துன் டாக்டர் மகாதீர் பிரதமராக பொறுப்பேற்வுடன் முதல் வேலையாக டோமி தோமஸை புதிய சட்டத்துறைத் தலைவராக நியமித்தார்.
முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போல பழைய அரசாங்கதின் ஊழல்களை கண்டும் காணாததைப் போல இருந்த அப்போதைய சட்டத்துறைத் தலைவர் தான்ஸ்ரீ அப்பாண்டியை பதவியில் இருந்து மகாதீர் நீக்கினார்.
அதனைத் தொடர்ந்து பதவியில் அமர்ந்த டோமி தோமஸ் மகாதீரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக மிகவும் உற்சாகமாக தமது இலாகாவை வழி நடத்தத் தொடங்கினார்.
எனினும் குறிப்பிட்ட சில விசாரணைகள் தொடர்பாக அவருடைய அலுவலகம் செய்த முடிவுகளினாலும் மந்த நிலையிலான போக்கினாலும் மக்கள் இப்போது அதிருப்தி அடையத் தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக ஜாக்கிர் நாயக் விவகாரம். கிளந்தானில் இனத்துவேசக் கருத்துக்களை வெளியிட்ட அவருக்கு எதிராக நாடு முழுவதும் 100கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டன. அதன் தொடர்பில் அவரை 15 மணி நேரங்களுக்கு மேல் துருவித்துருவி விசாரித்த போலீஸார் விசாரணை அறிக்கையை சட்டத்துறை அலவலகத்திற்கு அனுப்பினர். இது நடந்து தற்போது பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் அந்த கோப்பு அங்கிருந்து நகராமலே இருப்பது வியப்பாகத்தான் உள்ளது.
அதே போல ஜாக்கிரின் சீடர் ஸம்ரி விநோத் தொடர்பான விசாரணையும் அந்த அலுவலகத்தில் பிசுபிசுத்துப் போனது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என செய்யப்பட்ட அறிவிப்பு மக்களை விரக்தியடையச் செய்துள்ளது.
இதற்கிடையே டோமி தோமஸுக்கு எதிராக அவருடைய அலுவலகத்திலேயே சில கீழறுப்பு வேலைகள் நடப்பதாகவும் தெரிகிறது. பி.கே.ஆர். கட்சியின் உதவித் தலைவர் ரஃபிஸி ரம்லி தொடர்பான ஒரு வழக்கில் அரசாங்கம் அப்பீல் செய்யாது என டோமி தோமஸ் அறிவித்திருந்த போதிலும் அவருக்குத் தெரியாமலேயே இதர அதிகாரிகள் அப்பீலை பதிவு செய்தது அவருக்கே பேரதிர்ச்சிதான்.
ஊழல் தடுப்பு
அதே போல்தான் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் கூட. பழைய அரசாங்கத்தில் நஜிப்பின் கைப்பாவையாக முடங்கிக் கிடந்த அந்த ஆணையம் ஆட்சி மாறியவுடன் வீறுகொண்டெழுந்து செயல்படத் தொடங்கியது நமக்கெல்லாம் புது நம்பிக்கையைக் கொடுத்தது. அதன் புதியத் தலைவராக வழக்கறிஞரும் சமூகவாதியுமான லத்திஃபா கோயா நியமனம் பெற்றது அந்த ஆணையத்திற்கு மேலும் மெருகூட்டியது.
சூட்டோடு சூடாக பல பெரும் புள்ளிகளை வளைத்துப் பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்திய ஊழல் தடுப்பு ஆணையம் தற்போது கொஞ்சம் நித்திரையில் இருப்பதாகத் தெரிகிறது.
கணக்கிலடங்கா ஊழல்வாதிகளைக் கொண்டிருந்த பழைய அரசாங்கத்தைச் சேர்ந்த நிறைய பேர் ஒன்றுமே நடக்காததைப் போல இன்னமும் உல்லாசமாக நாட்டை வலம் வந்துகொண்டிருப்பது மக்களுக்கு ஏமாற்றம்தான். சுதந்திரமாக செயல்பட வேண்டிய இந்த ஆணையத்திலும் தற்போது அரசியல் தலையீடு இருக்குமோ என எண்ணத் தோண்றுகிறது.
போலீஸ் படையிலும் அதே நிலைதான். பதவி ஓய்வுபெற்று தமது காய்கறி தோட்டத்தில் பொழுதை கழித்துக்கொண்டிருந்த அப்துல் ஹமிட் படோரை அதிரடியாக போலீஸ் படைத் தலவராக்கினார் மகாதீர்.
3 ஆண்டுகளுக்கு முன் தமக்கு எதிராக கேள்வி எழுப்பிய ஹமிட் படோடரை அப்போதைய பிரதமர் நஜிப் பதவியிறக்கம் செய்து பிரதமர் இலாகாவுக்கு மாற்றியது குறிப்பிடத்தக்கது.
