திறன் கல்வியை அறமாக செய்யும், மைஸ்கில்ஸ்சின் மகத்தான பணி!  

அறம் செய்ய விரும்பு என்று நாம் ஆத்திச்சூடியில் படித்ததுண்டு. அதற்கு இலக்கணமாக திகழ்கிறது மைஸ்கில்ஸ் அறவாரியம். இந்த அறவாரியத்தைப் பார்வையிடும் அனைவரும் தாங்கள் கொள்ளும் நிறைவையும், மகிழ்ச்சியையும் பல்வேறு விதங்களில் வெளிப்படுத்துவதுண்டு.

மைஸ்கில்ஸ்சின் நன்கொடையாளர்களில் ஒருவரான மருத்துவர் கண்ணன் தான்ஸ்ரீ பாசமாணிக்கம் கடந்த 31 ஆகஸ்ட் அன்று கலும்பாங் மைஸ்கில்ஸ் வளாகத்தில் நடைபெற்ற திறந்த இல்ல உபசரிப்பு  நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வளாகத்தைப் பார்வையிட்டார். அவரின் அனுபவங்கள் இதோ!

இவ்வாறு சமுதாயத்தில் தாழ்நிலையில் உள்ளவர்களுக்கு மலேசியாவிலுள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வெவ்வேறு வகைகளில் உதவி செய்து வருகின்றன.

12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவவாதியான மைமோனிடஸ் சிறந்த கொடை எது என்று கூறும்போது சமூகத்தில் பின்தங்கியோருக்கு அவர்களது வாழ்க்கையைத் தன்னிறைவாக ஆக்கக்கூடிய ஒரு திறனைக் கற்பிப்பதே சிறந்த கொடையாகும் என்கிறார்.

குற்ற வாழ்க்கையைத் தவிர்த்துள்ளனர்

செயல்படாத குடும்ப அமைப்பில் உள்ளவர்கள் மற்றும் ஒற்றைப்பெற்றோர் கொண்ட, பள்ளிப்படிப்பை முடிக்கவியலாத இளையோருக்கென 2011-ல் துவங்கப்பட்டது மைஸ்கில்ஸ் அறவாரியம், உயர் தகுதி கொண்ட வேலைகளுக்கான பயிற்சியளிப்பதன் மூலம் அவர்களுக்கு வாழ்க்கையில் இரண்டாவதாக ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

நண்பர்களோடு பேசிய பிறகு பலருக்கு இப்படியொரு அமைப்பு இருப்பதே தெரியவில்லை என்பது புரிந்தது. இன்றளவில் சுமார் 800 இளையோர் இங்கு பயிற்சி பெற்று குறிப்பிடத்தகுந்த வேலைகளைப் பெற்றுள்ளனர் – அதன்வழி குற்ற வாழ்க்கையைத் தவிர்த்துள்ளனர்.

கபாலியும் ஜாகாட்டும்

கபாலி  என்ற திரைப்படத்தின் கதைப்போக்கு மைஸ்கில்ஸ் அறவாரியத்தைப் பார்த்த பிறகு மாற்றம் கண்டதென எனக்குச் சொல்லப்பட்டது.  கபாலி யின் இயக்குநரான பா. ரஞ்சித் மைஸ்கில்ஸ் வளாகத்தினைப் பார்த்தபின் ஈர்க்கப்பட்டு அதனால் கதைப் போக்கை மாற்றிடத் தூண்டுதல் பெற்றார். 2015-ல் வெளியான  ஜகாட் திரைப்படத்தை மைஸ்கில்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. பல்வேறு மாணவர்கள் அத்திரைப்படத்தின் துணைப் பாத்திரங்களில் நடித்திருந்தனர். அத்திரைப்படம் மலேசியத் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது.

இந்த மலேசிய சுதந்திர நாளன்று மைஸ்கில்ஸ் அறவாரியத்தின் முதலாவது ஓபன்-டே (Open Day) நிகழ்ச்சிக்காக பெட்டாலிங் ஜெயாவிலிருந்து ஒன்றரை மணிநேரப் பயண தூரத்தில் அமைந்திருக்கும், கலும்பாங், ஹுலு செலாங்கூரில் 12 ஹெக்டேர் பரப்பளவுள்ள வளாகத்திற்குச் சென்றதன் மூலம் நானும் எனது மனைவியும் பயனுள்ள வகையில் அக்காலைப் பொழுதைச் செலவிட்டோம்.

