புதிய அவதாரம் எடுக்கும் நித்யா மேனன்

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் நித்யா மேனன், புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார் நித்யாமேனன். எல்லா மொழியிலும் அவரே டப்பிங் பேசுகிறார். இப்போது பாடகி அவதாரமும் எடுத்துள்ளார். அவரது பாடல் ஆல்பத்தை விரைவில் வெளியிட இருக்கிறார்.

நித்யா மேனன் அளித்த பேட்டி வருமாறு:- சிறுவயதிலேயே எனக்கு பாட பிடிக்கும். அது இப்போது நிறைவேறி இருக்கிறது. எனது முதல் இசை பாடல் ஆல்பம் விரைவில் வெளியாக இருக்கிறது. எனக்கு 4 மொழிகள் தெரியும். கார்ட்டூன் படங்கள் மிகவும் பிடிக்கும். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை இருக்கிறது. இயக்குனர் ஆக வேண்டும் என்பது கனவு. எப்படியும் இயக்குனர் ஆகிவிடுவேன்.

சினிமாவில் பெரும்பாலும் கதாநாயகனை மையமாக வைத்தே படங்கள் எடுக்கிறார்கள். அந்த மாதிரி படங்களில் நடிப்பதை விட புதுமாதிரியான நல்ல கதைகளில் நடிக்க விரும்புகிறேன். சினிமாவில் 2 ஆடல் பாடல் காட்சிகளில் வருவது மலையேறிவிட்டது. ரசிகர்களே அதை ஒதுக்கி விட்டார்கள். அதுமாதிரி படங்களை ஒப்புக்கொண்டு இருந்தால் எனது கணக்கில் நிறைய படங்கள் சேர்ந்து இருக்கும்.

கதாநாயகிகளுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பதாக பேசுகின்றனர். எனது சினிமா வாழ்க்கையில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை. அதனால் எல்லோருக்கும் நடக்காது என்று நான் சொல்ல வரவில்லை. நாம் எப்படி இருக்கிறோமோ? அதுபோல் நம்மை சுற்றி இருப்பவர்களும் நம்மிடம் நடந்து கொள்வார்கள்.”

இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.