முஹிடினின் அமைச்சரவை அவரைக் காக்குமா அல்லது வீழ்த்துமா?

இராகவன் கருப்பையா – நாட்டின் 8ஆவது பிரதமராக நியமிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்துவிட்ட நிலையில் தான்ஸ்ரீ முஹிடின் யாசின் இன்னும் தமது அமைச்சரவையை அறிவிக்காதது மக்களிடையே பலதரப்பட்ட ஆரூடங்களுக்கு வித்திட்டுள்ளது.

தேசிய கூட்டணி (Perikatan Nasional) என்ற இவரின் இந்த புதிய ஒருங்கிணைப்பில் தேசிய முன்னணி, பாஸ், பிளவுபட்ட பிகேஆர் மற்றும் பெர்சத்து நாடாளுமன்ற நபர்கள் உள்ளனர்.

பெரும்பான்மையற்ற வகையில் செய்யப்பட்டதாக கருதப்படும் இந்த நியமனத்தை தற்காற்க வேண்டுமானால் புதிய அரசியல் வியூகம் தேவை என்பதை முஹிடின் அறிந்துள்ளார்.

மேலும் அச்சுருத்திக்கொண்டிருக்கம் கோவிட்-19 தொற்று நோய் மலேசியாவில் திடீரென தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது ஒருவகையான அரசியல் கேடயத்தை முஹிடினுக்கு வழங்கியுள்ளதாக கருதலாம்.

மக்களின் சிந்தனை நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற கடமையுணர்வுக்கும் – அரசியல் நாடாகங்களுக்கும் இடையே சிக்கியுருப்பதை நிலவும் ஒரு வகையான அரசியல் அமைதி மூலம் உணர முடிகிறது.

நம்பிக்கை மோசடி, ஊழல் மற்றும் பணச் சலவை உள்பட மொத்தம் 47 குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் எதிர்நோக்கியுள்ள அம்னோ தலைவர் அஹமட் ஸாஹிட்டிற்கு துணைப் பிரதமர் பதவி வழங்கப்படாது.

திரை மறைவில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறபோதிலும், தமக்கு அமைச்சரவையில் நியமனம் வேண்டாம் என ஆகக் கடைசியாக அவர் அறிவித்துள்ளதானது அவருக்கு கிடைக்காது என்பதை உறுதி செய்வதாக எடுத்துக்கொள்ளலாம்.

அம்னோவின் முன்னாள் உதவித்தலைவரான ஹிஷாமுடினுக்கும் அந்தப் பதவியின் மீது ஒரு கண் என்பதும் நாம் அறிந்த ஒன்றுதான்.

நாடாளுமன்றத்தில் வெறும் 18 உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருக்கும் பாஸ் கட்சியின் ஒரு சாரார் தங்களுடைய தலைவர் ஹாடி அவாங்கிற்கு அந்தப் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

நாட்டில் இஸ்லாமிய ஹூடுட் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அடம்பிடித்துக் கொண்டிருக்கும் அந்தக் கட்சி, அரசாங்கத்தில் முடிவெடுக்கக்கூடிய முக்கியமான பதவிகளில் இஸ்லாமியர்கள்தான் இருக்க வேண்டும் என்ற இனவெறிக் கொள்கையை ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறது.

எனவே மலாய் தேசியத்தை அடிப்படையாக கொண்ட முஹிடினுக்கு இது மிகவும் சவால் மிக்க ஒரு தலைவலிதான்.

ஆனால் ‘அமைச்சரவையில் எனக்கு இடமில்லை என்றால் பரவாயில்லை, நான் மீண்டும் மீனவனாகிவிடுவேன்’ என ஹாடி அவாங் குறிப்பிட்டுள்ளது, அவருக்கு அந்த பதவி இல்லை என்பதாகும்.

இந்நிலையில் நாட்டில் நிலவும் அரசியல்  குழப்பங்களுக்கும் மூலக்காரணம் என்று கருதப்படும் பி.கே.ஆர். கட்சியின் முன்னாள் துணைத் தலைவரான அஸ்மின் அலியையும் முஹிடின் உதாசினப்படுத்திவிட முடியாது.

அந்தக் கட்சியிலிருந்து பிரிந்து  மொத்தம் 11 நாடாளுமன்ற உறுப்பிணர்களை தன் வசம் வைத்திருக்கும் அஸ்மினும் கூட துணைப் பிரதமராவதற்கு கங்கணம் கட்டியிருப்பதாக நம்பப்படுகிறது.

இதற்கிடையில் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிருபிக்க வேண்டுமானால், முஹிடின் இன்னும் அதிகமானவர்களை தனது தேசிய கூட்டணியில் சேர்க்க வேண்டும். அதற்காக அவர் மகாதீரை நாடுவதாகவும் அதோடு இதர அமைச்சர்களை நியமனம் செய்ய பிகேஆர் கட்சியில் இருப்பவர்களையும் நாடுவதாக தெரிகிறது.

முஹிடினுக்கு பெரும்பான்மை இல்லை, அவர் சிறுபான்மை அரசாங்கத்தைதான் நிர்வாகம் செய்கிறார் என பக்காத்தானில் உள்ள கூட்டணிக் கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் வேளையில், அவருக்கு இருக்கும் நிலைப்பாடுகள் இப்படியும் இருக்கலாம்.

அதாவது, கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் பெரும்பான்மையினர் ஏற்றுக்கொள்ளும் வகையில் தரமான நபர்களை இடைக்கால அமைச்சரவையில் இடம் பெற வழிவகுத்தல். அதன்வழி  அடுத்த தேர்தல் வரை நாட்டை ஆட்டம் காணாமல் வழி நடத்துதல்.

அல்லது, தனது தேசிய கூட்டணியில் பேரம் பேசி, பெரும்பான்மையை பெற இன்னும் சிலரை ஆசை காட்டி அமைச்சரவையை உருவாக்கி அடுத்த தேர்தல் வரை ஒரு கீழ்தரமான அரசியலை நடத்தலாம்.

அல்லது, முறைபடி அனைத்தையும் செய்து, பெரும்பான்மை வாக்கெடுப்பில் வெற்றி பெறாத சூழலில் ஆட்சியை கவிழ்த்து விட்டு மீண்டும் பொதுத் தேர்தலுக்கு போகலாம்.