மலைத்தொடரின் பின்னணியில் அவ்வளாகம் மிக அமைதியாகக் காட்சியளித்தது. மைஸ்கில்ஸ் இயக்குநர்களின் தொலைநோக்கு மற்றும் அற்புதமான திட்டமிடல்  பயன்பாட்டில் இல்லாத இரு கிடங்குகளை வகுப்பறைகளாக, விளையாட்டு மையமாக மாற்றியுள்ளது (நன்கொடையாளர் ஒருவர் தேவையான  விளையாட்டு உபகரணங்களை வழங்குவதாக  உறுதியளித்துள்ளார்). 120 மாணவர்கள் தங்குமளவுள்ள விடுதியும் அங்கு அமையவுள்ளது.

இயற்கையோடு இயங்கும் மைஸ்கில்ஸ்

மாணவர்கள் இங்கு இயற்கை முறையில் காய்கறிகளை விளைவிக்கின்றனர். உடல்நலம் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டு காரணங்களுக்காகவும் மாணவர்களுக்கு சைவ உணவு வழங்கப்படுகிறது. பெற்றோர் வரும்போது அசைவ உணவுகளைக் கொண்டு வருவது அனுமதிக்கப்பட்டுள்ளது.

மெகட்ரானிக்ஸ் (Mechatronics) எலக்ட்ரிகல் வயரிங் (Electrical Wiring), வெல்டிங் (Welding), ஏர் கண்டிஷன் பழுது நீக்குதல் (Air-Conditioner Repair), பிளம்பிங் (Plumbing), சமையல் கலைகள் (Culinary Arts), கார்ப்பரேட் செயலகப் பயிற்சி (Corporate Secretarial Studies) மற்றும் சிகை அலங்காரம் (Hair-Dressing) ஆகியவை கற்பிக்கப்படுகின்றன.

இருபத்தியோரு முழுநேர ஆசிரியர்கள் வளாகத்தில் பணிபுரிகின்றனர். அவர்களோடு நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஆங்கிலம், கணிதம், அறிவியல், நன்னெறிக்கல்வி மற்றும் அனைத்து சமயங்களையும் உள்ளடக்கிய ஆன்மீக வகுப்புகளை நடத்துகின்றனர். தன்னார்வலரான முடி திருத்துநர் ஒருவர் வாரமிருமுறை இரண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்.

மைமொரிங்கா வாங்குங்க!  

ஒவ்வொரு ஞாயிறன்றும் பயிற்சியாளர் ஒருவர் கால்பந்துப் பயிற்சி வழங்குகிறார். மற்றொரு தன்னார்வலரது உதவியுடன் மாணவர்கள் முருங்கை இலையைப் பறித்துக் காயவைத்துப் பொடியாக்கி (வளாகத்தின் தேவைக்காக நூற்றுக்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளன) அவற்றை மாத்திரைகளாக்கி மைமொரிங்கா என்ற பெயரில்விற்பனை செய்கின்றனர்.

மைஸ்கில்லில் உள்ள மாணவன் ஒருவனது அன்றாடம் எவ்வாறு இருக்குமென்று கேட்டுத் தெரிந்து கொண்டேன். காலை 6:30 மணிக்கு எழுந்து இரண்டு மணிநேரம் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர், பிறகு காலையுணவு. அதன்பிறகு 9 மணி முதல் 1 மணிவரை மலேசிய அரசாங்கத்தின் திறனடிப்படையிலான பாடத்திட்டத்தின்படி அமைக்கப்பட்ட வகுப்புகள் நடைபெறும்.

