மலேசிய மண்ணில் தமிழ் வளர்த்த அறிஞர்கள் – பகுதி 4

சிவா லெனின் | தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் மட்டுமில்லை, அதன் தொடர்ச்சியிலும் உண்டு. அதனால்தான், நூற்றாண்டுகள் கடந்தும் அது செழிப்பாக வாழ்கிறது. அத்தகைய தொடர்ச்சியினை முன்னெடுத்தவர்களில் நம் நாட்டின் தமிழறிஞர்களும் அந்தந்தக் காலக்கட்டத்தில் தங்களின் பெரும் பங்கை ஆற்றியுள்ளனர் என்பது மறுப்பதற்கில்லை.

அந்த வரிசையில் வாழ்ந்தவர்கள் பலரை இன்றைய தலைமுறை அறிந்திருக்கவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், நமது முந்தைய தலைமுறை அவர்களை மறந்துவிட்டது பெரும் கவலை அளிக்கிறது. தன்னோடு வாழ்ந்த ஒருவனைக்கூட நினைத்துப் பார்த்து, அறிமுகம் செய்ய இங்கு யாரும் இல்லை. அதற்கான காலமும் ஒத்துவருவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்தமிழறிஞர்களை இன்றையத் தலைமுறைக்கு முழுமையாக இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் சிறு அறிமுகத்தையாவது செய்வது சிறப்பாகும்.

அவ்வகையில், தமிழர் திருநாளை ஒற்றுமை நாளாக கொண்டாட வழிவகுத்ததோடு மட்டுமின்றி, தமிழ் இளைஞர் மணிமன்றத்தைத் தோற்றுவித்து, அதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் இன, மொழி உணர்ச்சியை எழச் செய்தத் தமிழ்வேள் கோ.சாரங்கபாணியையும் நாட்டில் தமிழ் ஆய்வும் சுமேரிய நாகரிகத்தின் ஒலிவடிவம் தமிழோடு ஒத்து இருப்பதை மெய்பித்த தமிழறிஞர் முனைவர் கி.லோகநாதனையும் நாம் மறந்துவிடக்கூடாது.

தமிழ்வேள் கோ.சாரங்கபாணி

தமிழ்வேள் கோ.சாரங்கபாணி என்னும் பெயர் மலேசியத் தமிழர்களுக்குப் புதிதல்ல. அவரது தமிழ்ப்பணி இன்றைக்கும் போற்றப்படுகிறது. தமிழர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்த அவர், மலேசியாவில் தமிழர் திருநாள் தமிழரின் ஒற்றுமைத் திருநாளாக உருவாகப் பாடுபட்டவராவார்.

மலேசியா மற்றும் சிங்கப்பூரில் தமிழ்த் தொண்டாற்றிய கோ.சாரங்கபாணியைத் தமிழர்கள் ‘தமிழ்வேள்’ என்றும் ‘கோ.சா.’ என்றும் இன்றைக்கும் நினைவு கூறுகிறார்கள்.1955-ல், தவத்திரு குன்றக்குடி அடிகளார் கோலாலம்பூர் வந்திருந்தபோது, கோ.சாரங்கபாணிக்குத் ‘தமிழ்வேள்’ என்னும் சிறப்பு பட்டமளித்து பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மொழிக்காகவும் இனத்திற்காகவும் சிந்தித்த இவர் இளைஞர்களைத் தமிழ் மொழியோடு எழுச்சி பெற வைக்க வேண்டி, மாணவர் மணிமன்ற மலரைத் தொடங்கியதோடு மட்டுமின்றி, தமிழ் இளைஞர் மணிமன்றத்தையும் தோற்றுவித்தார். மாணவர் மணிமன்றத்தின் மூலம் நாட்டில் பல தமிழ் எழுத்தாளர்களை உருவாக்கியப் பெருமை இவரைச் சேரும்.

இன்றைக்கும் சிங்கப்பூரில் தமிழ் இலக்கியத்துறையில் சிறப்பாக செயலாற்றுபவர்களுக்கு, இவரது நினைவாக ‘தமிழ்வேள்’ விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது 1988 தொடக்கம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால், மலேசியாவில் அவர் தோற்றுவித்தத் தமிழ் இளைஞர் மணிமன்றம் இதுவரை அவர் பெயரில் இலக்கியத்துறை சார்ந்தவர்களுக்கு இம்மாதிரியான முன்னெடுப்புகளை மேற்கொள்ளாதது வருத்தமானதே.

அவர் தோற்றுவித்த இளைஞர் மணிமன்றம், தொடக்கக் காலத்தில் நாட்டின் முக்கிய இயக்கமாக இருந்து வந்ததை யாரும் மறுத்திடலாகாது. அவ்வியக்கத்தின் தமிழ்ப்பணி போற்றுதலுக்குரியது. நாடு முழுவதும் தமிழர் திருநாள் கொண்டாட்டத்தை முன்னெடுத்த முதன்மை இயக்கம் அது. நாளடைவில் அவ்வியக்கம் சோர்ந்துவிட்டது என்றுதான் கூற வேண்டும்.

