சிவாலெனின் | இலக்கியத்தின் அடையாளம், தமிழ்ச்சீலர் மா.செ.மாயதேவன்
தைப்பிங் நகரில் தமிழர்களின் அடையாளமாகவும் தமிழ் இலக்கியத்தின் முகவரியாகவும் வாழ்ந்துக் கொண்டிருப்பவர் “தமிழ்ச் சீலர்” என போற்றப்படும் ஐயா மா.செ. மாயதேவன் என்றால் அஃது மறுப்பதற்கில்லை. தமிழ் சார்ந்த நிகழ்வுகளிலும் தமிழர் சார்ந்த முன்னெடுப்புகளிலும் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டு தன் வாழ்நாளை தமிழோடும் தமிழரோடு இணைத்துக் கொண்ட பெருமைக்குரிய இலக்கியவாதி இவர்.
நாட்டின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவராக வலம் வரும் இவர் 1951-ல் தனது எழுத்துலகப் பயணத்தைத் தொடங்கினார். தொடக்கத்தில் முனியாண்டி, முனிதாசன், மாயன், மா, மரகதன் என்னும் புனைப்பெயர்களால் அறியப்பட்ட இவர் இலக்கியம் சமுதாயம் என இரண்டிலும் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டவராவார். இலக்கியக் குரிசில் எனப் போற்றப்படும் அமரர் முனைவர் மா.இராமையாவுடன் இணைந்து ‘இரத்ததானம்’ என்னும் முதல் சிறுகதைத் தொகுப்பை 1953-ல் வெளியீடு செய்துள்ளார். அதுதான் நாட்டில் வெளியீடு செய்யப்பட்ட முதல் சிறுகதை தொகுப்பாகும். அதனைத் தொடர்ந்து, அவர்களின் அடுத்த படைப்பாக 1958-ல் “நீர்ச்சுழல்’ என்னும் குறுநாவலும் வெளியீடு கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விருவருக்கும் இருந்த நெருக்கமான நட்பும் செயல்பாடும் அன்றையக் காலக்கட்டத்தில் இவர்களை இரட்டையர்கள் என்று அழைக்கும் வகையில் சிறப்புக்குரியதாக அமைந்திருந்தது என்பது வரலாறு. தைப்பிங் தமிழர் சங்கத்தின் தலைவராகவும் தனது தமிழ்ப்பணியினை ஆக்கப்பூர்வமாக மேற்கொண்டார். மேலும், இந்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்கும் தமிழர்களின் ஒற்றுமைக்கும் அச்சாரமாக தமிழர் திருநாள் கொண்டாடப்பட வேண்டும் எனும் கோ.சாரங்கபாணியின் சிந்தனையைச் சிந்தையில் ஏற்றி, அது ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற ஊன்றுக்கோளாக விளங்கும் ஐயா மாயதேவன் தைப்பிங் தமிழர் திருநாள் கொண்டாட்டத்தின் முன்னோடி என்பது பெருமிதமான வரலாறாகும்.
அக்காலக்கட்டத்தில் நாட்டில் இலக்கிய இதழ் உருவாக்கத்தின் முன்னோடிகளில் இவரது பங்களிப்பும் மறுப்பதற்கில்லை. ‘திருமுகம்’ என்னும் இலக்கிய இதழை கையெழுத்திலேயே எழுதி, அதை பிரதி எடுத்து எல்லோருக்கும் அனுப்பிய பணி இந்நாட்டின் தமிழ் இலக்கியத்தின் தொடக்கம் என்று கூறலாம். முப்பது காசு விற்கப்பட்ட அந்த இதழ், ஓராண்டுக்கு வெளிவந்தது. புதிய எழுத்தாளர்களை உருவாக்க வேண்டும் என்னும் இலக்கோடு சிறுகதைகளுக்கு வெ.50 வழங்கும் திட்டத்தையும் அறிவித்து அவர் அதனை நனிசிறப்புடன் முன்னெடுத்து வந்தார்.
இன்று பூங் லீ தோட்டம் என்று அழைக்கப்படும் தைப்பிங் நகரிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள போண்டோக் தஞ்சோங்கிலுள்ள, மேற்சிஸ்டன் தோட்டத்தில் பிறந்து வளர்ந்த மா.செ.மாயதேவன், மெற்சிஸ்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் மூன்றாம் ஆண்டு வரையும், பின்னர் நான்கு முதல் ஆறாம் ஆண்டு வரை அருகிலுள்ள மசாலை தோட்டத்திலும் பயின்றார். தமிழின் மீது கொண்ட ஈர்ப்பினாலும் உணர்வினாலும் 22 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து, தைப்பிங் இந்து வாலிபர் சங்கத்தில் தனது ஏழாம் வகுப்பைப் பயின்றுள்ளார். காளியம்மாள் எனும் தனது துணைவியாரை, நல்ல தமிழ் பெயரில் அழைக்க வேண்டுமெனக் கருதி மணிசெல்வி என அழைக்கும் அவர், தனது துணைவியாரைத் தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த் திருமணத்தைத் தன்னோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், நாடு முழுவதும் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் திருமணங்களையும் இவர் செய்து வைத்துள்ளார்.
