“நினைத்த இடத்தில் கட்டி வைப்பதற்கு மக்கள் கால்நடைகளா?”, ஜீவி காத்தையா

தெருப் பேரணி நடத்துவதற்கான மலேசிய மக்களின் உரிமையைப் பறிக்க வகை செய்யும் புதிய அமைதியாகக் கூடுதல் மசோதா 2011 ஐ கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 29) மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவை ஏற்றுக்கொண்டது.

டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்ற மேலவை அம்மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த பின்னர் அது சட்டமாகும்.

இச்சட்டம் மலேசியாவை உலகின்  கீழ்த்தர ஜனநாயக நாடுகளில் முதன்மையான நாடு என்ற தகுதிக்கு உயர்த்தும். மியன்மார் போன்ற நாடுகள்கூட மலேசியாவின் இத்தகுதிக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்னால்தான் நிற்க வேண்டும்.

நவம்பர் 21 இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இம்மசோதாவில் கூறப்பட்டுள்ள பலவற்றில் சில மிக முக்கியமான கூறுகள்:

1. தெருப் பேரணிக்குத் தடை;

2. 21 வயதிற்குக் குறைவானவர்கள் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குத் தடை;

3. 15 வயதிற்குக் குறைவான குழந்தைகள் அமைதியான கூட்டங்களில் பங்கேற்பதற்குத் தடை;

4. ஏற்பாட்டாளர்கள் மற்றும் கூட்டங்கள் மீது தகாத கடுமையான பொறுப்புகளும் கட்டுப்பாடுகளும்; மற்றும்

5. சட்ட மீறல்களுக்கு அபரிதமான அபராதங்கள்.

இந்த மசோதா போலீஸ் சட்டம் 1967 செக்சன் 27 க்கு மாற்றாக உருவாக்கப்பட்ட சட்ட வரைவாகும்.

மலேசியாவை உலகின் மிகச் சிறந்த ஜனநாயக நாடாக உருமாற்றம் செய்ய விரும்பும் அவரது நோக்கத்தை மலேசிய தின உரையில் பிரதமர் நஜிப் வெளியிட்டார்.

அவ்வுரையில் கூட்டம் கூடுதலுக்கான சுதந்திரம் குறித்த அரசமைப்பு பிரிவு 10 ஐ கவனத்தில் எடுத்துக்கொண்டு அதே விவகாரத்தில் அனைத்துலக தரத்திற்கு ஒப்புமையாக இருப்பதற்காக அரசாங்கம் போலீஸ் சட்டம் 1967 இன் செக்சன் 27 ஐ மறு ஆய்வு செய்யும் என்று கூறியிருந்தார். (“The Government will also review section 27 of the Police Act 1967, taking into consideration Article 10 of the Federal Constitution regarding freedom of assembly and so as to be in line with international norms on the same matter.”)

செப்டெம்பர் 15 இல் கூறப்பட்ட பிரதமரின் இக்கருத்து இந்நாட்டில் மக்கள் சுதந்திரமாக கூடுதலுக்கான உரிமைகள் அனைத்துலக தரத்திற்கும் நாட்டின் அரசமைப்புச் சட்டத்திற்கும் ஏற்புடையதாக இல்லை. ஆகவே, மக்களின் இவ்வுரிமைகளுக்குத் தடைபோடும் போலீஸ் சட்டம் செக்சன் 27 க்கு தேவைப்படும் மாற்றங்களைச் செய்து சுதந்திரமாக கூடுதலுக்கான மக்களின் உரிமைகள் மேம்படுத்தப்படும் என்பதுதான் அக்கருத்தின் அடிப்படையாகும்.

மசோதா அந்த அடிப்படைக் கருத்தை பிரதிபலிக்கிறதா?

இல்லை என்று ஒரே சொல்லில் பதில் கூறலாம். தெருப் பேரணிகள் பல நாடுகளில் புதிய வரலாறுகளைப் படைத்துள்ளன. எடுத்துக் காட்டாக, இந்திய தண்டி மற்றும் அமெரிக்க வாஷிங்டன் பேரணிகளைக் கூறலாம். சமீபத்தில், மத்தியக்கிழக்கு பேரணிகளை மலேசிய மக்கள் கண்டுள்ளனர்.

