4 காசு சம்பாதிக்க வேண்டுமென்ற நினைப்பில் படம் எடுக்க வருபவர்கள் ஒரு புறம்.
4 பேருக்கு நல்ல விஷயத்தைச் சொல்வோமே என்று ஒரு துடிப்பில் படம் எடுக்க களமிறங்குபவர்கள் மறுபுறம்.
2ம் ரகத்தில் மாறன், அவரின் சமூக அக்கறைக்கு தலைவணங்கலாம். கை குலுக்கி கவுரவிக்கலாம்.
சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார் மாறன். பேராசிரியர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி ‘பச்சை விளக்கு’ படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்து இருக்கிறார்.
முதல் படத்திலேயே சாலை விழிப்புணர்வு என்ற முக்கியமான களத்தை கையில் எடுத்ததற்கு பாராட்டுகள். முதல் பாதி – சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் முக்கியத்துவம். 2ம் பாதியில் செல்போனால் ஏற்படும் தீமை குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு. பொழுதுபோக்கு சினிமாவில் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் முயற்சி. பாராட்டுக்கள்.
டிஜிதிங் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் மணிமேகலை தயாரிப்பு. பாதுகாப்பு இல்லாத பயணமும், முறையற்ற காதலும் வாழ்க்கையில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்பது தான் படத்தின் கதை.
அறிமுக ஹீரோயின் தீஷா, வில்லனாக நடித்திருக்கும் ஸ்ரீமகேஷ், இமான் அண்ணாச்சி, தாரா, மனோபாலா, நெல்லை சிவா குறைசொல்ல முடியாது.
4 வழிச்சாலைகளில் இடது புறம் இருக்கும் லைனில் வாகனங்கள் போக கூடாது, அந்த லைன் எதற்காக என்பது உள்ளிட்ட மக்கள் அறியாத போக்குவரத்து விதிமுறைகள் பற்றி எடுத்துரைத்த விதம் சபாஷ்!வேதம் புதிது தேவேந்திரன் இசை, பாலாஜி ஒளிப்பதிவு.