தற்போது நீண்ட காலத்திற்குப் பின்னர், புதியத் தலைமைத்துவத்தைக் கண்டிருக்கும் தமிழ் இளைஞர் மணிமன்றம், புத்துயிர் பெற்று மீண்டும் கோ.சாரங்கபாணியின் இலக்கை நோக்கி எழுச்சி பெறும் என்று நம்புவோம். இவ்வாறிருக்க, பேராக் மாநிலத்தின் கோப்பெங் மணிமன்றத்தின் செயல்பாடுகள் தனித்துவமாகவும் சிறப்பாகவும் இருப்பதை மறுப்பதற்கில்லை.

1903, ஏப்ரல் 19-ம் தேதி, தமிழகத்தின் திருவாரூரில் பிறந்த கோ.சாரங்கபாணி, தனது 20-வது வயதில் (1924) சிங்கப்பூர் வந்தார். அப்போதைய மலாயாவின் ஒரு பகுதிதான் சிங்கப்பூர் என்பது நாம் அறிந்ததே. சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து தனித்து, சுயநாடாகத் தன்னைப் பிரகடனம் செய்துகொள்ளும் வரை (1965) அது மலேசியாவுடன் இணைந்துதான் இருந்தது.

அக்காலக்கட்டத்தில், சிங்கப்பூரின் “முன்னேற்றம்” என்னும் பத்திரிக்கையின் துணையாசிரியராகவும் பின்னர், அப்பத்திரிக்கைக்கு ஆசிரியராகவும் கோ.சாரங்கபாணி  உயர்ந்தார். பகுத்தறிவு சிந்தனையிலும் சீர்த்திருத்தக் கருத்துகளிலும் தன்னை முழுமையாக ஈடுப்படுத்திக் கொண்ட கோ.சாரங்கபாணி, தனது எழுத்துகளின் மூலம் அவற்றை மக்களிடையேக் கொண்டு சென்றார்.

தந்தை பெரியாரின் கருத்துகள் மீது ஈர்ப்புக் கொண்ட இவர் 1934-ல், தாம் தொடங்கிய ‘தமிழ் முரசு’ வார இதழில், பெரியாரின் கொள்கைகள், முற்போக்குக் கருத்துகள், சாதி ஒழிப்பு மற்றும் பிராமண எதிர்ப்பு ஆகியவற்றை முதன்மை இலக்காகக் கொண்டு எழுதினார். அக்காலக்கட்டத்தில், தனித்துவமாக இயங்கிய இப்பத்திரிக்கை, மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஓராண்டில் தினசரி பத்திரிக்கையாக வெளிவரத் தொடங்கியது. அதனைதொடர்ந்து, ‘சீர்த்திருத்தம்’ என்ற மாத இதழையும் ஆங்கிலத்தில் ‘REFORM’ என்னும் மாத இதழையும் ‘INDIAN DAILY MAIL’ எனும் தினசரியையும் நடத்தி வந்தார்.

இவரது நினைவாகக் கூலிம், பாயா பெசாரில் அமைந்திருக்கும் பாயா பெசார் தமிழ்ப்பள்ளி தமிழுணர்வாளர்களின் பெரும் முயற்சியால் ‘கோ.சாரங்கபாணி தமிழ்ப்பள்ளி’யாக உருமாற்றம் கண்டது. இது அவர் ஆற்றியத் தமிழ்ப்பணிக்குக் கிடைத்த அங்கீகாரமாகும். தமிழுக்காகவும் தமிழினத்திற்காகவும் தொண்டாற்றியத் தமிழ்வேள் கோ.சாரங்கபாணி, 1974, மார்ச் 16-ம் நாள், தனது 71-வது வயதில் இயற்கை எய்தினார்.

தமிழ் ஆய்வாளர் முனைவர் கி.லோகநாதன்

தமிழ் ஆய்வுகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்களில் தனித்துவமானவராக விளங்கிடும் முனைவர் கி.லோகநாதன், சுமேரிய நாகரிகத்தின் ஒலி வடிவம் தமிழுடன் ஒத்தியிருப்பதாக விளக்கிய மலேசியத் தமிழறிஞராவார். சுமேரிய நாகரிக ஆய்வில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்த அவர், அவை முதற்சங்கத் தமிழாக இருக்க வேண்டும் என்றும் தனது ஆய்வில் குறிப்பிட்டிருந்தார்.

