சங்கா சின்னையா | இவ்வாண்டு யுபிஎசார், பீதி3 தேர்வுகள் நடைபெறா என்ற கல்வியமைச்சின் முடிவு ஆசிரியர்களுக்கான புதிய சவால்?
- இதுவரை தொடக்கப்பள்ளி மாணாக்கர்கள் யுபிஎசார் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே மதிப்பிடப்பட்டு வந்தனர். அதிலும் அதிக ‘ஏ’க்களைப் பெறும் மாணாக்கர்களே போற்றப்படும் நிலை இருந்தது. குறிப்பாக 8 ‘ஏ’க்கள் பெறும் மாணாக்கர்களே சிறந்தவர்கள் என்ற ஒரு தோற்றம் ஊடகங்களாலும் சமுக வலைதளங்களாலும் உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று அந்த நிலை இல்லாமல் போனது பலருக்கு அதிர்ச்சியாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
’ஏ’ முடிவுகளைக் கொண்டும், ஒரு சில புத்தாக்க ஆராய்ச்சி என்ற நடவடிக்கைகளைக் கொண்டும் பள்ளியின் தரத்தை அடையாளம் காட்டிய நமக்கு மிகப் பெரும் அதிர்ச்சியாகவே இஃது இருக்கும். இனி எதைக் கொண்டு மாணாக்கர்களை மதிப்பிடுவது? நம் பள்ளி சிறந்த பள்ளி என எதைக் கொண்டு நிறுத்துவது?
மாலை, இரவு நேர வகுப்புகள், கூடுதல் நேர வகுப்புகள், தேர்வு வழிகாட்டி வகுப்புகள், கருத்தரங்குகள், தேர்வு முகாம்கள், விடுமுறைக்கால வகுப்புகள் என அனைத்தும் இந்த முடிவால் பொருளற்றுப் போய்விட்டன.
இவைதாம் அனைத்துப் பள்ளிகளும் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள உதவிய நடவடிக்கைகள். இன்றைய நிலையில் இவையில்லாமல், ஆசிரியர்களின் வேலைப்பளு குறைகிறது; பள்ளிக்கும் பெற்றோருக்கும் வீண்செலவுகள் குறைகின்றன: மாணாக்கர்களுக்குத் தேவையற்ற மனவுளைச்சல் ஏற்படாது.
முதலாம் ஆண்டு முதல் ஐந்தாம் ஆண்டு வரை நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கான கற்றல் இருப்பின், மேற்கூறிய அனைத்தும் ஆறாம் ஆண்டில் மட்டும் தேவையில்லா ஒன்று என்பதை நாம் உணர்வோமா?
இன்று பல ஆசிரியர்கள் மிகை நேர வகுப்புகள் (டியூசன்) நடத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. சட்டப்படி கூடாதென்றாலும் இன்று இஃது ஒரு முக்கிய அடையாளமாகிவிட்டது. தேர்வு இல்லையென்றால் இது போன்ற வகுப்புகளும் தேவையில்லா ஒன்றாகவே கருதப்படும்; ஆசிரியர்கள் தங்கள் முழு ஆற்றலையும் கற்றல் கற்பித்தலில் செலவிட முடியும்.
தேர்வு முடிவுகளின் அச்சம் இனி யாருக்கும் இருக்காது. குறிப்பாக மாணாக்கர்கள் தங்களின் சுயத்தை இழக்காமல் முழுமையாகக் கற்பதற்கு வாய்ப்பு ஏற்படும். தேர்வுக்காகவே இயந்திரம் போல் உருவாக்கப்படும் மாணாக்கர்கள், தங்களின் குழந்தைப் பருவ இயல்பை இழக்க வேண்டிய சூழல் இனி இருக்காது என்றே நம்புவோம்; குழந்தைகள் குழந்தைகளாகவே வளரட்டும் என எதிர்பார்ப்போம்.