1946 ஆம் ஆண்டில், “மலாயா மலாய்க்காரர்களுக்கே” என்று கூறும் பதாதைகளை ஏந்திக்கொண்டு தெருப் போராட்டம் நடத்தியது அம்னோதானே! அதன் பின்னர், அம்னோவும் இதர அமைப்புகளும் எத்தனையோ பேரணிகளை நடத்தியுள்ளனர். ஜூலை 9 இல் பெர்சே பேரணி நடந்ததும் இந்நாட்டில்தானே.

பிரிட்டீசார் அவர்களது ஆட்சிக்காலத்தில் தெருப் பேரணிக்கு தடை விதித்திருந்தால், அம்னோ அப்போராட்டத்தை நடத்தியிருக்க இயலுமா? ஏன், இன்றைய மலேசியாவில் தெருப் பேரணிக்கு தடை விதிக்கும் சட்டம் இருக்குமானால், பெர்சே தெருப் பேரணி நடந்திருக்குமா?

மக்கள் சுதந்திரமாக கூடுவதற்கான உரிமையை வழங்கி மலேசியாவை உலகின் மிகச் சிறந்த ஜனநாயக நாடாக்குவதற்காக போலீஸ் சட்டம் செக்சன் 27 ஐ திருத்தப் போவதாக நஜிப் கூறினார். அவர் அதனை இரட்டை அர்த்தத்தில் கூறியிருக்க வேண்டும். தெருப் பேரணிக்கு தடை இல்லை. ஆனால், தடை விதிப்பேன் என்ற அர்த்தம் கொண்டதாக இருக்கலாம். செக்சன் 27 தெருப் பேரணிக்கு தடை விதிக்கவில்லை. அதற்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் அளிக்கிறது. ஆம். மலேசியாவில் தெருப் பேரணியைத் தடை செய்யும் சட்டம் இன்று வரையில் இல்லை!

பர்மா போன்ற நாடுகள் கூட தெருப் பேரணிக்கு விதித்திருந்த முற்றான தடையை அகற்றியிருக்கின்ற காலத்தில், உலகின் மிகச் சிறந்த ஜனநாயக நாடாக மலேசியாவை உருவாக்குவதற்கு தெருப் பேரணியை அனுமதிக்கும் தற்போதைய சட்டத்தை மாற்றி தடை விதிக்கும் சட்டத்தை வரைந்துள்ளார் நஜிப்!

தடை செய்யப்பட்ட இடங்கள்

பள்ளிக்கூடம், பாலர்பள்ளி, மருத்துவமனை, வழிபாட்டுத்தலம், பெட்ரோல் நிலையம், விமான நிலையம், ரயில்வே நிலையம், பஸ் மற்றும் பொது போகுவரத்து நிலையம், பாலம், மின்சார உற்பத்தி நிலையம்,கால்வாய், துறைமுகம், நீர் சுத்திகரிப்பு மையம், அணைக்கட்டு, நீர்த்தேக்கம், நீர் சேகரிப்பு இடங்கள் போன்ற இடங்களிலிருந்து 50 மீட்டருக்குள் கூட்டம் கூடுவதற்கு ஒட்டுமொத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டு: கோலாலம்பூர் நகரில் கிள்ளான் நதி மீது அமைக்கப்பட்டுள்ள பாலத்திலிருந்து 10 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் அமைந்திருக்கும் மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் கட்டடத்தில் கூட்டம் நடத்த முடியாது! இப்போது அவ்வாறான தடை இல்லை. பிரச்னைகள் எதுவும் எழவில்லை. பிற நாடுகளில் இவ்வாறானத் தடை இல்லை.

நஜிப்பின் புதிய சட்டத்தின் கீழ் பாலைவனத்தில்தான் கூட்டம் நடத்த முடியும். ஆனால், பாலைவனத்திற்கு எங்கு போவது?

15, 21 வயதிற்கும் குறைவானவர்களுக்கு எதிரான தடை

15 வயதிற்கும் குறைவான குழந்தைகள் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கும் 21 வயதிற்கும் குறைவானவர்கள் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கும் நஜிப்பின் மசோதா தடை விதிக்கிறது.

இத்தடை மலேசியாவின் அனைத்துலக கடப்பாட்டை மீறுகிறது. மலேசியா சிறுவர்களின் உரிமைக்கான ஒப்பந்த (சிஆர்சி) உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும்.

ஜூன் 6, 2010 இல், மலேசியா சிஆர்சி பிரிவுகள் 1, 13 மற்றும் 15 ஆகியவற்றுக்கு எதிரான அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு குழந்தைகள் “அவர்களின் கருத்தைக் கொண்டிருக்கவும் மன்றங்கள் அமைப்பதற்கு மற்றும் அமைதியாக கூடுவதற்கான உரிமையைப் பெற்றிருக்கவும்” அனுமதித்தது.

