பழசை மறந்து ஒன்று சேர்ந்த இளையராஜா, எஸ்.பி.பி.

சென்னை: இளையராஜாவுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மீண்டும் சேர்ந்துள்ளது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளித்துள்ளது. இசைஞானி இளையராஜாவின் இசையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய பாடல் அனைத்துமே அருமை. அவர்களின் கூட்டணி என்றுமே வெற்றிக் கூட்டணி.

இந்நிலையில் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தனர். தான் இசையமைத்த பாடல்களை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடக் கூடாது என்று இளையராஜா கறாராக தெரிவித்தார்.

ஏக்கம்

இளையராஜா தடை விதித்தாலும் அவர் இசையமைத்த பாடல்களை தொடர்ந்து பாடுவேன் என்று எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். நல்ல நண்பர்களாக இருந்த அவர்கள் பிரிந்ததை பார்த்து ரசிகர்கள் வேதனை அடைந்தனர். இந்நிலையில் அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

எஸ்.பி.பி.

இவிபி பிலிம் சிட்டியில் இளையராஜா இன்னிசை நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் 2ம் தேதி நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு பாட உள்ளார். இந்த நாளுக்காகத் தான் ரசிகர்கள் ஏங்கிக் கிடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகிழ்ச்சி

இளையராஜாவும், எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் தங்களுக்கு இடையேயான பிரச்சனையை எல்லாம் மறந்து ஒன்று சேர்ந்து கட்டிப்பிடித்த போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதை பார்த்த தீவிர ரசிகர்களுக்கு கண்ணீரே வந்துவிட்டது.

கடவுள்

இவிபி பிலிம் சிட்டி நிகழ்ச்சியில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாட வேண்டும் என்று ரசிகர்கள் பலர் பிரார்த்தனை செய்தனர். அவர்களின் பிரார்த்தனை வீண் போகவில்லை. கடவுள் இருக்கான் குமாரு என்று ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

tamil.filmibeat.com