தங்கள் வீட்டில் இருப்பதைப் போன்று இயல்பாக உள்ள துடிப்பான பல மாணவர்களைச் சந்தித்து உரையாடினோம். ஊக்கப்படுத்தும் வகையிலான பல்வேறு மாற்றங்களின் கதைகள் (மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன):

சியூ லிங் தனக்கு 18 வயதிருக்கும்போது மைஸ்கில்ஸ்சில் சேர்ந்தாள். மிகவும் சிரமப்பட்டுத்தான் ஆங்கிலம் பேசமுடியும். 14 வயதில் தந்தையை இழந்த அவள் தொடர்ந்து பள்ளிக்குச் செல்லாமல் இருந்த காரணத்தால் SPM தேர்வையும் முழுமையாக எழுதவில்லை. ஆனால், 18 மாதங்களுக்குப் பிறகு இப்போது அவளால் ஆங்கிலத்தில் உரையாட முடியும், செயலகப் பணியில் சிறந்து விளங்குகிறாள், டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் டிப்ளமோ செய்ய எண்ணம் கொண்டிருக்கிறாள்.

பாலனின் கதை

பாலன் 10 உடன்பிறப்புகளோடு வளர்ந்த சிறுவன், எப்போதும் பசியில் வாடியவன். அவனது தந்தை குடும்பத்தைக் கைவிட்டுவிட்டார், அம்மா சிறிய வேலைகளைச் செய்து வந்தார். 14 வயதில் பள்ளியிலிருந்து நின்றுவிட்ட அவன் நண்பர்களோடு சேர்ந்து அடிக்கடி மது அருந்தத் தொடங்கினான். அவனது அம்மா அவனை மைஸ்கில்ஸ்சில் சேர்த்தபின் எலக்ட்ரிகல் ஒயரிங் படிப்பில் தேசியத் திறன் சான்றிதழோடு தேர்ச்சி அடைந்தான். தற்போது தன் இளைய சகோதரனை தனது மேற்பார்வையில் படிப்பதற்காக மைஸ்கில்ஸ்சில் சேர்த்துள்ளான்.

கொடுப்பது அழகானது என்கிறார் பசுபதி

மைஸ்கில்ஸ்சின் நிறுவனரும் இயக்குநருமான வழக்கறிஞர் பசுபதி அவர்களிடம் உரையாடினேன், மெல்லிய குரலில் பேசும் இவரே இவ்வமைப்பின் உந்துசக்தி. அவரது வாழ்க்கைப் போராட்டங்களே அவரைப் போன்ற எண்ணங்கொண்ட நண்பர்களோடு சேர்ந்து மைஸ்கில்ஸ்சை உருவாக்கத் தூண்டுகோலாக இருந்தன. தனது சிறு வயதில் தனக்கு உதவியவர்களிடம் இருந்தே கொடுப்பதன் அழகை, அதிலிருக்கும் மகிழ்ச்சியை, சேவை செய்வது மற்றும் அர்ப்பணிப்புடன் இருப்பதைக் கற்றுக்கொண்டேன் என்றார்.

பாய்லர்மேனாக இருந்த பசுபதியின் தந்தையாரது வருமானம் ஏழு குழந்தைகளுக்கு உணவளிக்கப் போதுமானதாக இல்லை. இரண்டு தோசை மற்றும் நீர்விட்டுக் காய்ச்சிய தேநீர் அருந்தியதோடு பள்ளிக்குச் செல்வார். அந்தந்த வேளைக்குச் சரியாக உண்ணுமளவு பணம் இருந்ததில்லை.லிம் வூன் கய் எனும் நண்பர் இடைநிலைப்பள்ளிக் காலம் முழுவதும் இவர் கேட்காமலேயே இவரது மதிய உணவுக்கான பணத்தைக் கொடுத்தார். தற்போது பணி ஓய்வு பெற்றுவிட்ட அவரோடு திரு.பசுபதி இன்னமும் தொடர்பில் இருக்கிறார். கொடுப்பதன் மகிழ்ச்சியை லிம் அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.

தமிழ் வழிக் கல்வியில் பயின்ற பசுபதிக்கு ஆங்கிலத்தில் நடத்தப்படும் பாடங்களைப் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது. குட் ஷெப்பர்ட் கான்வென்ட்டில் இருந்த கன்னித்துறவியர் அவருக்கு அடிப்படை ஆங்கிலத்தில் பயிற்சியளித்தனர், அதனுடன் ஏழைகள் மற்றும் தேவையில் உள்ளவர்களுக்கு உதவும் சேவையில் உள்ள அழகையும் கற்பித்தனர்.

