பிக்பாஸ் வெற்றிக்குப் பின் முகேன்: “இனி என் வாழ்க்கை மாறும்… துன்பங்கள் முடிவுக்கு வரும்”

விமர்சனங்கள் பலவாறாக இருந்தாலும் ‘பிக்பாஸ்-3’ நிகழ்ச்சி உலகெங்கும் உள்ள தமிழ்த் தொலைக்காட்சி நேயர்களைத் தன் வசப்படுத்தி வைத்திருந்தது என்பதை மறுக்க முடியாது.

பெரும்பாலானோர் எதிர்பார்த்தபடியே ‘பிக்பாஸ்-3’ நிகழ்ச்சியில் வாகை சூடியுள்ளார் மலேசிய இளம் கலைஞர் முகேன் ராவ்.

வெற்றி சுலபத்தில் கை கூடுவதில்லை. ஒவ்வொரு வெற்றியின் பின்னனியிலும் அளவில்லா உழைப்பும் வலிகளும் பதிவாகியிருக்கும் என்பது முகேன் விஷயத்திலும் உண்மையாகி இருக்கிறது.

கடந்த 100 நாட்களுக்கும் மேலாக இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், நேற்று முன்தினம் மாலை ‘பிக்பாஸ்-3’ வெற்றியாளரை அறிவித்த வேளையில், முகேனின் தந்தை மலேசியாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

கவலைப்பட ஏதுமில்லை என்றாலும், மூன்று மாதங்களுக்கும் மேலாக குடும்பத்தை பிரிந்திருந்த காரணத்தால் தந்தையின் உடல்நிலை குறித்த பரிதவிப்புடனேயே தமது அந்த வெற்றி நிமிடங்களை ஜீரணித்துக் கடந்திருக்கிறார் முகேன்.

இறுதி நாள் நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன் வெற்றியாளராக முகேன் பெயரை அறிவித்த போது நிகழ்வை நேரில் கண்டவர்களும், உலகெங்கும் தொலைக்காட்சி வழி பார்த்த லட்சக்கணக்கான ரசிகர்களும் அதை ஒருமனதாக ஏற்று வரவேற்றதாகவே தெரிகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மலேசியக் கலைஞர் வெற்றி பெற்றிருக்கும் தகவல் அந்நாட்டின் மூலை முடுக்குகளை எல்லாம் சென்றடைந்துள்ளது. தமிழகத்தில் டீக்கடைகளில் அமர்ந்து பேசுவதைப் போல் மலேசியாவில் உணவகங்கள், சிகை அலங்காரக் கடைகள், பொது நிகழ்வுகள் என்று பல்வேறு இடங்களிலும் பிக்பாஸ், முகேன் என்ற வார்த்தைகள் உச்சரிக்கப்படுவதைக் கேட்க முடிகிறது.

பிக்பாஸ் இறுதி நாள் நிகழ்ச்சியை முகேனின் தாயும் தங்கையும் நேரில் கண்டு ரசித்தனர். முகேனின் தந்தையை உடனிருந்து கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு இருந்ததால் முகேனின் தம்பி விக்னேஷ் மலேசியாவிலேயே தங்கிவிட்டார்.

அண்ணன் ஒரு தந்தையைப் போல் என்னை கவனித்துக் கொள்வார் – முகேனின் தம்பி விக்னேஷ்

முகேன் தம்பி விக்னேஷ்படத்தின் காப்புரிமைCRAPPY BLOGGER.COM

இந்நிலையில் தமது அண்ணன் முகேன் தந்தை ஸ்தானத்தில் இருந்து தம்மைக் கவனித்துக் கொள்வதாகச் சொல்கிறார் முகேனின் தம்பி விக்னேஷ்.

முகேனின் இந்த வெற்றி ஒட்டுமொத்த குடும்பத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருப்பதாகவும், இது தமது அண்ணனின் உழைப்புக்குக் கிடைத்த வெற்றி என்றும் பிபிசி தமிழிடம் அவர் குறிப்பிட்டார்.

