ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் கவனத்தைக் கவர்ந்த தியாகராஜன் குமாரராஜா, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனது அடுத்த படத்தோடு வந்திருக்கிறார். முந்தைய படத்தைப் போலவே இதுவும் ‘நான் – லீனியர்’ பாணியில் தொகுக்கப்பட்டிருக்கும் படம்தான்.
முகிலின் (ஃபஹத் ஃபாசில்) மனைவியான வேம்பு (சமந்தா), தன் முன்னாள் காதலனை அழைத்து உடலுறவு கொள்கிறாள். அது முடிந்தவுடன் எதிர்பாராதவிதமாக காதலன் செத்துப் போய்விடுகிறான்.
மற்றொரு கதையில், சிறு குழந்தையான ராசுக்குட்டி 7 வருடங்களுக்கு முன்பாக வீட்டைவிட்டு ஓடிப்போய் திரும்பிவரும் தந்தை மாணிக்கத்தை (விஜய் சேதுபதி) எதிர்நோக்கிக் காத்திருக்கிறான். ஆனால், திரும்பிவரும் மாணிக்கம், திருநங்கை ஷில்பாவாக மாறியிருக்கிறான்.
இன்னொரு கதையில், விடலைப் பருவத்தில் இருக்கும் நான்கு மாணவர்கள், பாலியல் படம் ஒன்றைப் பார்க்கத் துவங்குகிறார்கள்.
ஆனால், அந்தப் படத்தில் இவர்களில் ஒரு மாணவனின் தாய் லீலா (ரம்யா கிருஷ்ணன்) நடித்திருக்கிறாள். இதனால் ஆத்திரமடைந்து தாயைக் கொல்லச் செல்கிறான் மகன். இவர்களையெல்லாம் இணைக்கும் புள்ளியாக காவல்துறை உதவி ஆய்வாளர் பெர்லினும் (பக்ஸ்) மதபோதகர் அற்புதமும் (மிஸ்கின்) இருக்கிறார்கள்.
மனைவியின் காதல் விவகாரமும் அதைத் தொடர்ந்து நடந்த மரணமும் தெரிந்துவிட்ட முகில் என்ன செய்கிறான், அதனால் என்ன சிக்கலில் முகிலும் வேம்புவும் மாட்டிக்கொள்கிறார்கள், தந்தை ஷில்பாவுடன் பள்ளிக்கூடத்திற்குச் செல்லும்போது தொலைந்துபோகும் ராசுக்குட்டி கிடைக்கிறானா, லீலாவைக் கொல்லச் செல்லும் மகன் அவனே காயமடைகிறான், அவன் எப்படிப் பிழைக்கிறான் ஆகியவைதான் கதையின் முடிச்சுகள்.
அடிப்படையில் காமமும் ஆசையுமே வாழ்வை நகர்த்திச் செல்கின்றன, மற்றபடி வாழ்வில் நடக்கும் எல்லா சம்பவங்களுமே தற்செயலானவை என்பதையே இந்தப் படம் அடைப்படையில் சொல்ல விழைகிறது.
எது சரி, எது தவறு, கடவுள் என்பவர் இருக்கிறாரா என்பது போன்ற தத்துவ விசாரணைகளும் படத்தில் ஆங்காங்கே நடந்துகொண்டே இருக்கின்றன.
ஆரண்ய காண்டம் படத்தோடு ஒப்பிட்டால் படம் மிக மெதுவாகத் துவங்கி, நகர்கிறது. ஆரண்ய காண்டத்தில் இருந்த இயல்பான தன்மையும் இந்தப் படத்தில் மிஸ்ஸிங். ஆனால், ஒரு கட்டத்தில் திரைக்கதையின் இந்தத் தன்மை படத்தின் பலமாக மாறிவிடுகிறது. குறிப்பாக இடைவேளைக்குப் பிறகு.
இந்தப் படத்தில் இரண்டு பேர் பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். ஒருவர் வேம்புவாக வரும் சமந்தா. மற்றொருவர் ஷில்பாவாக வரும் விஜய் சேதுபதி.
சமந்தாவின் திரை வாழ்க்கையில் இந்தப் படம் நிச்சயமாக ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும். விஜய் சேதுபதி எல்லாப் படங்களிலும் ஒரே மாதிரி நடிக்கிறார் என்ற விமர்சனம் உண்டு.
ஆனால், சமீபத்தில் வெளிவந்த சீதக்காதி, பேட்ட படங்களில் தன் வழக்கமான பாணியிலிருந்து விலகியிருந்தார் அவர். அந்த வரவேற்கத்தக்க மாற்றம் இந்தப் படத்திலும் தொடர்கிறது.
மனைவி தன் முன்னாள் காதலனோடு எதற்காக உறவு வைத்துக்கொண்டாள், தன்னிடம் இல்லாத எது அவனிடம் இருக்கிறது என மருகும் பாத்திரம் ஃபஹத் ஃபாசிலுக்கு.
பெரிய நெருக்கடி வரும்போதெல்லாம் அதை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் ஆளுமையே இல்லாத ஒரு பாத்திரத்தை நிறைவாகச் செய்திருக்கிறார் ஃபஹத் பாசில்.
இவர்களைத் தவிர, படத்தில் கவரும் மற்றொரு நடிகர் மிஸ்கின். மதபோதகராக வரும் மிஸ்கின், தன் வழக்கமான பாணியிலிருந்து விலகி, மனம் கவர்கிறார்.
தவிர, காயத்ரி போல சின்னச்சின்ன பாத்திரங்களில் வருபவர்கள்கூட இயல்பான நடிப்பால் படத்திற்கு வலுச்சேர்க்கிறார்கள்.
இந்தப் படம் வயதுவந்தோருக்கானது. இருந்தபோதும் படம் நெடுக வரும் “போட்டுட்டியா?” என்ற வசனமும் நேரடியான கெட்டவார்த்தைகளும் பாலியல் தொடர்பான வசனங்களும் சிலருக்கு உறுத்தலாக இருக்கலாம்.
ஆனால், அந்த வசனங்களும் வார்த்தைகளும் வெறும் கிளுகிளுப்பிற்காக மட்டும் வைக்கப்படவையாக இல்லாமல், படம் செல்லச்செல்ல ஓர் அவல நகைச்சுவையாக மாறுகின்றன.
திறந்த மனதுடன் ஒரு ரகளையான சினிமாவை ரசிக்க விரும்புபவர்களுக்கான படம் – சூப்பர் டீலக்ஸ் -BBC_Tamil