கிர்க்பியில் பயிற்சிபெற்ற கோவின் என்பவர் பசுபதிக்கு கணித ஆசிரியராக இருந்தார். அவர் வாரம் இருமுறை இலவசமாக பாடங்களைக் கற்றுக்கொடுத்தார், அது மதிப்பெண்கள் உயரக் காரணமாக அமைந்தது. திரு.பசுபதி, கோவின் அவர்களிடமிருந்து  கற்றுக்கொண்ட விழுமியங்களையே மைஸ்கில்ஸ் நிறுவனத்தில் மாணவர்களிடையே நிகழ்த்தப்படும் உருமாற்றத்திற்கு அடிப்படைக் கொள்கைகளாக ஆக்கினார்.

திரு.பசுபதியின் ஆறாம் வகுப்புக்கான செலவினங்கள் டாக்டர் ராம சுப்பையா கல்வி உதவித்தொகை மூலம் கிடைத்தன. இக்காலகட்டத்தில் அவர் விவேகானந்தா ஆசிரமத்தில் தங்கியிருந்தார். சமூகத்திற்குத் திருப்பியளிக்க வேண்டும் என்கிற எண்ணம் அங்கிருந்தே துவங்கியதாக என்னிடம் கூறினார்.

கல்லூரியில் பயில பசுபதிக்கு JPA கல்வி உதவித்தொகை கிட்டியது. நான்கு வருடங்களில் UKM – இலிருந்து வேதியியல் தொழில்நுட்பத்தில் (Chemical Technology) பட்டம் பெற்றார். அதன்பின் வருமான வரித்துறையில் ஆறரை வருடங்கள் பணிபுரிந்தார். பிறகு தனது சேமிப்புடன் இங்கிலாந்துக்கு சட்டம் பயிலச் சென்றார், பகுதிநேரமாக உணவகங்களில் பணி செய்தபடியும் வாடகை வண்டி ஓட்டியபடியும் கல்வி கற்றார்.

இரண்டு வருடங்களில் தனது சட்டக் கல்வியை முடித்தபின் தாயகம் திரும்பிய அவர் தற்போது தன்னுடைய சொந்த சட்ட நிறுவனத்தை 20 வருடங்களுக்கும் மேலாக நடத்திவருகிறார், மேலும் வருடத்திற்குக் குறைந்தது 10 வழக்குகளையேனும் இலவசமாக எடுத்துக் கொள்கிறார், முக்கியமாக சிறார் குற்றவாளிகள் தொடர்புடையவை. இம்மாதிரியான வழக்குகள் பலவும் சிறார்கள் தரப்பு வாதிட்டு வெல்லத் தக்கதென நீதிபதிகள் கருதி தன்னிடம் அளிக்கப்படுபவை என்றார்.

இந்த அறவாரியத்தை நடத்துவதற்கான செலவு மாதத்திற்கு 150,000 வெள்ளி ( மாணவர்கள் கட்டணம் ஏதும் செலுத்துவதில்லை). தற்போது, இந்த மையம் பெருநிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் நன்கொடைகளை சார்ந்திருப்பினும் ஐந்திலிருந்து ஆறு வருடங்களில் தற்சார்பு நிலையை அடையும்.

வரி விலக்கிற்குத் தகுதியுள்ள நன்கொடைகளை அனுப்ப விரும்பினால் மைஸ்கில்ஸ்சை  03-2691 6363-ல்  தொடர்பு கொள்ளவும் அல்லது [email protected] என்ற முகவரிக்கு இ-மெய்ல் அனுப்பவும்.

(ஸ்டார் நாளிதழில் (20.9.2019) மைஸ்கில்ஸ் குறித்து மருத்துவர் கண்ணன் தான்ஸ்ரீ பாசமாணிக்கம் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது)

 

An abandoned godown turned into a sports centre at MySkills Foundation in Kalumpang, Hulu Selangor.
A dedicated teacher and his keen student at MySkills in Kalumpang, Hulu Selangor.

 

 

 

 

These boys are applying what they learnt about air-conditioner repair, at MySkills Foundation in Kalumpang, Hulu Selangor.
Some of the students of MySkills Foundation bonding over a game of football.