மலேசிய மண்ணில் தமிழுக்காக வாழ்ந்த அறிஞர்கள் – பகுதி 3

சிவா லெனின் | நம் நாட்டில் தமிழுக்காக தம்மை ஈகம் செய்தத் தமிழறிஞர்களின் எண்ணிக்கை ஒரு வட்டத்திற்குள் வரையறுத்திடலாகாது. தங்களின் வாழ்நாளின் பெரும் பகுதியை மொழிக்காகவும் இனத்திற்காகவும் பாடாற்றியத் தமிழறிஞர்களில் தமிழ்க்குயிலார் எனப் போற்றப்படும் ஐயா கா.கலியபெருமாளும் இறையருட்கவிஞர் எனப் புகழப்படும் ஐயா சீனி நைனா முகம்மதுவும் தனித்துவமானவர்கள்.

நம் மொழியின் இலக்கணமும் இலக்கியமும் அடுத்தத் தலைமுறைக்கும் அதன் மரபு தொலையாமல் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதற்காக, அது சார்ந்த நூல்களை மாணவர்கள் முதல் ஆசிரியர்கள் வரை மட்டுமின்றி, எழுத்தாளர்களும் அதனைப் பின்பற்றும் வகையில், பல்வேறு படைப்புகளை இவர்கள் மலேசிய தமிழினத்திற்கு விட்டுச்சென்றுள்ளனர். தமிழுக்குத் தொண்டு செய்வதைத் தங்களின் வாழ்வியல் கடமையாகவே எண்ணி வாழ்ந்தனர்.

தமிழ்க்குயிலார் கா. கலியபெருமாள்

தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்குத் தொண்டாற்றிய ஐயா தமிழ்க்குயில் கா.கலியபெருமாள் உலகத் தமிழர் பண்பாட்டுக் களஞ்சியத்தை உருவாக்கிய பெருமைக்குரியவராவார். மலேசியத் திருநாடு பெற்ற மணித்தமிழ் அறிஞர்களுள் தமக்கே உரிய தனிப்பாணியும் தனிமுத்திரையும் கொண்ட தமிழறிஞர்தான் நமது தமிழ்க்குயிலார் கா.கலியபெருமாள்.

ஓய்வுப்பெற்ற தமிழாசிரியரான இவரின் சேவையைப் பாராட்டும் வகையிலும் அதனை அங்கீகரிக்கும் வகையில் நாட்டின் “தோக்கோ குரு” (Tokoh Guru) என்னும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் தமிழறிஞராகவும் தன்முனைப்புப் பேச்சாளராகவும் அறியப்படும் தமிழ்க்குயிலார் தன்னை ஒரு பகுத்தறிவுவாதியாகவும் நிலைநிறுத்திக் கொண்டார். பேராக் மாநிலத்தின் கம்பார் நகரிலுள்ள கம்பார் தோட்டத்தில் 19.08.1937-ல் பிறந்த தமிழ்க்குயிலார், தனது 73-வது வயதில், 2011 ஜூலை 8-ம் தேதி தனது தமிழ்மூச்சை நிறுத்திக் கொண்டார்.

1960-களில், பாவேந்தர் பாரதிதாசனால் “தமிழ்க்குயிலார்” என்னும் சிறப்பு விருதை பெற்ற தமிழ்க்குயிலார்க்கு, அமெரிக்க உலகப் பல்கலைக்கழகம் ‘முனைவர்’  பட்டம் வழங்கிச் சிறப்பு செய்தது என்பது ஒவ்வொரு மலேசியத் தமிழர்க்கும் பெருமிதமானது.

மலேசியாவின் மூத்தத் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான இவர் 1982-ல், மாநில வாரியாக இயங்கி வரும் தமிழ் எழுத்தாளர் சங்கங்களை ஒன்றிணைக்கும் நோக்கத்தில், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் தேசியப் பேரவையைத் தோற்றுவித்தார்.

அப்பேரவையின் அமைப்புத் தலைவராகவும் பேராக் மாநில எழுத்தாளர் சங்கத் தலைவராகவும் பொறுப்பேற்றிருந்தத் தமிழ்க்குயிலார், அவரது தலைமைத்துவத்தின் கீழ், மாநில நிலையிலும் தேசிய நிலையிலும் எண்ணற்ற எழுத்தாளர்களை உருவாக்கியுள்ளார்.

