உடல்நலக்குறைவால் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குனர் மகேந்திரன் தனது 79 ஆவது வயதில் இன்று காலமானார்.
சென்னை கிரீம்ஸ் வீதியில் உள்ள அப்பல்லோவில் சிகிச்சை பலனின்றி இயக்குனர் மகேந்திரன் காலமானார். திரையுலகினர் அஞ்சலிக்கு பிறகு இறுதி சடங்கு இன்று மாலை சென்னையில் 5 மணிக்கு நடைபெறவுள்ளன.
அலெக்ஸாண்டர் என்ற இயற்பெயர் கொண்ட மகேந்திரன் 1939 இளையான்குடியில் பிறந்தவர். சிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதக்கம், ரிஷிமூலம் உள்பட பல படங்களுக்கு கதை வசனம் எழுதி உள்ளார் இயக்குனர் மகேந்திரன். ரஜினிகாந்தின் காளி, விஜயகாந்தின் கள்ளழகர் உள்பட 26 படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார்.
அதன்பின் ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர் ஜானி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
புதுமைப்பித்தன் எழுதிய சிற்றன்னை என்ற சிறுகதையை தழுவி உதிரிப்பூக்கள் என்ற மிகச்சிறந்த படத்தை எடுத்த இவர் நெஞ்சத்தை கிள்ளாதே, நண்டு,மெட்டி உள்பட 12 திரைப்படங்களை மகேந்திரன் இயக்கியுள்ளார்.
2006ல் அரவிந்த்சாமி, கவுதமி, ரஞ்சிதா நடித்த சாசனம் என்ற படம்தான் அவர் இயக்கிய கடைசி திரைப்படம். நடிகர் சாருஹாசன், நடிகைகள் சுஹாசினி, அஸ்வினி, அஞ்சுவை அறிமுகம் செய்து வைத்தவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
2004 ஆண்டில் சினிமாவும் நானும் என்ற நூல் வெளியிட்ட அவர், விஜயின் தெறி, ரஜினியின் பேட்ட, உதயநிதியின் நிமிர் போன்ற படங்களிலும் நடித்துள்ளதோடு. இயக்குனர் மகேந்திரன் மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.
-tamilmirror.lk