கோவிட்-19: மருத்துவர்களின் சேவை அளப்பரியது!

இராகவன் கருப்பையா – அனைத்துலக ரீதியில் மிக அதிக அளவில் தற்போது உச்சரிக்கப்படும் ஒரு சொல்லென்றால் அது ‘கொரோனா’.

உலகம் முழுவதும் 8,000திற்கும் மேற்பட்டோரை பலிகொண்டுள்ள கொரோனா அல்லது கோவிட்-19 எனும் இந்த கொடிய நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

இருந்த போதிலும் அந்த தொற்றுநோய் தொடர்ந்து சீரழிவுகளை ஏற்படுத்தாமல் இருப்பதற்கும் அதனை கட்டுப்படுத்துவதற்கும் அல்லும் பகலும் போராடும் பல்லாயிரக்கணக்கான மருத்துவ பணியாளளர்களின் அளப்பரிய சேவைகளை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.

டாக்டர்கள், தாதியர், உதவியாளர்கள் மற்றும் அம்புலன்ஸ் ஓட்டுனர்கள் போன்ற எல்லாருமே ஆபத்தானதொரு சூழ்நிலையில்தான் தங்களுடைய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனெனில் நோயாளிகளை கையாளும் வேளையில் எந்த வினாடியிலும் அந்த கொடிய வைரஸ் அவர்களை தொற்றிக்கொள்ளக் கூடிய வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

இந்த வைரஸ் தொடக்கத்தில் பரவ ஆரம்பித்த சீனாவின் வூஹான் மாகானத்தில் அதிக அளவிளான டாக்டர்களும் தாதியரும் பரிதாபமாக மரணித்ததை நாம் இங்கு நினைவுக் கூறத்தான் வேண்டும்.

ஆக இரவு பகல் பாராமல் ஊன் உறக்கமின்றி தங்களுடைய உயிரைக்கூட துச்சமென மதித்து நோயாளிகளின் பாதுகாப்பையும் நலனையும் மட்டுமே முன்னிலைப்படுத்தி நற்சேவையாற்றும் நம் மருத்துவ பணியாளர்களுக்குத் தலை வணங்குவதில் பெருமையடைய வேண்டும்.

மருத்துவத் துறையை புரட்டிப்போட்டு இன்று உலக அறிவியலை அதிரவைத்துக் கொண்டிருக்கும் இந்த கொடிய நோய் இவ்வட்டாரத்தில் மலேசியாவில்தான் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென முளைத்த இந்த சவாலை எதிர்கொள்ள போதிய அனுபவம் இல்லாத போதிலும் மிகத்துணிச்சலாக களத்தில் இறங்கி சற்றும் தயக்கமின்றி மனுக்குலத்திற்கு போராடும் நமது மருத்துவப் பணியாளர்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

இதற்கிடையே இந்த கொடிய நோயை கட்டுப்படுத்த நமது அரசாங்கம் ஆக்ககரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக மலேசிய மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் பாஸ்கரன் கூறினார்.

நாடளாவிய நிலையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும்  டாக்டர்கள் ஆற்றிவரும் உன்னத சேவைகளை பாராட்டிய அவர், பொது மக்களின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார்.

டாக்டர்களின் ஆலோசனைகளை பொது மக்கள் அணுக்கமாக பின்பற்றி முழு ஒத்துழைப்பு வழங்கினால் நாடு நோக்கியுள்ள இந்த மாபெரும் மருத்துவ சவாலை சமாளிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்கிறார் பாஸ்கரன்.