தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அன்று மகேந்திரன் கூறிய நெகிழ்ச்சி வார்த்தைகள்! பல ஆண்டுகளின்பின் வெளிவந்த சம்பவம்!!

ஈழத்திலிருந்துதான் தமிழில் முறையான, முழுமையான ஒரு சினிமா வரும் என இயக்குனர் மகேந்திரன் நெகிழ்ச்சியோடு கூறிய விடயம் தற்போது வெளிவந்திருகிறது.

நேற்றைய தினம் அமரத்துவமடைந்த யதார்த்த சினிமாவின் பேராசான் எனப் புகழப்படும் இயக்குனர் மகேந்திரன் அவர்கள் குறித்து பல்வேறுபட்ட தரப்பினரும் தமது அனுபவங்களைப் பகிர்ந்துவரும் நிலையில், அவர் கடந்த 2006ஆம் ஆண்டு ஈழத்திற்கு வருகைதந்திருந்தபோது அவரிடம் திரைப்படக்கலை குறித்து பயின்ற முன்னாள் போராளிகளும் தமது அனுபவங்களை பகிர்ந்துவருகின்றனர்.

ஈழத்தில் 1996ஆம் ஆண்டு இடப்பெயர்வினை முதன்மைப்படுத்தி குறுந்திரைப்படம் ஒன்றை எடுப்பதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளால் அழைக்கப்பட்டிருந்த அவர் இரண்டு குறும்படங்களை எடுத்ததோடு மட்டுமன்றி திரைப்படத்துறையினர்க்கு துறைசார் கற்கை நெறியினையும் போதித்திருந்தார். அதுமட்டுமன்றி அன்னாரது புதல்வரான ஜோன் மகேந்திரன் என்பவர் ஆணிவேர் என்ற முழு நீளத் திரைப்படத்தினையும் ஈழத்தில் படமாக்கியிருந்தார்.

இந்த நிலையில் இயக்குனர் மகேந்திரன் குறித்து முன்னாள் போராளி ஒருவரின் பதிவினை இங்கு இணைக்கின்றோம்..

ஈழத்திரையின் இயங்கியலில் ஓர் வரலாற்று தடம். இந்தியாவின் எத்தனையோ இயக்குநர்களில் எமது திரைக்கலைக்கானவர் என தலைமையால் தேர்ந்தெடுக்க பட்டவர். எத்தனை சினிமா எடுக்கிறோம் என்பதில் பெருமையல்ல எப்படிப்பட்ட சினிமாவை எடுத்திருக்கிறோம் என்பதில்தான் பெருமை என அடிக்கடி எம் செவிகளில் உரைப்பவர்.

அன்று ஆதவன் திரைப்பட கல்லூரியில் மூன்று மாதங்களுக்கு மேல் எம்முடனேயே ஓன்றாயிருந்து எம் ஒவ்வொருவரையும் சரியாய் இனங்கண்டு சினிமா புகட்டியவர். வெறுமனே சினிமாக்களை பார்த்து படம் எடுத்துக்கொண்டிருந்த எமக்கு சினிமா இதுதான் என காட்டி கற்பித்தவர்.

எமக்கு தெரிந்தளவில் ஒரு கலைஞனை சந்தித்து தலைவன் அதிக நேரம் செலவிட்டது இயக்குனர் மகேந்திரனுடன் மட்டுமே. கற்கை நெறியின் முடிவில் கூடவே இணைந்து வழிகாட்டி, பனிச்சமரம் பழுத்திருக்கு1996 ஆகிய குறும்படங்களை எம்மைவைத்து இயக்கி எம்மை தலைநிமிர வைத்த எம் இணையில்லா ஆசான்.

உங்கள் அருகிருந்து இரண்டு படங்களில் பணியாற்றி அதை படத்தொகுப்பு செய்தது என் வாழ்வில் கிடைத்த பெரும் பாக்கியம்.

அன்று சொன்னீர்கள் பெருமையாய் ஒன்று “தமிழில் ஒரு முறையான முழுமையான சினிமா ஈழத்திலிருந்துதான் வரும் அப்போது திரையரங்கில் எழுந்துநின்று கைதட்டுபவர்களில் நானும் ஒருவனாய் இருப்பேன்” அன்று நீங்கள் சொன்னது இன்றும் எம் காதினில் ஒலிக்கிறது.

கண்டிப்பாக உங்கள் வார்த்தை நிறைவேறும் ஆனால் எழுந்துநின்று கைதட்ட நீங்கள் எம்மோடு இல்லையே…..

-eelamnews.co.uk