உலகளவில் சிறுவர்களின் உரிமைகளை ஏற்றுக்கொண்ட பின்னர், ஏன் இப்போது மலேசிய சிறுவர்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது?

கூட்டத்திற்கான கட்டுப்பாடுகள்

மக்கள் கூடும் கூட்டங்களில் ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்னைகளைக் கையாள்வதற்காக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. ஆனால் அவை அனைத்தும் கூட்டத்தை நடத்தவிடாமல் செய்வதற்காக அல்ல.

ஆனால், இதர நாடுகளின் சட்டங்களில் காணப்படாத கட்டுப்பாடுகள் இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், போலீஸ் ஒசிபிடிக்கு விரிவான விருப்பப்படி செயல்படுவதற்கான அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

கூட்டம் குறித்து தெரிவித்தல்

மலாயாவை என்றுமே ஆட்சி செய்திராத (நமது வரலாற்று பேராசியர்கள் சிலரின் மூளைக்கு எட்டியவரையில்) பிரிட்டனில் கூட்டம் நடத்துவதற்கு போலீசாரிடம் தெரிவிக்க வேண்டியதில்லை. தெருப் பேரணி நடத்துவதற்கு போலீசாரிடம் 6 நாள் அறிவிப்பு கொடுக்க வேண்டும். ஐரோப்பா, பின்லாந்து நாட்டில் கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாட்டாளர் உள்ளூர் போலீசாரிடம் குறைந்தது 6 மணி நேரத்திற்கு முன் தெரிவித்தால் போதுமானதாகும்.

மலேசியாவை உலகத் தரத்திற்கு இட்டுச் செல்லப்போவதாக செப்டெம்பரில் கூறிய நஜிப்,  கூட்டம் நடத்துவதற்கு 30 நாள் அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்று நவம்பரில் சட்டம் வரைந்துள்ளார்.

போலீஸ் அதிகாரம்

கூட்டம் ஏன்? எங்கு, எப்போது நடத்தப்பட வேண்டும் என்பது போன்றவற்றை தீர்மானிப்பது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்பவரின் பொறுப்பு. நாகரீகமடைந்துள்ள நாடுகளில் போலீசார் இது போன்ற விவகாரங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சட்டங்கள் விவரிக்கின்றன.

மலேசியாவில் நஜிப் வரைந்துள்ள மசோதாவில் போலீசார் கூட்டம் நடக்கும் தேதி, நேரம், நீடிக்கும் காலம் மற்றும் இடம் ஆகியவற்றை மாற்றலாம். மேற்கொண்டு, போலீசாருக்கு சரி என்று தோன்றும் இதர நிபந்தனைகளையும் விதிக்கலாம்.

போலீசாரின் உத்தரவுக்கு கீழ்ப்படியாத ஏற்பாட்டாளர் மற்றும் பங்கேற்பாளர்கள் கைது செய்யப்படலாம்; கூட்டம் கலைக்கப்படலாம். கைது செய்யப்பட்டவர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டால், ரிம10,000 வரையில் அபராதம் விதிக்கப்படலாம்.

கூட்டத்தைக் கலைப்பதற்கு போலீசார் “அனைத்து நியாயமான பலாத்காரம்” பயன்படுத்தலாம். கலைந்து செல்லுமாறு போலீஸ் விடுக்கும் உத்தரவை மீறியவர் குற்றம் புரிபவராவார். குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ரிம20,000 மேற்போகாமல் அபராதம் விதிக்கப்படலாம். ஆனால், “அனைத்து நியாயமான பலாத்காரம்” என்றால் என்ன என்பதை நஜிப்பின் மசோதா விளக்கவில்லை.

மலேசியர்கள் கால்நடைகளா?

பல தெருப் பேரணிகளை நடத்தி வரலாறு படைத்திருக்கும் அம்னோ தெருப் பேரணி நடத்துவதற்கு சட்டப்படி தடை ஏதும் இல்லை என்ற நிலையிலும், அது விரும்பாதாக, அதற்கு பாதகம் விளைவிக்கும் என்று கருதும் தெருப் பேரணியை நிறுத்த போலீஸ் படையை ஏவி விட்டதை ஜூலையில் மலேசிய மக்கள் கண்டனர். உலக மக்கள் கண்டனர். எலிசபெத் அரசி மஞ்சள் உடையில் மலேசிய பிரதமர் நஜிப்பை வரவேற்றார். வத்திக்கானிலும் போப்பாண்டவர், நஜிப்பை மஞ்சள் அறையில் சந்தித்தார்.

