நெடுநல்வாடை: வாட்ஸ்-ஆப் மூலம் நண்பர்களால் திரட்டப்பட்ட பணத்தால் உருவான திரைப்படம்

கையில் திரைப்படத்துக்கான கதையை வைத்துக்கொண்டு, தயாரிப்பாளரைத் தேடும் முயற்சிகளும் பலனளிக்காமல், வாய்ப்புத் தேடி அலைந்துகொண்டிருந்த உதவி இயக்குநர் ஒருவரை, வாட்ஸ்-ஆப் குழு ஒன்றின் மூலம் இணைந்த அவரது நண்பர்கள் இயக்குநர் ஆக்கியுள்ளனர்.

இளம் வயதில் இருந்து அவர் கண்ட கனவு நனவாகி, விரைவில் முழு நீளத் திரைப்படமாகவும் வெளியாக உள்ளது.

இந்த மாதம் திரைக்கு வரவிருக்கும் ‘நெடுநல்வாடை’ திரைப்படத்தின் இயக்குநர் செல்வகண்ணன்.

திருநெல்வேலி அருகே உள்ள தெற்கு அச்சம்பட்டி எனும் ஊரைச் சேர்ந்த இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து முடித்தபின், திரைப்பட வாய்ப்புகளைத் தேடத் தொடங்கி இயக்குநர்கள் சாமி, காந்தி கிருஷ்ணா, ராஜேஷ் செல்வா போன்றவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

தன்னுடன் கல்லூரியில் பயின்ற நண்பர்களைச் சந்திக்கும்போது, அவர்களின் வேலை குறித்தும் தமது திரைப்பட முயற்சிகள் குறித்தும் உரையாடியதாகக் கூறும் இவர், தனது ‘நெடுநல்வாடை’ படத்தின் கதையைத் கேட்டதும், படத்தைத் தயாரிக்க ஆகும் செலவு பற்றியெல்லாம் கவலைப்படாமல் தயாரிக்க முன்வந்ததாகக் கூறுகிறார்.

வாட்ஸ்-ஆப் மூலம் நண்பர்களால் திரட்டப்பட்ட பணத்தால் உருவான திரைப்படம்

‘என்ன கதை வெச்சிருக்கே சொல்லு’ என்று ஆர்வமா கேட்ட நண்பர்களிடம் ‘நெடுநல்வாடை’ கதையைச் சொன்னேன். அப்பொழுதே இந்தப் படத்தை நாமே தயாரிக்கலாம் என்றார்கள்.

“ஏற்கெனவே கோடம்பாக்கத்தில் ஏறி, இறங்காத சினிமா கம்பெனிகள் கிடையாது. முதலில் என்னை மகிழ்விக்க அவ்வாறு அவர்கள் கூறுவதாக நினைத்தேன்,” என்கிறார் செல்வக்கண்ணன்.

அடுத்த நாளே சில நண்பர்கள் வாட்ஸ்-ஆப்பில் ‘நெடுநல்வாடை’ எனும் குழுவைத் தொடங்கி, வெவ்வேறு இடங்களில் சிதறிக்கிடந்த கல்லூரி நண்பர்கள் 50 பேர் இணைந்து Crowd Funding எனப்படும் குழு நிதி திரட்டல் மூலம் பணத்தைத் திரட்டி இந்தத் திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

நெடுநால்வாடை

“பசுமை நிறைந்த நினைவுகளே என்று கூறி பள்ளி, கல்லூரி நட்புக்களுக்கு முடிவுரை சொல்லி கலங்கும் வாழ்க்கைதான் பல பேருக்கு வாய்த்திருக்கும். எனக்கு, என் நண்பர்கள்தான் வாழ்கையைத் துவக்கி வைத்துள்ளனர்” என்கிறார் இயக்குநர் செல்வகண்ணன்.

வாட்ஸ்-ஆப் மூலம் நண்பர்களால் திரட்டப்பட்ட பணத்தால் உருவான திரைப்படம்

“2000வது ஆண்டு நாங்கள் பாலிடெக்னிக் படிப்பை முடித்தோம். மின்னஞ்சல், அலைபேசி எல்லாம் பரவலாக பயன்பாட்டிற்கு வராத காலம் அது. எனவே கடிதம் மூலமே எங்களது தகவல் பரிமாற்றம் இருந்து வந்தது. வாழ்விற்கான பொருள் தேடி நண்பர்கள் வெவ்வேறு ஊர், நாடுகளில் பணியில் அமர்ந்தாலும், எங்களுக்குள்ளான தொடர்புகள் ஒவ்வொரு காலக்கட்டங்களிலும் கடிதம், மின்னஞ்சல், அலைபேசி, வாட்ஸ் அப் என்று வளர்ந்து நிற்கிறது.” என்கிறார் இந்த முயற்சியை முன்னெடுத்த வாட்ஸ் ஆப் குழுவின் தலைவர் சுரேஷ் சந்தானவேல்,

“நண்பர்களின் சந்திப்பின் போது, செல்வகண்ணனின் சினிமா ஆசைப் பற்றி விவாதித்தோம். எங்கள் வாட்ஸ்-அப் குரூப்பின் பெயரான ‘பி ஸ்டார்’ என்ற பெயரிலேயே படத்தைத் தயாரித்திருக்கிறோம். நிறைய முறை தயாரிப்பு செலவுகள் கூடும் போது, படத்தை வேறு யாருக்காவது கொடுத்து விடலாம் என்று யோசித்திருக்கிறோம். ஆனால், எங்களது நண்பர்கள் ஒவ்வொரு சமயத்திலும், பணம் கொடுத்து உதவினர். இது நண்பர்களின் கூட்டு முயற்சி தான்” என்கிறார் அவர். -BBC_Tamil