அசுரகுரு – விமர்சனம்

கொரியர் வேலை பார்க்கும் விக்ரம் பிரபுவும், காவல்துறையில் கிரைம் பிரிவில் வேலை பார்க்கும் ஜெகனும் நெருங்கிய நண்பர்கள். விக்ரம் பிரபுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. தலைவலி வரும் போதேல்லாம் வெளியில் சென்று பெரிய தொகையை திருடிவிட்டு வருகிறார்.

அப்படி ஒருநாள் ஹவாலா பணத்தை திருடுகிறார். இந்த விஷயம் போலீசுக்கு போகாமல் டிடெக்டிங் ஏஜென்சியில் பணி புரியும் மகிமா நம்பியாரிடம் செல்கிறது. அவரும் தீவிர விசாரணையில் இறங்குகிறார். வங்கியில் திருடிய பணத்திற்காக விக்ரம் பிரபுவை போலீஸ் ஒரு பக்கம் தேடுகிறது.

ஒரு கட்டத்தில் மகிமா, ஹவாலா பணத்தை கொள்ளையடித்தது விக்ரம் பிரபு என்று தெரிந்துக் கொள்கிறார். இறுதியில் விக்ரம் பிரபுவை போலீசில் மகிமா சிக்க வைத்தாரா? கொள்ளையடித்த பணத்தை விக்ரம் பிரபு என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விக்ரம் பிரபு, தனக்கே உரிய பாணியில் நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் மெனகெட்டிருக்கிறார். நாயகியாக வரும் மகிமா, துணிச்சலான கதாபாத்திரத்தை அழகாக கையாண்டிருக்கிறார். நண்பராக வரும் ஜெகன், இரண்டு மூன்று காட்சிகளில் மட்டும் வரும் யோகி பாபு, இருவரும் கொடுத்த வேலை செய்திருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் சுப்பராஜ் நடிப்பில் பளிச்சிடுகிறார்.

நாயகன்கள் கொள்ளையடித்து பணம் சேர்க்கும் படங்களின் வரிசையில் இப்படமும் அமைந்திருக்கிறது. கொஞ்சம் மாறுபட்ட கோணத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ராஜ்தீப். திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால், கூடுதலாக ரசித்திருக்கலாம். ஜெகன், யோகிபாபு ஆகியோரை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்கலாம்.

கணேஷ் ராகவேந்திரா இசையில் பாடல்களையும், பின்னணி இசையும் ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு சிறப்பு.

maalaimalar