மேலும், மலேசியாவில் தமிழர் சடங்கு முறைகளை முறையாக வடிவமைத்தும் கொடுத்தார். இவரது “பக்தியும் பகுத்தறிவும்” எனும் கேள்வி-பதில் பகுதி மலேசியர்களிடையேப் பெரும் வரவேற்பைப் பெற்று தந்தது. இக்கேள்வி-பதில் அங்கம் அக்காலக்கட்டத்தில் மலேசிய நண்பனில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் முரசுவின் மாணவர் மணிமன்ற மலரில் (1953) தொடங்கிய இவரது முதல் படைப்பு தொடங்கி, அவர் வாழ்ந்த காலம் வரை சுமார் 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் உட்பட, 300-க்கும் மேற்பட்ட கவிதைகள், உரைவீச்சுகள் மற்றும் நாடகங்களை அவர் எழுதியுள்ளார்.

மேலும், தமிழ்க்குயில் மற்றும் ஆசிரியர் ஒளி எனும் இதழ்களையும் வெற்றிகரமாக நடத்திய இவர், நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையும் எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி, 80-க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளி பயிற்சி நூல்களை எழுதி, தமிழ்ப்பள்ளி மாணவர்களின் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் அவர் பங்காற்றியுள்ளார்.

தமிழாசிரியர் சங்கத்தில் பல பொறுப்புகள் வகித்து, செம்மையாக பணியாற்றிய தமிழ்க்குயிலார்க்கு அச்சங்கம் ‘தொண்டர்மணி’ விருது கொடுத்து பாராட்டியது. தமிழ்ப்பணிகளுக்கிடையில், ஈப்போவில் தாம் வாழ்ந்த காலத்தில், வள்ளலார் அன்பு நிலையத்தை அமைத்தும் அவர் தொண்டாற்றினார்.

இவரது நூல்களில் தமிழர் பண்பாட்டுக் களஞ்சியம் (1000 பக்கங்களுக்கு மேலான தொகுப்பு நூல்), நீத்தார்கடன் நெறிமுறைகள், சிறுவர் செந்தமிழ்க் களஞ்சியம், அடிப்படைத் தமிழ், தமிழர் திருமண முறைகள், பொன்மணிச் சிந்தனைகள் ஆகிய நூல்கள் உட்பட மேலும் பல நூல்கள் தனித்துவம் மிக்கவைகளாக அக்காலக்கட்டத்தில் திகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய படைப்பாளர்களில் தலைசிறந்த ஒருவராக விளங்கிய தமிழ்க்குயிலார் தான் வாழ்ந்த காலத்தில், தமிழுக்கு ஆற்றிய சேவைக்காகப் பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். அவற்றில் செந்தமிழ்க் கலைஞர், திருக்குறள் மாமணி, தனிநாயக அடிகள், தமிழ்நெறிக் காவலர், தமிழ் நெறிக்குயில், செந்தமிழ்ச் செம்மல், செந்தமிழ் வாணர், திருக்குறள் மணி போன்ற விருதுகளும் அடங்கும்.

மேலும், அவரது படைப்புகளுக்காக தமிழ் நேசனின் ‘பவுன் பரிசு’ , மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ‘பொற்கிழி பரிசு’ , செந்தமிழ் கலா நிலைய சுவாமி இராமதாசர் வழங்கிய ‘கேடயப் பரிசு’ மற்றும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கங்களின் பேரவை வழங்கிய ‘கேடயப் பரிசு’ உட்பட பல பரிசுகளையும் அவர் பெற்றிருக்கிறார்.

“தொல்காப்பியக் கடலின் ஒருதுளி” சீனி நைனா முகம்மது

மலேசியாவில் தொல்காப்பியமாகவே வாழ்ந்த மாபெரும் தமிழறிஞர் எனப் போற்றப்படும் இறையருட் கவிஞர் ஐயா சீனி நைனா முகம்மது நாட்டில் தொல்காப்பியத்தை நனி சிறப்புடன் எடுத்துரைக்கும் ஆற்றல் மிக்கவராய் திகழ்ந்தார். இவரது தொல்காப்பியம் சார்ந்த தெளிவு மற்றும் விளங்களைக் கேட்டறிந்த தமிழ் நெஞ்சங்கள் இவரை மலேசிய மண்ணில் வாழ்ந்த தொல்காப்பியர் என்றும் புகழ்ந்து உரைப்பர்.

