திரைப்பட தொழிலாளர்களுக்கு நடிகை நயன்தாரா ரூ.20 லட்சம் உதவி

கொரோனாவால் திரையுலகம் முடங்கி உள்ளது. சினிமா தொழிலாளர்கள் வேலை இழந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நடிகர்-நடிகைகள் உதவ வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்று பலரும் நிதி அளித்து வருகிறார்கள். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவக்குமார், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, உதயநிதி, தனுஷ், சிவகார்த்திகேயன், நடிகை குஷ்பு, மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித்குமார், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட பலர் நிதி வழங்கினர்.

மொத்தம் ரூ.1 கோடியே 59 லட்சத்து 64 ஆயிரம் வசூலாகி உள்ளது. பலர் அரிசி மூட்டைகளும் வழங்கி உள்ளனர். தற்போது நடிகை நயன்தாரா ரூ.20 லட்சம் நிதி வழங்கி இருக்கிறார். தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நயன்தாரா நடிப்பில், கடந்த வருடம் விஸ்வாசம், ஐரா, மிஸ்டர் லோக்கல், கொலையுதிர் காலம், பிகில், மலையாளத்தில் லவ் ஆக்‌ஷன் டிராமா, தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்கள் வந்தன. தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த, நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய 4 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். மூக்குத்தி அம்மன் பக்தி படமாக தயாராகி உள்ளது. இதில் கன்னியாகுமரி பகவதி அம்மன் வேடத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது.

dailythanthi