தமிழ் பேசும் ஹீரோயின்களுக்கு ஏன் வாய்ப்பு இல்லை?: ரகசியம் சொன்ன ராதாரவி

சென்னை: தமிழ் பேசும் நடிகைகளுக்கு பட வாய்ப்பு கிடைக்காது என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அதிரடி அரசு இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள படம் கபடி வீரன். காயத்ரி ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியல் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி பேசியதாவது,

காயத்ரி

ஹீரோயின் காயத்ரி தமிழில் அழகாக பேசினார். அதனால் பட வாய்ப்பு கிடைப்பது கொஞ்சம் கஷ்டம் தான். தமிழில் பேசினால் அவ்வளவு தான். இனிமேல் இந்த அம்மாவுக்கு பட வாய்ப்பு தரக் கூடாது என்று முடிவு செய்துவிடுவார்கள். மொழி தெரிந்தால் ஏன் பயப்படுவார்கள் என்றால் சம்பளம் குறைப்பது உள்ளிட்ட விஷயங்களை ரகிசயமாக பேசுவார்கள். தமிழ் தெரிந்த நடிகை என்றால் மொழி புரிந்துவிடும். அதனால் இனி காயத்ரிக்கு பட வாய்ப்பு வராது.

பாரதிராஜா

எங்களுக்கு மதிப்பு தர மாட்டேன் என்கிறார்கள் என்றார் பாரதிராஜா. வட நாட்டில் இருந்து ஒரு நடிகையை அழைத்து வந்து நடிக்க வைத்தால் அவருக்கு நம் முகமே தெரியாது. மரியாதை அளிக்காமல் கால் மேல் கால் போட்டு உட்காருவார். நம்ம ஊர் பெண்களை நடிக்க வைத்தால் நீங்க தான் பாரதிராஜா என்பது தெரிந்து முதலில் உங்களை கும்பிடுவார்கள் என்று நான் அவரிடம் கூறினேன்.

புதுச்சேரி

நான் புதுச்சேரிக்கு சென்று ஒரு ஷூட்டிங்கில் கலந்து கொண்டேன். அந்த பெண்ணுக்கு ராதாரவி யார் என்று விளக்கிக் கொண்டிருந்தார்கள். தமிழ் தெரியாத நடிகையிடம் போய் என்னை பற்றி விளக்கி என்ன பயன். விளக்காமல் இருப்பதே நல்லது.

அபிஷேக் பச்சன்

கபடிக்கு இது நல்ல சீசன். கபடியை மதிக்காத காலம் இருந்தது. கபடி என்றால் ரவுடிப்பய ஆடும் ஆட்டம் என்பது போய் அமிதாப் பச்சன் மகன் பார்க்கும் ஆட்டம் ஆகிவிட்டது. சரியான சீசனில் கபடி வீரன் படம் வருகிறது. இதை நான் பாராட்டுகிறேன் என்றார் ராதாரவி.

tamil.filmibeat.com