சங்கா சின்னையா | நடமாட்டக் கட்டுப்பாட்டுக் காலகட்டத்தில் மாணாக்கர்கள், பெற்றோர்களுடனான (புலனம், முகநூல், கைப்பேசி அழைப்பு, குரல் வழி பதிவு, மின்னஞ்சல், இதர) கலந்துரையாடலின் வழி அறிந்து கொண்டவை:
அ. மாணாக்கர்களுக்கு இணைய வழி நிறைய பயிற்சிகள் வழங்கப்பட்டது உண்மை. ஆனால்,
- அனைத்து மாணாக்கர்களும் செய்வதற்குத் தயார் நிலையில் இருந்தனர்: பெற்றோர்களும் அவர்களுக்கு வழிகாட்ட தயார் நிலையில் உள்ளனர்; எவ்வளவு பயிற்சிகள் வேண்டுமானாலும் வழங்க ஆசிரியர்களும் தயார் நிலையிலேயே இருந்தனர்; இருக்கின்றனர்.
1.1 இவற்றை முழுமையாகச் செயல்படுத்த முடிந்ததா?
இல்லை என்றே உறுதியாகக் கூற முடிகிறது. பல தடைகள்:
1.1.1 அனைத்து மாணாக்கர்களின் இல்லத்திலும் இணைய வசதிகள் இல்லை.
1.1.2 கைப்பேசி (புலனம்) மட்டுமே அதிகம் பயன்படுத்தப்பட்டது.
1.1.3 மூன்று நான்கு குழந்தைகள் உள்ள வீட்டில் கைப்பேசி பயன்படுத்துவதில் போராட்டம்.
1.1.4 பெற்றோர்கள் வேலைக்குச் செல்பவர்களாயின் இரவு நேரத்தில் மட்டுமே பயன்படுத்த முடிகிறது.
1.1.5 கைப்பேசி வசதி இருந்தாலும் இணைய தொடர்பில் சிக்கல்.
1.1.6 அதிக பயன்பாடு உடல் நலக் கேட்டுக்கும் வித்திட்டது.
1.1.7 இவ்வசதி குறைந்த மாணாக்கர்கள் தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்டுவிட்டது. அவர்களின் கற்றல் நிலை கேள்விக்குறியாகி விட்டது. (கைப்பேசியின் வழி நேரடி அழைப்பு மட்டுமே!)
1.1.8 பெற்றோர்கள் வீட்டில் எதுவுமே செய்ய இயலாமல் பாடம் நடத்துவதற்கு உதவியாக இருக்க வேண்டிய சூழல். இது காலத்தின் கட்டாயம்!
1.1.9 இதையும் தாண்டி, பயிற்சிகளின் நம்பகத்தன்மையும் சிந்திக்க வேண்டிய நிலையிலேயே இருக்கிறது; நீடித்த நிலைத்த வளர்ச்சியா என்பதிலும் ஐயப்பாடு எழுகிறது!
1.2 இதற்கு மாற்றாக செய்த சில செய்முறை நடவடிக்கைகள் அதிக பலனைத் தந்தாலும் அவற்றை மாணாக்கர்கள் விரும்பிச் செய்தாலும் அதைப் புரிந்து கொள்ளும் நிலையில் பலர் இல்லை; இருப்பினும் இங்கு 40 விழுக்காட்டு மாணாக்கர்கள் செய்தனர் என்பதில் மகிழ்ச்சியே! நீடித்த நிலைத்த வளர்ச்சியின் தேவையைக் காலம்தான் அனைவருக்கும் உணர்த்த வேண்டும்!
1.3 மாணாக்கர்களைத் தேர்வுக்காக உருவாக்குவதைவிட, அறிவார்ந்த, பண்பான மாணக்கர்களாக உருவாக்குவதே சிறப்பு என்ற கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதே உண்மையான கல்வியாளர்களின் அவா!
1.4 தேர்வுக்காக மட்டுமே உருவாக்கப்படும் மாணாக்கர்கள் சிறந்த ஆளுமையுடவர்களாக இருப்பார்கள் என்பது உறுதியன்று: ஆனால்அறிவார்ந்த, பண்பான மாணாக்கர்கள்கள் தேர்வைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்பது ஏற்கனவே உறுதிபடுத்தப்பட்டுவிட்டதால் இங்கு இது தொடர்பான விரிவு தேவையில்லை என்றே கருதுகின்றேன்.
1.5 புதிய பள்ளியில் மேற்கூறிய கருத்தை வலுப்படுத்த உதவிய கொரோனா 19க்கு இவ்வேளையில் நன்றி! இதுவும் நல்லதுதான் என்று மாணாக்கர்களின் ஈடுபாட்டையும் பயனையும் பெற்றோர்கள் ஓரளவு நேரடியாக உணரத் தொடங்கி விட்டனர் என்பது ஓரளவு நிறைவைத் தந்தாலும் இது தொடருமா என்பதும் ஐயப்பாடே!
ஆ. இக்கட்டான இச்சூழலில் எந்த மாதிரியான நடவடிக்கைகள் தேவை? நீடித்த நிலைத்த வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட கல்வியைப் பெறுவதற்கு தொழில்நுட்ப வளர்ச்சி மட்டுமே போதுமா? அனைவரும் சமமான கல்வியை பெற முடியுமா? நடமாட்டக் கட்டுப்பாடு முடிவுற்றாலும் உடனடியாக பள்ளிகளைத் திறக்கவியலாது என்ற நமது பிரதமரின் கருத்து எதைக் காட்டுகிறது?
2.இவ்வினாக்களுக்கெல்லாம் விடை தேட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். எனவே எதை எப்படிச் செய்வது என்பதை எளிதில் தீர்மானிக்க முடியவில்லை.
2.1 இருப்பினும் முடியும் என்கின்ற உணர்வுடன், மாற்றுச் சிந்தனையுடன் களத்தில் நாங்கள் மாணாக்கர்களைச் சந்திக்கவுள்ளோம்.
2.2 பள்ளி இல்லையென்றாலும் ஆசிரியர்களின் சிறிய வழிகாட்டல்களின் வழி மாணாக்கர்களால் சிறந்த முறையில் கல்வி கற்க முடியும் என்பதை உறுதிபடுத்த முடியுமா?
கடந்த இரண்டு வார காலம், முடியும் என்பதை ஓரளவு உணர்த்திவிட்டது. மேலும் சில மாற்றமான கற்றல் நடவடிக்கைகளுடன் மீதமுள்ள நாள்கள் வரை எங்கள் பயணத்தைத் தொடர்கின்றோம்…நன்றி.
சங்கா சின்னையா, பினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் – “இப்பதிவு எம் பள்ளிக்கும் எம் மாணாக்கர்களுக்குமானது…ஏனையோர் தேவையேற்படின் கொள்ளுவன கொண்டு தள்ளுவன தள்ளுக!