சென்னை: ஒரு சாமானியன் எப்படி தமிழ்நாட்டின் முதலமைச்சராக உயர்கிறான் என்பதை அரசியல் நையாண்டியுடன் சொல்கிறது எல்கேஜி.
பல்வேறு எதிர்பார்ப்பு மற்றும் எதிர்ப்புக்கு மத்தியில் ‘லால்குடி கருப்பையா காந்தியாகிய நான்…’ என தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆர்ஜே பாலாஜி பதவியேற்கும் காட்சியுடன் தொடங்குகிறது படம். லால்குடியில் ஒரு சாதாரண இளைஞான சுற்றித் திரிந்த ஆர்ஜே பாலாஜி, அரசியலில் நுழைந்து, முதலில் கவுன்சிலராகி பிறகு முதல்வராகிறார். இதற்காக அவர் கையாளும் வழிமுறைகள், யுக்திகள், சந்திக்கும் பிரச்சினைகளை சமகால அரசியலுடன் தொடர்புபடுத்தி நக்கல், நையாண்டியுடன் கூறுகிறது எல்கேஜி.
தனது தந்தை நாஞ்சில் சம்பத் போல் பிழைக்க தெரியாத அரசியல்வாதியாக இல்லாமல், லால்குடியின் ஒரு வாட்டு கவுன்சிலராகிறார் பாலாஜி. மக்களை வெறும் வாக்காளர்களாக மட்டுமே நினைக்கும் பாலாஜி, அவர்களின் ஓட்டுக்களை கவர பல வேலைகள் செய்யும் அதேசமயம், குறுக்கு வழியில் பணமும் சம்பாதிக்கிறார். இப்படி நகர்ந்துகொண்டிருக்கும் வேளையில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் அனந்த் வைத்தியநாதன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிகிறார். ஒருவேளை அவர் மரணமடைந்தால் லால்குடிக்கு இடைதேர்தல் வரும் என கணிக்கும் பாலாஜி, அந்த சீட்டைக்கு அடிபோடுகிறார்.
ஒரு கார்ப்ரேட் நிறுவனத்தை அனுகி தன்னை பிரபலமடைய செய்வதற்கான வேலைகளில் இறங்குகிறார். பிரியா ஆனந்த் உதவியுடன், மொக்க கவிதை, நோய் எதிர்ப்பு போராட்டம் என டிரெண்டிங்காகி பிரபலமாகிறார். இதனால் துணை முதலமைச்சராக இருக்கும் ராம்குமாரின் பார்வை பாலாஜி மீது படுகிறது. முதல்வர் மரணமடைய, துணை முதல்வராக இருக்கும் ராம்குமார் அவரச அவரசமாக முதலமைச்சராக பதவி ஏற்கிறார். லால்குடி இடைத்தேர்தல் சீட்டை பாலாஜிக்கு தர முடிவு செய்கிறார். அப்போது ராம்குமாரின் எதிரணியில் இருக்கும் ஜே.கே.ரித்திஷ், பிரச்சினையாக வருகிறார். அதை பாலாஜி எப்படி முறியடிக்கிறார் என்பது தான் படம்.
படத்தின் முதல் காட்சியில் இருந்து நம் அரசியல்வாதிகளை பாரபட்சம் இல்லாமல் கலாய்க்கிறார்கள். தமிழ்தாய் வாழ்த்துக்கு எழுந்திருக்காத சாமியார், பெண் இச்சைக்கொண்ட ஆளுநர், நிர்மலா தேவி, தெர்மாகோல் என சமகால அரசியல் நிகழ்வுகளில் பெரிதும் பேசப்பட்ட விஷயங்கள் அனைத்தையும் படத்தில் நக்கல், நையாண்டி செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் பெரிதும் ரசித்து பார்க்கக் கூடிய அம்சம் அனைத்தும் படத்தில் நிறைந்திருக்கிறது. விஜய், அஜித் ரசிகர்களின் அலப்பறைகள், ஜல்லிக்கட்டு போராட்டம் என எதையும் விட்டு வைக்கவில்லை. அதேசமயம், மீடியாவையும் கூட செமயாக கலாய்த்திருக்கிறார்கள். இன்றைய நிலையில் ஒரு நாட்டின் அரசியலை நிர்ணயிப்பது கார்ப்பரேட் நிறுவனங்கள் என்பதை மிக தெளிவாக பதிவு செய்திருக்கிறார்கள். முதல் பாதியில் ஜாலியாக நகரும் படம், இரண்டாம் பாதியில் கொஞ்சம் சீரியசாக மாறுகிறது.
ரத்திஷின் எண்ட்ரிக்கு பிறகு படம் ஜெட் வேகம் எடுக்கிறது. மூத்த அரசியல் தலைவர்கள் முதல் சீமான் வரை எல்லோரையும் படத்தில் கலாய்த்திருக்கிறார்கள். பாரபட்சமே பார்க்கவில்லை பாலாஜியும், கே.ஆர்.பிரபுவும். க்ளைமாக்ஸ் வரை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் பார்வையாளர்களை திரையைவிட்டு அகலாமல் வைத்திருக்கிறார்கள்.
ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படத்திலேயே செமையாக ஸ்கோர் செய்கிறார் ஆர்ஜே பாலாஜி. மக்களுக்காக இல்லாமல், தனக்காக மட்டுமே அரசியல் செய்யும் ஒரு சுயநல அரசியல்வாதியாக கலக்குகிறார். அவரது யுத்திகளும், பிரியா ஆனந்துடன் சேர்ந்து செய்யும் அலப்பறைகளும் ரசிக்க வைக்கின்றன. ஆனால் எப்போதும் போல் லொட லொடவென பாலாஜி பேசிக்கொண்டே இருப்பது சில சமயம் அலுப்பை தருகிறது.
கார்ப்பரேட் அதிகாரி பாத்திரத்திற்கு கச்சிதமாக பொறுந்துகிறார் பிரியா ஆனந்த். காசு கொடுத்தா கார்ப்பரேட் என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறார்.
ஆர்ஜே பாலாஜியின் தந்தையாக, பிழைக்க தெரியாத அரசியல்வாதியாக, அவ்வப்போது தனது பேச்சாற்றலால் மனதில் பதிகிறார் நடிகர் நாஞ்சில் சம்பத். ராமராஜ பாண்டியனாக, உண்மை அரசியல்வாதியாக ஜொலிக்கிறார் ஜே.கே.ரித்திஷ். அவர் வந்ததற்கு பிறகு விறுவிறுப்படைகிறது படம். கோலமாவு கோகிலாவில் டோனியாக வந்தவர், இந்த படத்தில் ரித்திஷின் தம்பியாக வந்த காமெடி செய்திருக்கிறார்.
லியோன் ஜேம்சின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பாகவே இருக்கின்றன. எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே பாடல், தியேட்டரைவிட்டு வந்த பிறகும் முணுமுணுக்க வைக்கிறது.
கேமராமேன் விது அய்யன்னா படத்துக்கு தேவையான காட்சிகளை, மிகையில்லாமல் சிறப்பாக படம்பிடித்திருக்கிறார். படம் விறுவிறுப்பாக நகர்வதற்கு முழு பொறுப்பையும் ஏற்றிருக்கிறார் ஆண்டனி. தேவையில்லாத காட்சிகள் எதையும் வைக்காததால், படம் சுவாரஸ்யமாக நகர்கிறது.
சரியான நேரத்தில், சரியான கருத்துடன் வந்துள்ள எல்கேஜியை இருகரம் கூப்பி வரவேற்கலாம்.