கொலைகாரன் – சினிமா விமர்சனம்

ஜப்பானிய எழுத்தளரான கெய்கோ ஹிகஷினோ எழுதி 2005ல் வெளியான The Devotion of Suspect X நாவல் மிகப் புகழ்பெற்ற ஒரு த்ரில்லர்.

இந்த நாவல் 2008ல் Suspect X என்ற பெயரில் திரைப்படமாகவும் வெளிவந்து பெரும் வெற்றிபெற்றது. இந்தப் படம் உலகம் முழுவதும் பல மொழிகளில் தழுவி எடுக்கப்பட்டது.

த்ரிஷ்யம், பாபநாசம் படங்களும் Suspect Xன் தழுவல்தான். அந்த Suspect Xன் அதிகாரபூர்வ ரீ – மேக்தான் ‘கொலைகாரன்.’

விஜய் ஆன்டணி

வியாசர்பாடியில் உள்ள மைதானம் ஒன்றில் எரிந்த நிலையில் பிணம் ஒன்று கிடைக்கிறது. அந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் (அர்ஜுன்).

கொல்லப்பட்ட நபர், தெலங்கனாவைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரின் தம்பி எனத் தெரியவருகிறது. சென்னையில் தந்தையில்லாமல் வசிக்கும் தாரிணியும் (ஆஷிமா நார்வல்) அவளது தாயும் காவல்துறை சந்தேக வளையத்தில் வருகிறார்கள்.

எப்போதுமே தாரிணியை பின்தொடர்ந்து செல்லும் எதிர்வீட்டுக்காரரான பிரபாகரனையும் (விஜய் ஆண்டனி) சந்தேகிக்கிறது காவல்துறை.

அர்ஜூன்

ஒரு கட்டத்தில் தானே கொலையைச் செய்ததாக சரணடைகிறார் பிரபாகரன். ஆனால், உண்மையிலேயே அந்தக் கொலையை பிரபாகரன்தான் செய்தாரா?

சந்தேகமேயில்லாமல் அட்டகாசமான திரைக்கதையுடன் வந்திருக்கும் படம்தான் இது. படத்தின் துவக்கத்தில் சில கொலைகள், அந்தக் கொலைகள் எதற்காக நடக்கின்றன, கொலைகாரன் யார் என படத்தின் முதல் பாதியை மெல்ல மெல்ல மர்மங்களால் பின்னுகிறார் இயக்குநர்.

இரண்டாம் பாதியில் இந்தப் பின்னல்கள் மெல்ல மெல்ல அவிழ்கின்றன. கடைசிக் காட்சிவரை இது நடக்கிறது. அதற்கேற்றபடி, படத்தின் எந்த இடத்திலும் மர்மம் முழுமையாக வெளிப்படாத வகையில் படத்தின் திரைக்கதையையும் காட்சிகளையும் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.

இந்தப் படத்தில் பாராட்டப்பட வேண்டிய மற்றொரு அம்சம் முகேஷின் ஒளிப்பதிவு. இந்தப் படத்திற்காக சிமோன் கிங் உருவாக்கியிருக்கும் தீம் இசை அட்டகாசம்.

ஆனால், பல தேவையில்லாத தருணங்களிலும் மர்மத்தைக் கூட்டும் இசையை ஒலிக்கச் செய்திருப்பது பொருத்தமாக இல்லை. பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. உண்மையில் இந்தப் படத்திற்கு பாடல்கள் சுத்தமாகப் பொருந்தவில்லை.

அர்ஜூன், விஜய் ஆன்டணி

காளி, அண்ணாதுரை என தொடர்ந்து தோல்வியைச் சந்தித்துவந்த விஜய் ஆண்டனி இந்தப் படத்தில் மீண்டிருக்கிறார். அவருக்கு ரொம்பவும் பொருத்தமான பாத்திரம்.

அதேபோலவே அர்ஜுனும். சண்டைக் காட்சிகளுக்கே வாய்ப்பில்லாத இந்தப் படத்தில், புத்திசாலித்தனமான அதிகாரியாக சிறப்பாகவே நடித்திருக்கிறார். கதாநாயகி ஆஷிமா நார்வலுக்கு நல்ல அறிமுகம்.

இவ்வளவு விறுவிறுப்பான படத்தில் உள்ள ஒரு சிறிய பிரச்சனை, படத்தின் சில காட்சிகள் தேவையில்லாமல் மிக மெதுவாக இருப்பது. இதனால், திரைக்கதையே மெதுவானதாக இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. மற்றபடி மர்மக் கதைகளை விரும்புபவர்கள் தவறவிடக்கூடாத படம்தான். -BBC_Tamil