காப்பான்: சினிமா விமர்சனம்

அயன், மாற்றான் படங்களுக்குப் பிறகு சூர்யாவும் இயக்குனர் கே.வி. ஆனந்தும் இணைந்திருக்கும் மூன்றாவது படம் இது.

கிராமத்தில் வசிக்கும் கதிர் (சூர்யா) ஒர் ஆர்கானிக் விவசாயி. (பயப்பட வேண்டாம். கொஞ்ச நேரம்தான் அந்த பாத்திரம்). ஆனால், உண்மையில் அவர் ராணுவ உளவுப் பிரிவைச் சேர்ந்தவர். அவர் பிறகு இந்தியப் பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படையில் இணைகிறார். பிரதமருக்கு வரும் ஆபத்துகள், அதிலிருந்து அவரைக் காப்பாற்ற கதிர் செய்யும் சாகசங்கள்தான் மீதிப் படம்.

இதயக்கனி படத்தில் தேயிலைத் தோட்ட முதலாளியாக வந்து பாட்டெல்லாம் பாடுவார் எம்..ஜி.ஆர். பிறகு பார்த்தால் அவர் ஒரு ரகசிய போலீஸாக இருப்பார். அது யாருக்குமே தெரியாது. இந்தப் படமும் அந்த பாணியில்தான் துவங்குகிறது. ஆனால், சீக்கிரமே சுதாரித்துக்கொள்கிறார்கள்.

படத்தின் துவக்கத்தில், நாகப்பட்டினத்தில் உள்ள ராணுவ முகாமிற்குள் புகும் கதாநாயகன் அங்கிருக்கும் வீரர்களை அடித்துப்போட்டு, ஆயுதங்களையெல்லாம் வெடிக்கச் செய்கிறார். இந்தியாவில் முன்பிருந்த அரசு பக்கத்து நாட்டில் நடந்த உள்நாட்டுப் போரில், அந்நாட்டு அரசுக்கு அளிப்பதற்காக வைத்திருந்த பயோ – கெமிக்கல் ஆயுதங்களாம் அவை. ராணுவமே அவற்றை சத்தமில்லாமல் அகற்றினால் தெரிந்துவிடும் என்று இயற்கை விவசாயம் – ராணுவ உளவு என இயங்கிக்கொண்டிருக்கும் ஹீரோவை வைத்து, மிகப் பெரிய அளவில் வெடிக்கச்செய்து, யாருக்கும் தெரியாமல் அழிக்கிறார் பிரதமர். இதுபோல பல சாகசங்கள் படம் நெடுக.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் புகுந்து பல அட்டகாசங்களைச் செய்யும்போது அவர்களை அடித்து நொறுக்குகிறவராக விஜயகாந்த் நடித்திருப்பார். பிறகு அர்ஜுன் கொஞ்ச நாள் பயங்கரவாதிகளோடு மோதிக்கொண்டிருந்தார். இப்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு சூர்யா களத்தில் இறங்கியிருக்கிறார்.

காப்பான்: சினிமா விமர்சனம்படத்தின் காப்புரிமைLYCA

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மட்டுமல்லாது, இந்தியாவைச் சேர்ந்த மிகப் பெரிய தொழிலதிபரும் பிறகு வில்லனாக மாறுகிறார். இருவரும் ஒருவருக்கொருவர் உதவுவதைப் போல செயல்படுகிறார்கள். ஆனால், ஆச்சரியப்படவைக்கும் எந்தத் திருப்பமும் இல்லாமல் ஏகப்பட்ட துப்பாக்கிச் சண்டைக் காட்சிகளோடு படம் நகர்ந்துகொண்டேயிருக்கிறது.

இதற்கு நடுவில் இயற்கை விவசாயம், தஞ்சை டெல்டாவில் மீத்தேன் போராட்டம், பூச்சிகளை வைத்து உயிரியல் யுத்தம் என பல விஷயங்களைச் சொல்லிச் செல்கிறார் இயக்குனர்.

முந்தைய படங்களில் சற்று சோர்வாகத் தெரிந்த சூர்யா இந்தப் படத்தில் மீண்டும் விறுவிறுப்பாகியிருக்கிறார். மேலே சொன்ன கதையில் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட முடியுமோ அவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறார்.

காப்பான்: சினிமா விமர்சனம்படத்தின் காப்புரிமைLYCA

கதாநாயகியாக வரும் சாயிஷாவுக்கு குறிப்பிடத்தக்க பாத்திரமில்லை. மோகன்லாலும் ஆர்யாவும் இந்தியப் பிரதமர்களாக வருகிறார்கள். இதில் மோகன்லாலுக்கு சற்று நடிக்க வாய்ப்பிருக்கிறது. ஆர்யா, படம் நெடுக என்னசெய்வதெனத் தெரியாமல் திகைத்துப்போயிருப்பதைப் போல இருக்கிறார்.

படத்தில் வரும் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. குறிப்பாக காஷ்மீரில் குழந்தைகள் பாடும் பாடல் மிக இனிமையான ஒன்று. ஆனால், அந்தப் பாடல்களைத் தவிர பிற பாடல்கள், அநாவசியமாகத் தென்படுகின்றன.

அயன், கவண் படங்களில் இருந்த நேர்த்தியும் லாஜிக்கும் இதில் சற்று குறைவு. ஆனால், சூர்யாவின் ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். -BBC_Tamil