கனா படத்தின் ஒரு பங்கு லாபம் விவசாயிகளுக்கு அளிக்கப்படும்- சிவகார்த்திகேயன்

சென்னை: கனா படத்தின் லாபத்தில் விவசாயிகளுக்கும் ஒரு பங்கு தர இருப்பதாக தெரிவித்துள்ளார் அப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சிவகார்த்திகேயன்.

தமிழின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்து வருபவர் சிவகார்த்திகேயன். கனா படத்தின் மூலம் இவர் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். தனது முதல் தயாரிப்பே பெறும் வெற்றி பெற்றதால் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இந்நிலையில் கனா படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சிவகார்த்திகேயன் பேசியதாவது:

நடிகர் தான்:

நடிகர் தான் என் அடையாளம், அது தான் நிரந்தரம். தயாரிப்பாளர் என்பதெல்லாம் அதில் இருந்து கிடைத்தது தான். ‘கனா’ நான்கு முக்கிய படங்களுடன் வெளிவந்தது. ஹீரோ இல்லாத இந்த படத்தை இந்த போட்டியில் வெளியிட வேண்டுமா? என்று சிலர் என்னிடம் கூறினர். ஆனால் எனக்கு அருண்காமராஜ் மீது இருந்த நம்பிக்கையால் இந்த படத்தை தைரியமாக வெளியிட்டேன். படமும் வெற்றி பெற்றது.

திருப்புமுனை படம்:

வருத்தப்படாத வாலிபர் சங்கம் எனக்கு திருப்புமுனை தந்த படம், இது நான் தயாரித்த முதல் படம். என் சினிமா கேரியரின் இந்த இரண்டு முக்கியமான தருணங்களில் உடன் இருந்திருக்கிறார் சத்யராஜ். திபு நினன் தாமஸ் இசை படத்துக்கு பெரிய பலம், வைக்கம் விஜயலக்‌ஷ்மி அவர்களின் குரலும் ஆசிர்வாதமும் நல்ல துவக்கத்தை தந்தது.

ஐஸ்வர்யா ராஜேஷ்:

ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு தேசிய விருது கிடைக்கும் என்று ஒரு கமெண்ட் பார்த்தேன். அது இந்த படத்தில் நடந்தாலும் மகிழ்ச்சி, வேறு படத்தில் நடந்தாலும் மகிழ்ச்சி. அந்த விருதுக்கு தகுதியானவர்.

விவசாயிகளுக்கு உதவி:

அற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குவியுமடா என்ற வரி எனக்கு மிகவும் பிடிக்கும். அதை நான் நம்புகிறேன், உணர்கிறேன். இந்த படம் எங்கள் பேனருக்கு லாபகரமான படம். இந்த லாபத்தில் விவசாயிகளுக்கு முடிந்தவரை செய்ய இருக்கிறோம்.

இருமடங்கு:

இந்த படத்தை இயக்க எனது நண்பர் அருண்காமராஜுக்கு வாய்ப்பு கொடுத்தது நான் செய்த உதவியாக சிலர் கூறினர். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. இதை ஒரு கடமையாக பார்க்கின்றேன். நான் செய்த உதவியோ, கடமையோ, அதை எனக்கு இருமடங்கு திருப்பி செலுத்திவிட்டார் அருண்காமராஜ்” என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி:

இந்த நிகழ்வில் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை மேடைக்கு அழைத்து, விளையாட்டு உபகரணங்கள் கொடுத்து கனா படக்குழுவினர் கௌரவித்தனர். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், நடிகர் தர்ஷன், நடிகை ரமா, பாடலாசிரியர்கள் ஜிகேபி, மோகன்ராஜன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

tamil.filmibeat.com