ஃபேஸ்புக் பதிவு ஒன்று பார்வையற்ற இளைஞருக்குத் திரைப்படத்தில் பாட வாய்ப்பு வாங்கி தந்திருக்கிறது.
தீ. அஜித் மதன் என்பவர் நேற்று (சனிக்கிழமை) ஒரு காணொளியை ஃபேஸ்புக்கில் பகிர்கிறார்.
அந்த காணொளியில் பார்வையற்ற இளைஞர் விஸ்வாசம் திரைப்படத்தில் டி இமான் இசையமைப்பில் சித் ஸ்ரீராம் பாடிய கண்ணான கண்ணே பாடலை பாடுகிறார்.
இந்த பாடலை பாடுபவர் கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிப்பட்டி எனும் கிராமத்தில் பிறந்த செல்வன் திருமூர்த்தி என்றும், பார்வையற்றவரான இவர் சிறுவயதிலேயே தன் தாயை இழந்தவர் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த காணொளியை ஏறத்தாழ 288, 273 பேர் பார்க்கிறார்கள், 802 பேர் ஷேர் செய்கிறார்கள். இதில் இசையமைப்பாளர் டி.இமானும் ஒருவர்.
மேலும் டி.இமான், இந்த பாடலை பாடியவர் குறித்த விவரங்களைக் கேட்டு இருந்தார்.
பின், அந்த இளைஞர் குறித்த தகவல்கள் கிடைத்ததாகவும், அவருடன் பேசியதாகவும், திருமூர்த்திக்கு அடுத்த படத்தில் வாய்ப்பளிப்பதாகவும் தனது ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு ஃபேஸ்புக் பதிவு ஒரு நபரின் வாழ்க்கையையே மாற்றி உள்ளது.
பாலிவுட்
கடந்த மாதமும் இது போல ஒரு நிகழ்வு பாலிவுட்டில் நடந்தது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரேணு என்ற பெண் ரயில்வே நிலையத்தில் நின்று, பாலிவுட்டில் பிரபல பாடகியான லதா மங்கேஷ்கரின் பிரபல பாடலான ‘ஏக் பியார் நக்மாஅ ஹோய் ‘ என்ற பாடலை பாடினார். இதைக் கேட்ட மக்கள் இவரது பாடலை ரசித்து அதை வீடியோவாக பதிவிட்டு இணையதளத்தில் வெளியிட்டனர். இது வைரலானது.
-BBC_Tamil