முககவசம் அணிந்து திருமணத்தை நடத்தி வைத்த விஜயகாந்த்

மக்கள் ஊரடங்குக்கு மத்தியில் முககவசம் அணிந்து கட்சி பிரமுகரின் மகன் திருமணத்தை விஜயகாந்த் நடத்தி வைத்தார்.

சென்னை : கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் ஊரடங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று நாடு முழுவதும் நேற்று மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

மக்கள் நடமாட்டம் இன்றி சென்னை நகரமே பாலைவனம் போல வெறிச்சோடியது. தே.மு.தி.க. மாநில தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் ஆர்.வேணுராம் மகன் விமல்குமார் மற்றும் கமலி ஆகியோருடைய திருமணம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் நடத்துவதற்கு அவர்களுடைய குடும்பத்தினர் முடிவெடுத்தனர். இதற்காக 2 வீட்டாரும் பத்திரிகைகள் அச்சடித்து, தங்களுடைய உற்றார், உறவினர்களுக்கு மகிழ்ச்சி ததும்ப கொடுத்தனர்.

இதற்கிடையே மக்கள் ஊரடங்கை பிரதமர் அறிவித்ததால், விமல்-கமலி ஆகியோரின் திருமணம் திட்டமிட்டப்படி நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் 2 வீட்டாரும் கவலையில் உறைந்தனர். இந்த தகவல் தே.மு.தி.க. தலைவரான விஜயகாந்துக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து எந்த காரணம் கொண்டும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தடை படக்கூடாது என்பதில் விஜயகாந்தும், அவருடைய மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதாவும் உறுதியாக இருந்தனர்.

விமல்குமார்-கமலி ஆகியோரின் திருமணத்தை, தன்னுடைய வீட்டில் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் நடத்தி வைத்தனர். இதற்காக விஜயகாந்த் வீட்டில் சாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது. பாரம்பரிய முறைப்படி மணமகன் விமல்குமார் பட்டு வேட்டி சட்டையும், மணமகள் கமலி சேலையும் அணிந்திருந்தார். மந்திரங்கள் முழங்க, மேள, தாளத்துடன் விமல்குமார்-கமலி ஆகியோருக்கு திருமணம் நடந்தது. விஜயகாந்த் மணமக்களுக்கு தாலி எடுத்து கொடுத்தார். இதையடுத்து விஜயகாந்த், பிரேமலதா, தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி உள்பட நிர்வாகிகள் மணமக்களை வாழ்த்தினர்.

மணமக்கள், அவர்களுடைய உறவினர்கள், விஜயகாந்த், பிரேமலதா, எல்.கே.சுதீஷ், புகைப்படகலைஞர்கள், மேள, தாளம் இசைப்பவர்கள் என அனைவரும் முகக்கவசம் (மாஸ்க்) அணிந்திருந்தனர். முககவசம் அணிந்தப்படியே மணமக்களும் விஜயகாந்த், பிரேமலதா மற்றும் உறவினர்கள் உடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கு முகக்கவசம் மற்றும் ‘சானிடைசர்’ என்ற கிருமி நாசினி வழங்கப்பட்டது.

பொதுவாக தங்கள் குடும்ப திருமணங்கள் ‘மாஸ்’ ஆக நடைபெற்றதாக உற்றார், உறவினர்களிடம் சொல்லி பெருமைப்படுவார்கள். ஆனால் கொரோனா வைரசால் விமல்குமார்-கமலி தம்பதியரின் திருமணம் ‘மாஸ்க்’ அணிந்து ‘மாஸ்’ ஆக நடந்தது. மக்கள் ஊரடங்குக்கு மத்தியில் விஜயகாந்த் வீட்டில் நடந்த இந்த திருமணம் ருசிகரமாக அமைந்தது.

dailythanthi