தமக்கும் முகேனுக்கும் சிறு வயது முதலே கலைத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்ததாகக் குறிப்பிடும் விக்னேஷ், தமது இலக்கை நோக்கி முகேன் திட்டமிட்டு பயணித்ததாகக் கூறுகிறார்.

“ஒரு விஷயத்தின் மீது ஆசைப்பட்டு நமது உழைப்பைக் கொட்டும்போது அதற்குரிய பலன், அதனால் கிடைக்கும் வெற்றி மிகப்பெரியதாக இருக்கும். அண்ணன் முகேன் இந்த வெற்றிக்குத்தான் ஆசைப்பட்டார். அதற்காக கடுமையாக உழைத்தார்”.

“அண்ணன் மேற்கொண்ட முயற்சிக்கு தொடக்க காலத்தில் பெரிதாக ஆதரவு இருந்தது என்று கூறமுடியாது. மிகக் குறைவான ஆதரவை மட்டுமே பெற்றார். ஆனால் இன்று உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளார் என்பதை சாதாரண விஷயமாகப் பார்க்க முடியவில்லை”.

“முகேன் மக்களுக்குப் பிடித்த மாதிரி நடந்து கொண்டார் என்று சொல்வதை விட அவர் முதலில் தனக்குப் பிடித்த மாதிரி நடந்து கொண்டார். பிறகு அதை மக்களுக்குப் பிடிக்கும்படி செய்தார் என்பதை இந்த வெற்றி காட்டுகிறது,” என்கிறார் விக்னேஷ்.

“இந்த வெற்றிக்குப் பிறகு என் வாழ்க்கை மாறிடும்டா”

பிக்பாஸ்-3 போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட அந்த இரவில் சென்னையில் இருந்து கோலாலம்பூரில் உள்ள விக்னேஷை தொடர்பு கொண்டு பேசினாராம் முகேன். அப்போது இந்த வெற்றியின் மூலம் தமது வாழ்க்கை அடியோடு மாறப்போவதாக உற்சாகத்துடன் தனது அண்ணன் தெரிவித்ததாகக் கூறுகிறார் விக்னேஷ்.

“இதற்குப் பிறகு என் வாழ்க்கை மாறிடும்டா… நான் கஷ்டப்பட்டதற்கெல்லாம் பலன் கிடைச்சிருச்சி… என்று அண்ணன் சொன்னார். அதற்கு வாழ்த்து தெரிவித்த நானும், இத்துடன் எல்லாம் முடிந்து விடவில்லை. மேலும் பயணிக்க வேண்டும் என்று சொன்னேன்”.

முகேன் மற்றும் சாண்டிபடத்தின் காப்புரிமைHOTSTAR

“அம்மா தங்கையுடன் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. அண்ணனுடன்கூட 3 நிமிடங்கள் மட்டுமே பேசினேன். நிகழ்ச்சி முடிந்த பிறகு நிறைய பேரைச் சந்திப்பது, பேசுவது என்று அவருக்கு நிறைய வேலைகள் இருந்திருக்கும். அலுவலகப் பணிகள் இருந்ததாலும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தந்தையைக் கவனித்துக் கொள்ள வேண்டி இருந்ததாலும் என்னால் சென்னைக்கு செல்ல முடியவில்லை.

“எப்படியும் அண்ணன் கோலாலம்பூருக்குதானே வரப்போகிறார். அப்போது பார்த்துக்கொள்வோம். அம்மாவும் தங்கையும் அவருடன் இருப்பதே போதுமானது. முகேன் வெற்றி பெற்றதை அறிந்ததும் நண்பர்கள் உறவினர்கள் என்று பலரும் இரவோடு இரவாக வாழ்த்து செய்தி அனுப்பிய வண்ணம் இருந்தனர். அண்ணனின் வெற்றி பெருமை அளிப்பதாக பலரும் குறிப்பிட்டிருந்தனர். சிலர் தங்கள் வாழ்த்தை கவிதை மூலமாகவும் தெரிவித்துள்ளனர்.

