இதை மட்டும் செய்வீங்களா ராஜா சார்?: இளையராஜாவுக்கு ஒரு வேண்டுகோள்

சென்னை: இசைஞானி இளையராஜாவுக்கு ரசிகர்கள் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 96 படத்தில் தனது பாடல்களை பயன்படுத்தியதற்கு இசைஞானி இளையராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தற்போதுள்ள இசையமைப்பாளர்கள் தன் பாடல்களை பயன்படுத்துவது அவர்களின் ஆண்மையில்லாத்தனத்தை காட்டுகிறது என்று அவர் விமர்சித்தார்.

இளையராஜாவின் இந்த பேட்டி அவரின் ரசிகர்களை வருத்தம் அடைய செய்துள்ளது. ராஜா சார் உங்கள் இசைக்கு ஈடு இணையில்லை. சந்தோஷமாக இருந்தாலும் கவலையாக இருந்தாலும் உங்கள் இசையை தான் தேடுகிறோம். அப்படி நாங்கள் கொண்டாடும் இளையராஜா இது போன்ற பேட்டிகளால் விளாசப்படுவதை பார்க்க கஷ்டமாக உள்ளது.

நீங்கள் பேசியதில் தவறு இல்லை என்றாலும், நீங்கள் பயன்படுத்திய வார்த்தைகள் சரியில்லை. அதனால் நீங்கள் இனிமேல் இசை மூலம் மட்டுமே பேசுங்கள். பேட்டிகள் வேண்டாம். பேட்டி கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள். பேட்டிகளில் நீங்கள் மனதில் உள்ள ஆதங்கத்தை வெளிப்படுத்துவது உங்களின் இமேஜை கெடுக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.

உங்களின் ரசிகர்களான எங்களுக்கே அந்த பேட்டி பிடிக்கவில்லை. அப்படி இருக்கும்போது மற்றவர்கள் சும்மா இருப்பார்களா?. உங்கள் தரத்தை நீங்களே தாழ்த்திக் கொள்ள வேண்டாம் என்று ரசிகர்கள் அன்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிலரோ நீங்கள் ராயல்டி கேட்பது போன்று வடிவேலு கேட்டால் மீம்ஸ் கிரியேட்டர்கள் உள்பட பலரும் வேலையில்லாமல் போய்விடுவார்கள் என்று கலாய்த்துள்ளனர். மீம்ஸ் கிரியேட்டர்கள் இளையராஜாவை கலாய்ப்பது அவரின் ரசிகர்களை வருத்தம் அடைய வைத்துள்ளது.

tamil.filmibeat.com