கடாரம் கொண்டான் – சினிமா விமர்சனம்

ஏற்கனவே பல மொழிகளில் எடுக்கப்பட்ட ஒரு கதை இப்போது ‘கடாரம் கொண்டான்’ மூலம் தமிழுக்கும் வந்திருக்கிறது.

2010ல் À bout portant என்ற பெயரில் ஒரு ஃபிரெஞ்சுத் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் 2014ல் கொரிய மொழியில் ‘தி டார்கெட்’ என்ற பெயரில் ரீ – மேக் செய்யப்பட்டது. பிறகு ஹாலிவுட்டிலும் Point Blank என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதுதான் இப்போது தமிழில் ‘கடாரம் கொண்டான்’.

மலேசியாவில் ஒரு மருத்துவமனையில் ஜூனியர் டாக்டராக பணிபுரிகிறான் வாசு (அபி ஹசன்). அவனது மனைவி ஆதிரா (அக்ஷரா ஹாசன்) கர்ப்பிணி.

இந்த நிலையில், காயத்துடன் யாராலோ துரத்தப்படும் ஒரு நபர் (விக்ரம்) விபத்திற்குள்ளாகிறார். அந்த நபர் வாசு பணியாற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகிறார்.

கடாரம் கொண்டான்படத்தின் காப்புரிமைAFP

திடீரென ஆதிராவைக் கடத்தும் சில மர்ம நபர்கள், மருத்துவமனையில் சிகிச்சைபெறும் நபரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வாசுவுக்கு நிபந்தனை விதிக்கிறார்கள்.

அதன்படியே வாசு செய்ய முயலும்போது, நடுவில் சிலர் குறுக்கிட, எல்லாம் குளறுபடியாகிவிடுகிறது. முடிவில் வாசுவின் மனைவி மீட்கப்பட்டாளா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் மர்ம நபர் யார், அவரைத் துரத்தியது யார் என்பதெல்லாம் மீதிக் கதை.

ஒரு முழு நீள ஆக்ஷன் – த்ரில்லர் திரைப்படத்தை முடிந்த அளவு சிறப்பாகச் செய்திருக்கிறார் ராஜேஷ். படத்தின் முதல் காட்சியிலிருந்து முடியும்வரை ஒரே வேகத்தில் தடதடக்கிறது திரைக்கதை.

ஆனால், படத்தின் பிற்பகுதியில் காவல்துறை அலுவலகத்திற்குள் நடக்கும் காட்சிகள் சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

கடாரம் கொண்டான்

நாடு முழுவதும் தேடப்படும் இரண்டு குற்றவாளிகள் சர்வ சாதாரணமாக காவல்துறை அலுவலகத்திற்குள் நுழைந்து, அடித்து துவம்சம் செய்கிறார்கள்.

அதேபோல, ஒரு சாதாரண ஜூனியர் டாக்டர், தன் மனைவியைக் காப்பாற்ற காவல்துறையின் கண்காணிப்பில் இருக்கும் ஒரு மர்ம நபரை, அதுவும் மயக்கத்திலிருப்பவரை வெளியில் கொண்டுவந்து ஒப்படைக்க ஒப்புக்கொள்வாரா என்ற கேள்வியும் இருக்கிறது. ஆனால், இந்த லாஜிக் மீறல்களையெல்லாம் கண்டுகொள்ளாவிட்டால் ரசிக்கக்கூடிய திரைப்படம் இது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, விக்ரமிற்கு சொல்லும்படியான ஒரு திரைப்படம். இந்தப் படத்தில் அவருக்கான வசனம் பத்து வரிகள்தான் இருக்கும். இருந்தபோதும், பல காட்சிகளில் உள்ளம் கவர்கிறார்.

வாசுவாக வரும் நாசரின் மகன் அபிஹசனுக்கு இது நல்ல அறிமுகம். மனைவியைத் தேடும் பரிதவிப்பை படம் முழுக்க சிறப்பாக செய்திருக்கிறார். அக்ஷரா ஹாசன் சில காட்சிகளிலேயே வந்தாலும் சொல்லத்தக்க பாத்திரம்.

கடாரம் கொண்டான்

இந்தப் படத்தில் பின்னணி இசையும் ஒரு முக்கியப் கதாபாத்திரத்தைப் போலவே படம் முழுக்க வருகிறது. ஆனால், பல சமயங்களில் வசனங்கள் காதில் விழாத அளவுக்கு இருப்பதுதான் பிரச்சனை.

ஒரு காட்சியில், எதிரியைத் தேடிப்போகும் விக்ரம், அங்கிருப்பவர்களையெல்லாம் சுட்டு வீழ்த்திவிடுகிறார். அந்தக் காட்சியில் பின்னணி இசை உச்சத்தில் ஒலிக்கிறது.

எல்லோரையும் சுட்டு வீழ்த்திய பிறகு, அருகிலிருக்கும் ஒரு பெட்டியைப் பார்த்துச் சுடுகிறார். சட்டென இசை நின்றுவிடுகிறது. அந்தப் பெட்டியை படத்தின் துவக்கத்திலேயே சுட்டிருந்தால், வசனங்கள் ஒழுங்காகக் கேட்டிருக்குமே என்று தோன்றுகிறது.

விக்ரம்

படத்தில் வரும் இரண்டு பாடல்களுமே சிறப்பானவை. ‘வேறென்ன வேணும், நீ மட்டும் போதும்’ பாடல் இந்த ஆண்டின் சிறந்த பாடல்களில் ஒன்று.

முன்னும் பின்னுமாக நகரும் இந்த த்ரில்லர் படத்தை, குழப்பமே வராத அளவுக்கு கச்சிதமாகத் தொகுத்திருக்கிறார் பிரவீண்.

கடந்த சில வாரங்களாக வெளியான பல திரைப்படங்கள் ஏமாற்றமளித்து வந்த நிலையில், இந்தப் படம் அந்த ஏமாற்றத்தைத் தீர்க்கிறது. -BBC_Tamil