1933-ல், திரு மாகாளி – திருமதி செங்கம்மாள் தம்பதிகளுக்கு, இரண்டாவது மகனாக பிறந்தவர் ம.செ.மாயதேவன். இவருக்கு முத்துசாமி என ஓர் அண்ணனும் நடராஜன், தாமோதரன் என இரு தம்பிகளோடு, லோகாம்பாள் என்னும் தங்கையும் உடன்பிறப்புகளாவர். அக்காலத்தில், தோட்டங்களில் அரங்கேறிய ஆர்.பி.எஸ். மணியத்தின் கலைமகள் நாடகக் குழுவின் நாடகங்களின் அரங்கேற்றங்களுக்கு முன் ம.செ.மாயதேவனின் சமூகச் சிந்தனை மிக்க சொற்பொழிவுகள் அரங்கேறிய பின்னர்தான் நாடகம் அரங்கேறும் என்பது தனி சிறப்பிற்குரியது. அந்த நாடகக் குழுவில் பாடகியாக இருந்த காளியம்மாள்தான், இவரது துணைவியார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு மணிவண்ணன், மணிமாறன், மணிச்செல்வன் என மூன்று ஆண் மகன்களுக்கும் கற்பகவள்ளி என்னும் மகளும் உள்ளனர். இவரது மகள் மருத்துவராவார்.
தமிழ்நேசனில் 1950-ல், சுப.நாராயணனும் பைரோஜி நாராயணமும் நடத்திய கதை வகுப்பிலும் பின்னர் கு.அழகர்சாமி தமிழ் நேசனில் நடத்திய இலக்கிய வட்டத்திலும் பங்கெடுத்து தனது எழுத்தாற்றலையும் தமிழ் இலக்கிய உலகத்தில் தனது பயணத்தையும் செம்மைப்படுத்திக் கொண்டவர். கதை வகுப்பிலும் இலக்கிய வட்டத்தில் வரும் விமர்சனங்கள், கருத்துகள் கதைகளுக்கான ஆலோசனைகள் என அனைத்தையும் ஆழப் புரிந்துகொண்டு அதன் மூலம் தனது எழுத்துக்களை ம.செ.மாயதேவன் செழிமை செய்துகொண்டார்.
மலாயாப் பல்கலைக்கழகம் நாட்டில் உருவாக்கப்பட்ட போது அப்பல்கலைக்கழகத்தில் தமிழ் நூலகம் வேண்டும் எனக் கோரிக்கை எழுப்பி, அதனை வித்திடவும் செய்த கோ.சாரங்கபாணியின் வேண்டுக்கோளுக்குப் பக்கபலமாகவும் உதவியாகவும் இருக்க வேண்டி, தைப்பிங்கிலிருந்து அந்நூல் நிலையத்திற்குத் தமிழ் புத்தகங்களை ம.செ.மாயதேவன் தலைமையேற்று அனுப்பி வைத்தார்.
மலேசியாவில் தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் போற்றுதல்குரிய பங்கினை ஆற்றியுள்ள ம.செ.மாயதேவன் அவர்களுக்கு அரசு வழி பிபிடி மற்றும் பிஜேகே விருதுகள் கிடைத்துள்ள நிலையில், தவத்திரு சித்திரமுத்து அவரது தமிழ்ச் சேவையைப் பாராட்டி 1968-ல் “தமிழ்ச் சீலர்” என்றுரைத்தார். இன்றைக்குத் “தமிழ்ச் சீலர்’ என்பது அவரது தனித்துவ அடையாளமாகவே திகழ்கிறது. மேலும், தைப்பிங் இந்து சங்கத்தின் முன்னோடியாக இருந்து, அதனைத் தொடங்கியது முதல் ஆக்கப்பூர்வமாக வழிநடத்திய பெருமையையும் தாங்கி நிற்கும் ஐயா மாயதேவனின் சமயப்பணியினைப் போற்றும் நிலையில் “சங்கபூசன்’ பட்டத்தை மலேசிய இந்து சங்கம் வழங்கியது.
