காஞ்சனா 3 திரை விமர்சனம்

லாரன்ஸ் எப்போதெல்லாம் தன் மார்க்கெட்டில் சறுக்குகிறாரோ, அப்போதெல்லாம் ஒரு காஞ்சனா படத்துடன் வந்துவிடுகின்றார், ரஜினி, கமல், விஜய், அஜித் தாண்டி ரூ 100 கோடி கிளப்பில் இணைந்த நடிகர் என்றால் லாரன்ஸ், அதுவும் இவர் நடித்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம், அந்த அளவிற்கு இந்த காஞ்சனா சீரியஸிற்கு ரசிகர்கள் அதிகம், அந்த வகையில் இந்த முறையும் லாரன்ஸ் வெற்றி பெற்றாரா? பார்ப்போம்.

கதைக்களம்

காஞ்சனா சீரியஸில் என்ன கதை என்று நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. இதை தொடர் கதையாக இல்லாமல், ஒரு கான்செப்ட் வைத்து லாரன்ஸ் புது புது கதையாக எடுத்து வருகின்றார்.

அந்த வகையில் இந்த முறை தாத்தாவின் 60வது கல்யாணத்திற்கு செல்லும் லாரன்ஸ் குடும்பம், ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி சாப்பிட முடிவு செய்கின்றனர்.

அந்த இடத்தில் தான் மிக கொடூரமான பேய் ஒன்றை ஆணியில் அடித்து வைக்க, அதை லாரன்ஸ் யதார்த்தமாக பிடுங்க, பிறகு என்ன அந்த பேய் லாரன்ஸுடன் வீட்டிற்கு வந்து, அவர் மேல் ஏறி, தன்னுடைய ஆசையை நிறைவேற்றுகின்றது.

படத்தை பற்றிய அலசல்

காஞ்சனா சீரியஸின் மிகப்பெரிய ஹிட்டிற்கு காரணமே ஹாரர் என்பதை விட காமெடி தான், அதிலும் கோவை சரளா என்ன தான் ஓவர் ஆக்டிங் என்றாலும், அது தான் அவரின் ப்ளஸ்ஸாக அமைந்துவிடும், அதை கடைசி பாகத்தில் விட்ட லாரன்ஸ் இதில் பிடித்துவிட்டார், அப்படியே காஞ்சனா-2வில் நடிகைகளை மட்டும் மாற்றினால் எப்படியிருக்கும், அது தான் காஞ்சனா-3.

அதிலாவது லட்சுமி ராய் ஒருவர் இருந்தார், இதில் வேதிகா, ஓவியா, ஒரு புதுமுக நடிகை என மூன்று ஹீரோயின்கள், லாரன்ஸை சுற்றி சுற்றி காதலிக்கின்றனர், அவர்களுடன் ஜாலி, கலாட்டா என செல்ல, இரவு ஆனதும் பேய் வேலையை காட்ட ஆரம்பிக்கின்றது. அந்த காட்சிகள் எல்லாம் உண்மையாகவே நல்ல த்ரில்லங்காக எடுத்துள்ளனர்.

அதே நேரத்தில் காமெடிக்கும் பஞ்சமில்லை, காஞ்சனா-2வில் வந்தது போலவே பேய் இருக்கிறதா? என டெஸ்ட் செய்யும் காட்சிகள் எல்லாம் அதிரிபுதிரி சிரிப்பு, தியேட்டரே வெடித்து சிரிக்கின்றது, அதை தொடர்ந்து லாரன்ஸ் மேல் பேய் வந்ததும் அவர் செய்யும் வேலைகள் என கவர்கின்றது.

ஆனால், எப்போதும் ப்ளாஷ்பேக் காட்சிகள் நல்ல எமோஷ்னலாக வைக்கும் லாரன்ஸ், இதில் கொஞ்சம் ஓவர் எமோஷ்னலாக வைத்துவிட்டார், அதை விட நிறையவே சுயதம்பட்டம் தெரிகின்றது, இடையிடையே முக்கியமான கட்சி தலைவர் ஒருவரையும் அண்ணா, அண்ணா என்று சீண்டியுள்ளார். இரண்டாம் பாதி ப்ளாஷ்பேக் காட்சிகள் இன்னும் கொஞ்சம் எமோஷ்னல் நன்றாக இருந்திருந்தால் முழுமையாக ரசித்து இருக்கலாம்.

ஒளிப்பதிவு அந்த பங்களாவில் எங்கு பேய் வரும் என கேமராவை கொண்டு போகும் போதே நமக்கு பயம் ஒட்டிக்கொள்கிறது, இதற்கு தமனின் பின்னணி இசையும் பலம்.

-cineulagam.com