‘நடிகையாய் இருப்பது அவ்வளவு சுலபமானதல்ல’.. சங்கீதா சொல்வதில் ஆயிரம் அர்த்தம் இருக்கிறது!

சென்னை: நடிகையாய் இருப்பது அவ்வளவு சுலபமானதல்ல என்ற நடிகை சங்கீதாவின் வார்த்தைகளை எளிதில் கடந்து சென்று விட முடியாது.

தன்னை ஏமாற்றி தன் வீட்டை அபகரிக்க முயல்வதாக நடிகை சங்கீதா மீது அவரது தாயார் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மகளிர் ஆணையத்தில் நேரில் விளக்கமளித்துள்ளார் சங்கீதா. கூடவே தனது டிவிட்டர் பக்கத்திலும் இது தொடர்பாக உருக்கமான பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர், ‘நடிகையாய் இருப்பது அவ்வளவு சுலபமானதல்ல’ என அவர் தெரிவித்துள்ளார். இந்த வார்த்தைகள் சங்கீதாவிற்கானது என எளிதாய் இதனை கடந்து சென்றுவிட இயலாது.

நடிகைகள் பற்றிய பிம்பம்

நடிகைகள் என்றாலே வேளைக்கொரு ஆடை, அணிகலன் என விதவிதமாய் உடுத்தி ஆடம்பரமாய் வாழ்வார்கள். நினைத்த நேரத்திற்கு ஆப்பிள் ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் என குடிப்பார்கள். அப்படி வாழ குடுத்து வைத்திருக்க வேண்டும். இப்படித்தான் பலரும் நடிகைகள் பற்றி நினைக்கிறார்கள். ஆனால் நிஜம் அப்படியல்ல.

பல போராட்டங்கள்

ஒரு நடிகையாய் இருப்பதற்கு சமூகத்தில் மட்டுமல்ல, குடும்பத்திலும் அவர்கள் பல போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. வாய்ப்பு தேடிச் செல்லும் போது, பலரின் படுக்கைகளுக்கு இரையாக ஆகிறார்கள். சமீபத்தில் பலர் மீடூ மூலம் இதனை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்கள் என்பது ஊரறிந்த விசயம்.

பணத்தாசை

வேலை பார்க்கும் இடத்தில் தான் அப்படி என்றால், மகள் என்றும் பாராமல் பலர் பணத்தாசை பிடித்து அவர்களை நடிகையாக்கும் நிகழ்வுகளும் நடக்கத்தான் செய்கிறது. அப்படியாக கத்தரிக்காய் முத்தி கடைத்தெருவுக்கு வந்த கதைகள் ஏராளம். ‘ஏண்டா ஆண்டவா என்னை அழகாப் படைச்சே’ என நொந்து கொள்ளும் அளவிற்குத் தான் பலரது வாழ்க்கை இருக்கிறது.

சொந்த வாழ்க்கை

வெளியில் கோடிக்கணக்கான ரசிகர்கள் அன்பைக் கொட்டினாலும், சொந்த வாழ்க்கையில் அன்பிற்காக ஏங்கி, ஏமாந்து வாழ்க்கையை பாதியில் முடித்துக் கொண்ட நடிகைகள் அதிகம். சில்க் ஸ்மிதா, ஷோபா என பட்டியல் நீண்டு கொண்டே தான் இருக்கிறது. சில பிரச்சினைகள் வெளிப்படையாக தெரிகிறது. சில நீருபூத்த நெருப்பாக உள்ளது. அவ்வளவு தான் வித்தியாசம். இதனால் தான் திரும்பவும் சொல்கிறோம், ‘நடிகையாய் இருப்பது அவ்வளவு சுலபமல்ல’ என்ற சங்கீதாவின் வார்த்தைகளை அவ்வளவு எளிதில் கடக்க முடியாது.

tamil.filmibeat.com