ரொம்பப் பெருமையாக இருக்கிறது. அண்ணன் பெரிதாகச் சாதித்துள்ளார் என்று நீண்ட நாட்களாகத் தொடர்பில் இல்லாதவர்கள் கூட வாழ்த்து அனுப்பியதையெல்லாம் பார்க்கும்போது எனக்கே ஒரு கனவு போல் இருக்கிறது. நேற்று வரை நம் பக்கத்தில் இருந்த ஒரு பையன் திடீரென சாதித்திருப்பது ஆச்சரியம் தரும்தான்.

அண்ணனை உடன்பிறந்த சகோதரனாகப் பார்ப்பதை விட ஒரு தந்தையாகத்தான் பார்க்கிறேன். இதைச் சொல்வதில் பெருமைப்படுகிறேன். பிள்ளைகளின் வெற்றிதான் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி தரும். அந்த வகையில் என் பெற்றோருக்கு இதைவிட சிறந்த தருணம் கிடைக்காது என நம்புகிறேன்,” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் விக்னேஷ்.

ஒட்டுமொத்த மலேசியக் கலைஞர்கள் சமூகத்துக்கும் கிடைத்த வெற்றி

முகேனுக்குக் கிடைத்துள்ள இந்த வெற்றியானது அவருக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மலேசியக் கலைஞர்கள் சமூகத்துக்கும் கிடைத்த வெற்றி எனத் தாம் கருதுவதாக மலேசிய இந்தியக் கலைஞர்கள் சங்கத் தலைவர் விஜய் எமர்ஜென்சி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

விஜய்படத்தின் காப்புரிமைVIJAY EMERGENCY

பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை முகேன் மிக நேர்மையான போட்டியாளராக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

“எல்லாவற்றையும் விட முகேன் தன் இயல்புக்கு ஏற்ப இருந்தார் என்பது முக்கியம். இதுதான் எனது குணாதிசயம் என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தி கடைசி வரை நேர்மையாக நடந்து கொண்டார்.

“அதனால்தான் மலேசிய மக்களும் கலைஞர்களும் மட்டுமல்லாமல் இந்தியாவைச் சேர்ந்தவர்களும், ஏன் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களும் அவருக்கு வாக்களித்துள்ளனர். இவர்கள் அனைவரும் கடைசி வரை அவருடன் இருந்து ஆதரவளித்து அவரை வெற்றி பெறச் செய்துள்ளனர்.

“இந்த வெற்றியின் மூலம் அவருக்கு இந்தியத் திரையுலகில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். மலேசியாவில் கூட அவர் மூன்று திரைப்படங்களில் ஒப்பந்தமாகி உள்ளதாகத் தெரிகிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.

“முகேனின் வெற்றியால் மலேசியக் கலைஞர்களுக்கு இந்தியாவில் பெரிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன. முகேன் என்ற ஒரே ஒரு மலேசியருக்கு அளித்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர் எவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. எனவே அதிகமான மலேசியக் கலைஞர்கள் பங்கேற்கும்போது அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது விரைவில் தெரியவரும்.

முகேனின் வெற்றியை ஒட்டுமொத்த மலேசிய இந்தியக் கலைஞர்களும் கொண்டாடுகிறோம்,” என்கிறார் விஜய் எமர்ஜென்சி.

அதிர்ஷ்டம் முகேன் பக்கம் வந்தது, உழைப்பு அவரிடம் இருந்தது

நந்தினிபடத்தின் காப்புரிமைNANDINI

எண்ணங்களும் சிந்தனைகளும் தெளிவாக இருந்தால் வாழ்க்கை நல்லவிதமாக அமையும் என்றும், அதற்கு முகேன் சிறந்த எடுத்துக்காட்டு என்றும் மலேசிய திரைப்படத் தயாரிப்பாளர் நந்தினி கணேஸ் தெரிவித்தார்.

“ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்க்கை நமக்கு சில பாடங்களைக் கற்றுக் கொடுக்கும். அத்தகைய தருணங்களில் நாம் உடைந்து போவோம் அல்லது மனதளவில் சிதறிப் போவோம். என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்போம்.

“ஆனால், பொறுமையாக இருந்தால் நமக்கு என்ன தேவையோ அதை வாழ்க்கை நம்மிடம் கொண்டுவந்து சேர்த்துவிடும். எண்ணங்களும் சிந்தனைகளும் தெளிவாக இருந்தால் வாழ்க்கை நல்லவிதமாக அமையும். அதற்கொரு எடுத்துக்காட்டுதான் முகேன். அவர் தமது எண்ணங்களையும் சித்தனைகளையும் தெளிவாக வைத்துக்கொண்டு இலக்கை நோக்கிச் சென்றார்.

“அதிர்ஷ்டமும் உண்மையும் அவர் பக்கம் இருந்தன. அதிர்ஷ்டம் அவர் பக்கம் வந்தது. உழைப்பு அவரிடம் இருந்தது. அதனால் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என்கிறார் நந்தினி கணேஸ்.

சென்னையில் குவிய உள்ள முகேனின் நண்பர்கள்

Baskaran

முகேன் வெற்றி அவரது நண்பர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்திருக்கிறது. ஒவ்வொருவரும் இந்த வெற்றியை எவ்வாறெல்லாம் கொண்டாடலாம் என்று பட்டியலிட்டுக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார் அவரது நண்பர்களில் ஒருவரான பாஸ்கரன்.

“முகேன் வெற்றியை ஒட்டுமொத்த மலேசியாவும் வரவேற்கிறது. சக நண்பனாக இந்த வெற்றியைப் போற்றுகிறேன். முகேன்தான் வெற்றியாளர் என்பதை கமல்ஹாசன் அறிவிக்கும்போது அதை நேரடியாகக் கண்டு மகிழ வேண்டும் என்று பலரும் விரும்பினோம். ஆனால். சூழ்நிலை அதற்கு இடம்கொடுக்கவில்லை.

“அதனால் என்ன… வரும் 17ம் தேதி சென்னையில் பெரிய கொண்டாட்ட நிகழ்வுக்கு ஏற்பாடாகி உள்ளது. அந்தச் சமயத்தில் மற்ற நண்பர்களுடன் முகேனுக்காக அங்கிருப்பேன். அந்தக் கொண்டாட்டம் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்,” என்கிறார் பாஸ்கரன்.

முகேன் குடும்பத்தார்கூட எதிர்பார்த்திராத வெற்றி

ரேவதிபடத்தின் காப்புரிமைREVATHY FACEBOOK

சக கலைஞரான முகேன் அனைவருக்குமே தன்னம்பிக்கையையும் எளிமையையும் கற்றுத்தரக்கூடிய இளைஞராக இருப்பதாகச் சொல்கிறார் டி.எச்ஆர். ராகா, தனியார் வானொலி அறிவிப்பாளர் ரேவதி.

மலேசிய இளையர்களுக்கு நல்லதொரு முன்மாதிரியாக முகேன் உருவெடுத்துள்ளதாக அவர் சொல்கிறார்.

“இன்றைய இளையர்கள் நிறைய கனவு காண்கிறார்கள். ஆனால் அந்தக் கனவை எவ்வாறு நனவாக்குவது எனத் தெரியாமல் பாதை மாறிச் செல்கிறார்கள். ஆனால் முகேன் ஒரே இலக்குடன், லட்சியத்துடன், என்னால் சாதிக்க முடியும், இலக்கை அடைய முடியும் எனும் வேட்கையுடன் செயல்பட்டார்.