தனது இலக்கியப் படைப்புகளாலும் பங்களிப்பாலும் மலேசியத் தமிழ் உணர்வாளர்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்து நிலைத்து விட்ட ஐயா சீனி நைனா முகம்மது 1960-கள் முதல் தமிழ் இலக்கியத்துறையில் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டார்.

சமூகப் பற்றுள்ள கவிஞர் அவர்கள் ஓர் இலக்கியக் கருவூலமாக, கவிதைப் போராளியாக, தனது எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாமல் வாழ்ந்தவர். தமிழ் மொழியிலும் இலக்கியங்களிலும் அவருக்கு இருந்த பற்று, ஞானம், சிந்தனை, ஆளுமை நம்மை பிரமிக்க வைக்கிறது. தனது வாழ்நாளின் பெரும் பகுதியைத் தமிழ் இலக்கியப் படைப்புக்களுக்காக அவரபர்ப்பணித்துள்ளார்.

இறையருட் கவிஞராக போற்றப்படும் இவர் வெறும் கவிதையோடு தனது தமிழ்ப்பணியை நிறுத்திவிடாமல், கட்டுரை, சிறுகதை, வானொலி நாடகம் போன்றவற்றிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இவரது தனித்துவமான படைப்புகள் உள்ளூர் மட்டுமின்றி தமிழ்நாட்டுப் பத்திரிக்கை மற்றும் இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான இவர் கரும்பன், அபூபரீதா, இபுனுசைய்யிது, இல்லார்க்கினியன், நல்லார்க்கினியன் என்னும் புனைப்பெயர்களிலும் தனது படைப்புகளை உருவாக்கியுள்ளார். மேலும், ஒரு படைப்பாளியாக மட்டுமில்லாமல், ‘நம் குரல்’ என்னும் இஸ்லாமிய மாத இதழ், ‘உங்கள் குரல்’ திங்களிதழ் மற்றும் பினாங்கிலிருந்து முன்பு வெளிவந்த மலேசிய நண்பன் நாளிதழ் ஆகியவற்றுக்கும் ஆசியராக இருந்துள்ளார்.

அவர் தலைமைத்துவத்தில் வெளிவந்த ‘உங்கள் குரல்’ இதழின் படைப்புகள் மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் இலக்கிய, இலக்கண மரபுகளை எடுத்துரைத்த மிக பயனான இதழாக விளங்கியது.

இவரது படைப்புகள் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழ் நெஞ்சங்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்ததோடு; விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுத்தந்தது. புதியத் தமிழ்ப் புணர்ச்சி விதிகள் எனும் அவரது நூல் இலக்கணப் புலமைக்குச் சான்றாக அமைந்தது. அவர் எழுதிய தொல்காப்பியக் கடலின் ஒரு துளி என்னும் நூல் ‘கரிகாற்சோழன்’ விருது பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

1947, செப்டம்பர் 11-ம் நாள், தமிழகத்தின் கடைய நல்லுரில் பிறந்த இவர், தனது 12-வது வயதில் மலேசியாவிற்குப் புலம் பெயர்ந்தார். இன்றைக்கு மலேசியாவின் அதிகாரப்பூர்வமான தமிழ் வாழ்த்தாக அவர் வரைந்த ‘காப்பியனை ஈன்றவளே! காப்பியங்கள் கண்டவளே!’ என்னும் தமிழ்வாழ்த்துதான் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்பது அவரது வரலாற்று புகழின் உச்சம் எனலாம். மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு பெ இராஜேந்திரன் மேற்கொண்ட முயற்சியின் பலனாய், இந்த வாழ்த்துப் பாடலை ஐயா அவர்கள் எழுதிகொடுத்தார்.

தொல்காப்பியப் பேரறிஞரும் மகத்தான மரபு கவிஞருமான சீனி நைனா முகம்மது, தனது 67-வது வயதில், 2014, ஆகஸ்டு 6-ம் தேதி இயற்கை எய்தினார். அவரது மறைவு இந்நாட்டில் தமிழ்மொழிக்கும் சமுதாயத்திற்கும் பலவகையிலும் பேரிழப்பு என்பதை மறுக்க இயலாது.

அவரது படைப்புகளும், கருத்தாழமிக்க இலக்கியப் பதிவுகளும் காலத்தால் அழியாத பொக்கிசங்களாகும், அவை அழியாமல் காக்க வேண்டியது நம் கடமையாகும்.