அம்னோ அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தெருப் பேரணிகள் வெளிப்படையாக காட்டுவதோடு அப்பேரணிகள் மக்களின் எதிர்ப்புணர்வுகக்கு உரமூட்டுவதாக இருப்பதை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் இந்தப் புதிய அமைதியாகக் கூடுதல் சட்ட மசோதா 2011 ஐ பிரதமர் நஜிப்பின் அரசாங்கம் வரைந்துள்ளது.

மக்களின் குரலை நசுக்கி, அவர்களின் கால்களை சூம்பச் செய்து விடலாம் என்ற நோக்கத்தில் வரையப்பட்ட இந்த மசோதா மக்களின் குரலுக்கு வலுவூட்டி அவர்களைத் தெருவில் இறக்கி விட்டுள்ளது. நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட பல கூட்டங்களில் இம்மோசாதாவுக்கு எதிராகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 29 இல், நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் நாடாளுமன்றத்தின் முன் கூடி இம்மசோதாவுக்கு எதிராகத் தங்களுடைய ஆட்சேபத்தைத் தெரிவித்தனர்.

“நாடாளுமன்ற உறுப்பினர்களே, மக்களின் குரலுக்கு செவிசாயுங்கள். தெருப் பேரணி மக்களின் உரிமை. அதைப் பறிக்காதீர்”, என்று வழக்குரைஞர்களின் பேரணியை நாடாளுமன்றத்திற்கு இட்டுச் சென்ற அம்மன்றத்தின் தலைவர் லிம் சீ வீ கூறினார்.

“இம்மசோதா சட்டமாகக் கூடாது. நாங்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருப்போம்”, என்று வீ சூளுரைத்தார்.

வழக்குரைஞர்களின் பேரணி தொடங்குவதற்கு முன்னதாக, லேக் கார்டனில் கூடியிருந்த வழக்குரைஞர்கள் மற்றும் இதர ஆர்வலர்களிடம் பேசிய மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் இயோ யாங் போ, “கட்டிவைக்கப்பட்டுள்ள இடத்தில் நின்று கொண்டிருப்பதற்கு மலேசிய மக்கள் கால்நடை அல்ல” என்று அம்மசோதாவின் நோக்கம் குறித்து விளக்கியபோது கூறினார்.

இம்மசோதாவின் அடிப்படை நோக்கம் தவறானது என்பதை விளக்கிய அவர், இது போன்ற சட்டத்தை பிரிட்டீசார் 1940-1950களில் அமலாக்கியிருந்தால், சுதந்திரம் கிடைத்திருக்குமா என்பதைச் சிந்திக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பிரதமர் நஜிப், அனைத்துலகத் தரம் குறித்து பேசினார். ஆனால், சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லை என்று வழக்குரைஞர் மன்றத்தின் செயலாளர் டோனி வூன் இயோவ் தோங் இடித்துரைத்தார்.

நஜிப்பை நம்பக்கூடாது என்பதற்கு சான்று

பாரிசான் அரசாங்கத்தின் எஜமானர்களான அம்னோ தலைவர்களின் கூற்றுப்படி  அவர்கள் என்ன விரும்புகிறார்களோ, என்ன செய்கிறார்களோ, அதுதான் உலகின் மிகச் சிறந்ததாகும். அது தரத்தில் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதோ கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதோ அவசியம் இல்லை.

மேலும், தோல்வி பயம் அவர்களைக் குருடர்களாகவும் கோணல்புத்தி படைத்தவர்களாகவும் மாற்றியுள்ளது.

இப்புதிய சட்ட மசோதா 2011 உருமாற்றுவாதியான பிரதமர் நஜிப் ரசாக் எந்த அளவிற்கு நம்ப முடியாதவர் என்பதைப் பளீர் என்று பறைசாற்றுகிறது. அவர் சொல்வது ஒன்று, செய்வது வேறொன்று என்பதற்கு இம்மசோதா ஆணித்தரமான சான்றாகும்.

“FREEDOM IS WHEN PEOPLE CAN SPEAK, DEMOCRACY IS WHEN THE GOVERNMENT LISTENS”, Alastair Farrugiah