“என்னைப் பொறுத்தவரை அவருடைய குடும்பத்தார் உட்பட யாருமே இப்படியொரு அசாதாரண வெற்றியை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இவர் ஒரு சாதாரண இளைஞர்தானே என்று கருதியிருப்பார்கள். ஆனால் நம்பிக்கையுடன் உழைத்தோமெனில் சாதாரண மனிதர்கள் கூட நாட்டை ஆளமுடியும் என்பதுதான் உண்மை. இப்படிப் பலர் சாதனை புரிந்திருக்கிறார்கள்.

“நம்மால் எப்படி சாதிக்க முடியும், சாதாரண செம்பனைத் தோட்டத்தில் பிறந்த நம்மால் என்ன செய்ய முடியும்? என்றெல்லாம் யோசித்து, நம்பிக்கையற்று தொய்வடையும் இளைஞர்கள் அதிகம். ஆனால் எங்கே பிறந்தோம் என்பது முக்கியமல்ல. நம்மிடம் உள்ள திறமையை எப்படி வளர்த்துக் கொள்கிறோம் என்பதில் தான் வெற்றியின் சூட்சுமம் அடங்கி உள்ளது. இந்த விஷயத்தில் முகேன் மிகவும் தெளிவாக இருந்திருக்கிறார்.

“இது முகேன் நேர்மையாக செயல்பட்டு நடிக்காமல் பெற்ற வெற்றி”

“பிக்பாஸ் நிகழ்ச்சியின் எந்தக் கட்டத்திலும் அவர் நடிக்கவே இல்லை. மலேசியாவில் எங்களுடன் எப்படியெல்லாம் பேசிப் பழகுவாரோ அப்படித்தான் இந்த நிகழ்ச்சியிலும் காணப்பட்டார்.

ஒரு முறை வானொலியில் நான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் ஒருவர், தமது மகள் முகேனின் ரசிகை என்றும், மகளின் பிறந்தநாள் நிகழ்வில் முகேன் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக முகேனைத் தொடர்பு கொண்டு பேசினேன்.

அந்த ரசிகை யார், எங்கிருக்கிறார், என்ன செய்கிறார் என்பன போன்ற எந்தவொரு விவரத்தையும் அவர் கேட்கவே இல்லை. எங்கே வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டு குறித்த நேரத்தில் வந்து சேர்ந்தார். இத்தனைக்கும் அன்று அவருக்குச் சரியான காய்ச்சல். அதைப் பொருட்படுத்தாமல் நேரில் வந்தவர், அங்கிருப்பது யார், யார் என்று கூட விசாரிக்காமல் அனைவருடனும் மிக சகஜமாக நட்பாக உரையாடினார். சிரித்துப் பேசி மகிழ்வித்தார். கேக் வெட்டப்பட்டதும் அங்கிருந்து பிரியா விடை பெற்றுச் சென்றார்.

ஆனால் ஒருவரிடம் கூட தனக்குக் காய்ச்சல் என்பதை அவர் வெளிப்படுத்தவில்லை. இத்தகைய தன்மையான போக்கும் பண்பும் அவரிடம் இருப்பது பாராட்டுக்குரியது. இந்தத் தன்மைகள்தான் ஒருவருக்கு வெற்றியைத் தேடித் தரும்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே அவர் வெளியேற்றப்படுவார் என்று சிலர் ஆரூடம் தெரிவித்தனர். ஆனால் நிகழ்ச்சியில் நீடிப்பார், நிச்சயம் வெற்றி பெறுவார் என்று நண்பர்கள் நாங்கள் கூறிவந்தோம். அது தற்போது உண்மையாகி உள்ளது. மலேசிய இளையர்கள் அனைவரும் அவரை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட்டு வெற்றி பெற வேண்டும்” என்று பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார் ரேவதி. -BBC_Tamil