கெடா மாநிலத்தில் 1940, ஆகஸ்டு 11-ம் தேதி பிறந்த அவர், தொடக்கத்தில் மலேசியக் கல்வி அமைச்சிலும் பின்னர், மலேசிய (பினாங்கு) அறிவியல் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறை பேராசிரியராகவும் பணிபுரிந்தார். சுமேரிய நாகரிக கல்வெட்டில் “Kal-gal” என்னும் குறிப்பு கள்க, கள்ள, கள்ளன், கள்ளர் என்னும் பொருளில் அரசனைக் குறிப்பிடுவதாக அமைவதாகவும் தனது ஆய்வில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமேரிய மொழி தெற்கு மெசொப்பொத்தேமியாவில் (சுமேரியா) ஆகக் குறைந்தது கிமு 4-வது ஆயிரவாண்டு தொடக்கம் பேசப்பட்ட மொழியாகும். கிமு 2000 அளவில், சுமேரிய மொழியானது அக்காத் மொழியால் மாற்றீடு செய்யப்பட்டது. ஆனாலும், மேலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குச் சமய மொழியாக இருந்து வந்தது. கிபி முதலாம் ஆண்டுக்குப் பிறகு, சமயத் தொடர்பான பணிகளில் இருந்தும் சுமேரிய மொழி நீக்கப்பட்டது. பின்பு, 19-ம் நூற்றாண்டு வரை மறக்கப்பட்டிருந்தது. சுமேரிய மொழி பிராந்திய மொழிகளான எபிரேய மொழி, அக்காத் மொழி, அறமைக் மொழி போன்ற செமிடிக் மொழிகளிலிருந்து வேறுப்பட்டதாகும்.

தமிழியல் ஆய்விலும் கல்வெடு ஆய்வுகளிலும் ஆர்வம் மிகுந்திருந்த கி.லோகநாதன், சைவ சித்தாந்தத்திலும் தன்னை முழுமையாக ஈடுப்படுத்திக் கொண்டார். நியூசிலாந்தில் கணிதத் துறையில் பட்டம் பெற்றிருந்த இவர், பின்னர் இங்கிலாந்தில் முனைவர் பட்டமும் பெற்றார். சைவ சித்தாந்தத்தின் மீது கொண்டிருந்த ஈர்ப்பால், சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, சைவ சித்தாந்த வகுப்புகள் பலவற்றையும் நடத்தியுள்ளார். இவரது சைவ சித்தாந்த உரைகளும் தொகுப்புகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், இவர் உருவாக்கிய ஆகம உளவியல் என்றப் பிரிவின் மூலம், ஒருவரின் மனதினைத் துல்லியமாகப் படிக்க முடியும் என்றும் நிருபித்துள்ளார். அவர் வாழ்ந்த காலத்தில், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களைத் தனது இல்லத்து நூல்நிலையத்தில் பராமரித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இம்மாதிரியான தனித்துவங்களைக் கொண்டிருந்த தமிழறிஞர் முனைவர் கி.லோகநாதன், தனது 74-வது வயதில், ஏப்ரல் 17-ம் நாள், 2015-ல் ஜார்ஜ்டவுனிலுள்ள தனியார் மருத்துவமனையில் இயற்கை எய்தினார்.

தமிழறிஞர் என்றும் சுமேருத் தமிழ் ஆய்வாளர் என்றும், நாட்டில் அறியப்பட்ட முனைவர் கி.லோகநாதனின் துணைவியார் டாக்டர் சாரா என்பவராவார். இவர்களுக்கு டாக்டர் நவீனா மற்றும் டாக்டர் அருணன் என இரு பிள்ளைகள் உள்ளனர். இவர் எழுதியக் கட்டுரைகளை அனைவரும் படித்து பயன்பெற வேண்டும் என்பதற்காக https://sites.google.com/site/ulaganaar/  என்னும் வலைத்தளத்தை உருவாக்கி அதில் அவற்றைப் பதிவேற்றமும் செய்துள்ளார்.

இவ்வலைத்தளத்தில் பெரும்பாலும் அவர் எழுதியத் தத்துவம், ஆகம், உளவியல், நுண்பொருள் ஆய்வு, சுமேரியத் தமிழ், வேதத்தமிழ், தெய்வத் தமிழ் கட்டுரைகள், கவிதைகள், நூல்கள் உட்பட ஆய்வு தொகுப்புகளும் இடம் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் கல்வெட்டு ஆய்வுகள் மேற்கொண்டவர்கள் குறித்த தகவல்கள் கிடைப்பது மிகவும் சிரமமாகவே உள்ளது. இருப்பினும், சுமேரியக் கல்வெட்டு ஆய்வினை மேற்கொண்டு, அஃது தமிழோடு ஒத்தியிருப்பதாகவும் எடுத்துரைத்த தமிழறிஞர் முனைவர் கி.லோகநாதன் குறித்த பதிவுகள் கூட எங்கும் முழுமையாக காண முடியவில்லை. கிடைத்தத் தகவல் அடிப்படையில் மிகவும் மேலோட்டமானது மட்டுமே இத்தகவல்கள்.

அக்காலக்கட்டத்தில் அவரோடு பயணித்தவர்கள், அவரை நன்கு அறிந்தவர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அவர் குறித்த முழுமையான தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும் என்பதையும் இதன் வழி கோரிக்கையாக வைக்கிறேன்.