மாணாக்கர்களைத் தேர்வுக்காகவே தயார்படுத்துவதுதான் கல்வியா? தொடக்க நிலையில் விட்டு விட்டு, விட்டதைப் பிடிப்பதற்கு, மதியம், மாலை, இரவு, விடுமுறையென மிகைநேர வகுப்புகள் நடத்துவது இயலாமையா, அறமா? கூடுதல் வகுப்புகள் அனைத்தும் கற்பித்தல் நடைபெற்றுள்ளது, கற்றல் நடைபெறவில்லை என்பதை உறுதிபடுத்துகிறது என்ற கல்வியாளர்களின் கருத்தை மறுத்திட இயலுமா?
எனவே, இனியொரு விதி செய்வோம், அதை எந்த நாளும் காப்போம்! சுவரில்லாப் பள்ளியை உருவாக்க முயல்வோம்! கற்றல் அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டே இருக்கும் என்பதைக் கருத்தில் கொள்வோம்!
நமது நாட்டின் தேசியக் கல்வி தத்துவத்திற்கேற்ப முழுமையான வளர்ச்சி பெற்ற மாணாக்கர்களை உருவாக்கும் பணியினை மேற்கொள்ள வேண்டிய அருமையான வாய்ப்பு நம்மை நோக்கி வந்திருக்கிறது. நாட்டின் கல்விக் கொள்கையும் உலக தரத்திலான கல்வியை வேண்டி நிற்கிறது. தேர்வை மட்டுமே குறியாகக் கொண்ட கல்வி அல்ல நமது தேவை என்பதை நமது கல்விக் கொள்கையும் ஏற்றுக் கொள்கிறது. எனவே இந்த இலக்கினை அடைய மாற்றங்களை உருவாக்கும் ஆசிரியர்களே நமது இப்போதைய தேவை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்வோம்.
வகுப்பறை/பள்ளி நிலையிலான மதிப்பீடு எவ்வளவு வலிமை மிக்கது என்பதை உணர்த்த வேண்டிய தருணம் இது. பொதுமக்களுக்கு இந்த மதிப்பீடுகளின் மீதான நம்பகத்தன்மை குறைந்தே காணப்படலாம்; ஆனால் அதில் உண்மையில்லை என்பதை ஆசிரியர்களால் உணர வைக்க முடியும். நமது கடமையைச் சரிவர செய்தால் இதில் பிழையேதும் நேரா என்பதை ஏற்கனவே உறுதிபடுத்தியுள்ளோம்.
இந்த மதிப்பீடுகளைக் கல்வியமைச்சு வரையறை செய்துள்ளபடி, ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடத்தினால் திண்ணமாக அறிவார்ந்த, மனிதநேயமிக்க மாணாக்கர்களை உருவாக்க முடியும். இவர்கள்தாம் முழுமையான வளர்ச்சி பெற்ற மாணாக்கர்கள் என்பதை நமது நாட்டின் கல்வித் தத்துவமும் குறிக்கின்றது.
பள்ளியின் தரத்தைக் காட்டுவதற்கு நமக்கு ஏற்கனவே, எஸ்கெபிஎம்ஜி 2 என்ற ஒரு மதிப்பீட்டுக் கருவி, நன்கு திட்டமிடப்பட்டு, தெளிவான விளக்கத்துடன் இருக்கிறது. அவற்றில் உள்ளவற்றைப் பின்பற்றி, பள்ளியை நடத்தினாலேயே தரம் தானாகவே வரும் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.
சிக்கல் கல்விக்கொள்கையில் இல்லை; அமலாக்கம் செய்யும் தலைமைத்துவத்திடமும் ஆசிரியர்களிடமும்தான் இருக்கிறது. எனவே, உலகின் எதிர்கால நலன் கருதி, நாம் நமது பணியினைச் சிறப்பாகச் செய்வோம்; இதன் வழி புதியதோர் உலகம் செய்வோம்!
– சங்கா சின்னையா, பினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்
good