நஜிபின் கைப்பாவைகளாக விளங்கிய முன்னாள் போலீஸ் படைத் தலைவர்களான தான்ஸ்ரீ அப்துல் காலிட் மற்றும் தான்ஸ்ரீ ஃபூஸி ஹருனோடு ஒப்பிடும் போது தான்ஸ்ரீ அப்துல் ஹமிட் பாடோர் மிகவும் நேர்மையான பாரபட்சமற்ற போலீஸ் அதிகாரி என்ற புகழுக்குறியவர்.
எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இவரும் சுறுசுறுப்பாகத்தான் தமது பணிகளைத் தொடக்கினார். ஆனால் அண்மைய காலமாக அவருடைய இலாகாவிலும் கொஞ்சம் குளறுபடிகள் நிகழுவதை மக்கள் உணரத்தான் செய்கின்றனர்.
12 இந்தியர்கள்
குறிப்பாக சொஸ்மா சட்டத்தின் கீழ் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட 12 இந்தியர்கள் கொடூரமான வகையில் சிறையிலடைக்கப்பட்டது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நடவடிக்கைக்கும் அரசியல் பிண்ணனி இருக்கக்கூடும் என பல வதந்திகள் நிலவுகின்றன.
இதனைத் தவிர்த்து இஸ்லாம் மதத்திற்கு மாறிய முன்னாள் கணவரால் கடத்திச் செல்லப்பட்ட தமது குழந்தையை 11 ஆண்டுகளாக காணத் துடிக்கும் பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்திக்கும் இன்னும் விடிவுகாலம் பிறக்கவில்லை.
படு பயங்கரமான குற்றவாளிகளையெல்லாம் மிக எளிதில் வளைதுப் பிடிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ள மலேசியப் போலீஸ் படைக்கு இவர் விஷயத்தில் மட்டும் ஏன் சுணக்கம் என்று தெரியவில்லை.
3 ஆண்டுகளுக்கு முன் பட்டப்பகலில் கடத்திச் செல்லப்பட்ட கிருஸ்துவ மத போதகர் ரேய்மன் கோ மற்றும் மர்மமான வகையில் காணாமல் போன சமூகவாதி அம்ரி சே மாட் போன்றோரின் நிலையும் அப்படிதான்.
3 இந்தியர்கள்
கடந்த செப்டம்பர் மாதத்தில், சிலாங்கூர் பத்து ஆராங்கில் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் 3 இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையும் நாம் நினைவுகூறத்தான் வேண்டும். அந்த மூவரில் ஒருவருடைய மணைவி மோகனாம்பால் அந்த சமயத்தில் அவர்களுடன்தான் இருந்தார். ஆனால் இதுநாள் வரையில் அவரைக் காணவில்லை என்ற விஷயத்திலும் போலீஸ் தரப்பில் மெத்தனப் போக்குதான்.
இதற்கிடையே புது பொலிவு பெற்றுள்ள தேர்தல் ஆணையத்தின் மீதும் மக்கள் சற்று அதிருப்தி கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு மே 9ஆம் தேதி இரவு பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது, தேர்தல் ஆணையத்தின் அப்போதையத் தலைவர் முஹமட் ஹஷிம் காட்டிய கூத்தை நாம் மறந்திருக்க முடியாது.
ஒட்டு மொத்த மக்களின் சினத்துக்குள்ளான அவரை தேர்தலுக்குப் பின் நீக்கிய மகாதீர் பிரபல சமூகவாதியும் வழக்கறிஞருமான அஸஹார் ஹருனை புதியத் தலைவராக நியமனம் செய்தார்.
பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஒன்றன் பின் ஒன்றாக நடைபெற்ற அத்தனை இடைத் தேர்தல்களிலும் சிறப்பாகவே செயலாற்றிய அந்த ஆணையத்தின் மீது கடைசியாக நடைபெற்ற தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலின் போது மக்கள் சற்று அதிருப்தி கொண்டனர்.
வெட்ட வெளிச்சத்தில் பக்காத்தான் அரசாங்கத்தின் தன்மூப்பான தேர்தல் விதி மீறல்களை அந்த ஆணையம் கண்டும் காணாததைப் போல இருந்ததுவே இதற்கு காரணமாகும்.
நேர்மையான, மிகத் தெளிவான சிந்தனையாளரான அஸஹார் தலைமையில் இத்தகைய ஒரு போக்கை மக்கள் எதிர்பார்க்கவில்லை.
ஆக அரசாங்க நிறுவனங்கள் மற்றும் இலாகாக்களின் இத்தகைய சுணக்கப் போக்கு அனைத்துக்குமே பெரும்பாலும் அரசியல் தலையீடே காரணம் என்று பரவலாக எண்ணும் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பது பக்காத்தான் அரசாங்கத்தின் தலையாயக் கடமையாகும்.
கருப்பையா அவர்களே, ஏன் எப்போதும் மஹாதிரை எதிர்த்தே எழுதிறீங்க..
மாண்புமிகு பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது நினைத்து நினைத்து ஒவ்வொன்றாக பேசுகின்றார்.அடிக்கடி பேசுவது முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது.அவருக்கு பதவி மோகம் அதிகரித்து விட்டது. டத்தோ சிறீ அன்வாரிடம் ஆட்சியை ஒப்படைக்க மாட்டார் போல் இருக்கிறது.