இந்த வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது?

ரஹ்மான், பதினோராம் வகுப்போடு கல்வியை முடித்துக் கொண்டாலும், அவரது அறிவுத் தேடல் இன்று வரை தொடர்கிறது. அந்தக் காலத்திலேயே கம்ப்யூட்டர்களைப் பற்றி தேடித் தேடிப் படித்துத் தெரிந்து கொண்டு பயன்படுத்தினார். தான் விளம்பரத்துக்கு இசையமைத்த காலத்தில், பெரும்பாலும் விளம்பரங்களுக்கான இசை பம்பாயில் உருவாக்கப்படும். இயக்குனர்களுக்கு கொஞ்சம் திருப்தியாக இல்லையென்றாலும் உடனே, ‘நாங்க பம்பாயில் பாத்துக்குறோம்’ என்று கூறிக் கிளம்பிவிடுவார்களாம். அந்த நிலை வரக்கூடாது என்று தேடிக் கற்று தன் தரத்தை உயர்த்தியவர் ரஹ்மான். இந்திய சினிமா இசையின் ஒலி தரத்தை ரஹ்மானுக்கு முன், பின் என்று கூட பிரிக்கலாம். அந்த அளவுக்கு தன் தொழில்நுட்ப தேடலாலும் அறிவாலும் ஒலி தரத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கொண்டு வந்தார். சூழ்நிலை நமக்கு வெளியே தடைகளைப் போடுமே தவிர உள்ளே இருக்கும் ஆசையை, ஆற்றலை தடுக்க முடியாது என்று நிரூபித்து வாழ்ந்தவர் ரஹ்மான். “நாம் நன்றாக இருக்கிறது” என்று நம்புவதை மறுத்து புதிதான ஒன்றை மக்களுக்குப் பிடித்திருக்கிறது என்றால், அதில் ஏதோ நல்லது இருக்கிறது என்று பொருள். அதை வெறுக்கக் கூடாது, புரிந்து கொண்டு நாமும் அதை ரசிக்க முடிந்தால் தான் புதுமைகளோடு பயணிக்க முடியும்” என்று கூறி இன்றும் தன் இசையை தொடர்ந்து புதிதாகவே வைத்திருப்பவர்.

arr, manirathnam, vairamuthu

ரஹ்மான் என்றாலே அனைவரும் அறிந்தது அவரது தன்னடக்கமும் கடவுள் பக்தியும் தான். இந்தத் தன்னடக்கம், ஊடக ஒளி பட்டு, அதில் ஒரு நல்ல பிம்பத்தை உருவாக்கிக் கொள்வதற்காக வந்த போலி தன்னடக்கமல்ல. ரோஜா படத்துக்கு தேசிய விருது பெற்ற பின், எடுக்கப்பட்ட நேர்காணலிலேயே தன் இசைக்கும் இந்தப் புகழுக்கும் இறைவன் தான் காரணம் என்று கூறியிருந்தார் ரஹ்மான். யார் யாரோ செய்ததையெல்லாம் கூட தனதென க்ரெடிட்ஸ் எடுத்துக் கொள்ளும் காலத்தில், துறையில் தன் வேலைக்கே கடவுளுக்குக் க்ரெடிட்ஸ் கொடுத்தவர் இவர். தான் ஆஸ்கர் விருது பெற்ற மேடையிலும் இதையே ஒலித்தார். அதுவரை தமிழ் படங்களின் பாடல் காசெட்டுகளில் இசையமைப்பாளர் பெயர் மட்டுமே இடம்பெறும். ரஹ்மான் தான் முதன் முதலில் இசைக் கலைஞர்கள், சவுண்ட் என்ஜினீயர்கள் பெயர்களையெல்லாம் போடச் செய்தார். அவர்களின் பங்கும் தன் இசைக்கு மிக முக்கியம் என்பதை உலகுக்குத் தெரிவித்தார், எந்தத் தயக்கமுமின்றி.

arr

ரஹ்மானுடன் ஆரம்பத்தில் பணியாற்றிய நண்பர் பகிர்ந்திருந்தார். ஒரு முறை இரவெல்லாம் விழித்து, உழைத்து ஒரு படத்துக்காகப் போட்டு வைத்த அனைத்து அருமையான ட்யூன்களும் எதிர்பாராமல் ஏற்பட்ட கோளாறால் அழிந்துவிட்டனவாம். இது ரஹ்மானுக்குத் தெரிந்தால் என்ன ஆகுமோ, ஏதாகுமோ, தொடர்ந்து பணியாற்ற முடியுமோ என்று பல கேள்விகள் அவரை அலைக்கழிக்க, பயந்து இருந்தார். ரஹ்மான் வந்து, அவருக்கு விஷயம் தெரிய, சிறிய அதிர்வடைந்தவர் உடனே, ‘சரி விடு, திரும்ப உக்கார்ந்து பண்ணிடலாம்’ என்று வேலையைத் தொடங்கிவிட்டாராம். ‘அழிஞ்சிருச்சு, கோபத்தால அதைத் திரும்பக் கொண்டு வர முடியாதெனும் பொழுது எதுக்குக் கோபப்படணும்?’ என்று கேட்டாராம். நாமும் நம்மை கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வி தான் இது.

ஒன்பது வயதில் குடும்பப் பொறுப்பு, பதினோராம் வகுப்போடு படிப்புத் துறப்பு என வாழ்ந்த ஒரு சிறுவன் இன்று பாப்டா, கோல்டன் க்ளோப், ஆஸ்கர், பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளைப் பெறும் அளவுக்கு உயர இந்த மூன்று வித்தியாசங்கள் தான் காரணம். நாமும் வித்தியாசப்படலாம்.

-nakkheeran.in