சட்டசபை தேர்தலில் அரசியல் பிரவேசம்.. ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு

சென்னை: சட்டசபை தேர்தல் நேரத்தில் நான் அரசியலுக்கு வருவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று நிருபர்களை சந்தித்தார் ரஜினிகாந்த். அப்போது, டிவிட்டரில் எங்களின் அடுத்த ஓட்டு ரஜினிகாந்த்துக்குதான் என்று, நேற்று தேசிய அளவில் டிரெண்ட் செய்துள்ளார்களே, அவர்களுக்கு நீங்கள் சொல்லும் பதில் என்ன என்ற கேள்விக்கு, அவர்கள் ஆர்வம் புரிகிறது. அவர்களை நான் ஏமாற்ற மாட்டேன், என்றார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் மேலும் அளித்த பேட்டி: 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து நிறைய பேர் சொந்த ஊர் போய் விட்டார்கள் என்று நினைக்கிறேன். மற்றபடி நல்லபடியாகத்தான், பெருமளவில்தான், வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. பூத்கள் எண்ணிக்கையை அதிகரித்தாலும் நல்லது, என்றார்.

தேர்தல் நேரத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்த கேள்விக்கு, முன்பெல்லாம் நடைபெற்ற கலவரத்தை ஒப்பிட்டால் இந்த முறை அமைதியாகத்தான் தேர்தல் நடைபெற்றுள்ளது. நல்லபடியாகத்தான் தேர்தலை நடத்தி உள்ளார்கள் என்று பதில் சொன்னார் ரஜினிகாந்த். தேர்தலில் பணம் ரொம்ப விளையாடியுள்ளதே என்ற கேள்விக்கு, இதற்கு தேர்தல் ஆணையம்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். எப்போது உங்கள் அரசியல் பிரவேசம் என்ற நிருபரின் கேள்விக்கு, எப்போது சட்டசபை தேர்தல் வருகிறதோ, அப்போது நீங்கள் எதிர்பார்க்கலாம் என்றார். இடைத் தேர்தல்கள் ரிசல்ட் வந்த பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் சூழல் ஏற்பட்டு, சட்டசபை தேர்தல் வந்தால், அதை எதிர்கொள்ள நீங்கள் தயாரா என்ற நிருபரின் கேள்விக்கு, எப்போது தேர்தல் வந்தாலும் தயார். ஓகே. நான் சென்று வருகிறேன். இவ்வாறு சொல்லி கிளம்பினார் ரஜினிகாந்த்.

tamil.oneindia.com