அதுமட்டுமின்றி, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், 1978-ல் இவரது எழுத்துப்பணியைப் பாராட்டி சா.அ.அன்பானந்தன் விருதை வழங்கி கௌரவித்துள்ளது. மேலும், தைப்பிங் இந்து தேவாலய சபா 1980-ல் “அருட்செல்வர்” விருதையும் 2000-ம் ஆண்டில், தைப்பிங் ஓம் ஶ்ரீ ஐயனார் கோயில் நிர்வாகம் “தமிழ்க் காவலர்” என்னும் விருதையும் வழங்கி தமிழுக்குப் பெருமை சேர்த்தவருக்குக் கீரிடம் சூட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாம் கையெழுத்து பிரதியாக வெளியீடு செய்த திருமுகம் இலக்கிய இதழின் பெயரில் 1957-ல், தைப்பிங் நகரில் நான்கு சீனர்களுடன் இணைந்து அச்சகம் ஒன்றையும் அவர் தொடங்கினார். கால ஓட்டத்தில் இத்துறையிலிருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்த சீன நண்பர்கள், அந்நிறுவனத்தை விற்க முற்பட்ட வேளையில் அதனை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டி, அந்நிறுவனத்தை ஐயா மாயதேவன் வாங்கினார். தைப்பிங் நகர் மட்டுமின்றி , நாடு முழுவதும் தமிழர்களுக்கு அறிமுகமான அச்சகமாக திருமுகம் அச்சகம் திகழ்கிறது. தற்போது அந்த அச்சகம் அவர்களின் குடும்பச் சொத்தாக இன்னும் தமிழ்ப்பணியில் ஈடுப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சமூக அக்கறையோடு முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு அன்று தொட்டு இன்று வரை இந்த அச்சகம் தனது ஆக்கப்பூர்வமானப் பங்களிப்பினை வழங்கி வருகிறது.
புதுமைப்பித்தன் எழுதிய “விபரீத ஆசை” என்னும் சிறுகதை ஆபாசமானது என்னும் சர்ச்சை அக்காலத்தில் எழுந்தது. அதற்கு எதிர்வினையாற்றும் வகையில் அக்கதை விரசமல்ல என அவரைப் போலவே பலர் எழுதியக் கட்டுரைகளைத் தொகுத்து 1961-ல் “இலக்கியத்தில் புதுமைப்பித்தன்” எனும் கட்டுரை நூலையும் அவர் வெளியீடு செய்தார்.
மேலும், ”இராமையாவின் இலக்கியப் பணி” என்னும் நூலை 1975-ல் இலக்கியக் குரிசல் முனைவர் இராமையாவின் தமிழ்ப்பணியைப் போற்றியும் வாழ்த்தியும் வெளியீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது படைப்புகளில் 1962-ல் வெளியான “சபலம்”, 1968-ல் வெளியான “மலேசியாவில் தமிழர்கள்” எனும் கட்டுரை தொகுப்பு, 1972-ல் வெளியான ‘மன உணர்வுகள்” என்னும் கட்டுரை தொகுப்பு ஆகியவை அக்காலக்கட்டத்தில் தனித்துவமான வரவேற்பைப் பெற்ற படைப்புகளாகும்.
இவரது தமிழ்ப் பணியைப் பாராட்டும் வகையிலும் அதனை அங்கீகரிக்கும் நிலையிலும் அவற்றை வரலாக பதிவு செய்ய வேண்டும் என்னும் உன்னத சிந்தனையிலும் மலேசியத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் தோற்றுநர் ஐயா இரா.ந.வீரப்பனாரின் தொகுப்பாசிரியராக இருந்து, 1969-ல் “மா.செ.மாயதேவன் இலக்கியப் பணி” என்னும் நூல் வெளியீடு கண்டது என்பது பெருமிதமான வரலாற்று பதிவாகும்.
தற்போது 87 வயதை எட்டியுள்ள ஐயா மா.செ.மாயதேவன் இன்றைக்கும் தமிழ்ப்பணியில் தன்னை ஓர் இளைஞனாகவே ஈடுபடுத்தி வருகிறார். அவரது சிந்தனையும் எண்ணங்களும் தமிழ், தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் என்னும் சூழலில் விரிந்துகொண்டிருப்பதைத் தைப்பிங் வாழ் தமிழர்களும் அவரோடு பயணிக்கும் சக தோழமைகளும் எடுத்துரைப்பதைக் கேட்கும் போது தமிழால் நம் உள்ளம் மகிழ்கிறது.
தமிழுக்கும் தமிழினத்திற்கும் தமிழ் இலக்கியம் பேசும் சான்றாக ஐயா மா.செ.மாயதேவன் விளங்குகிறார். நாம் வாழும் காலத்தில் அவரும் நம்மோடு வாழ்ந்துக் கொண்டிருப்பது பெருமிதமானது. அவர் சுவாசிக்கும் தமிழும் தமிழ் இலக்கியமும் அவரது ஆரோக்கியத்திற்குத் துணை நிற்கட்டும். மலேசியத் தமிழ் நல்லுலகின் வாழும் பொக்கிசம் ஐயா மா.செ.மாயதேவன் என்றால் அஃது மறுப்பதற்கில்லை.
தைப்பிங் நகரம் இயற்கை வளங்களின் பொக்கிசம் என்றும் நாட்டில் எல்லா காலக்கட்டத்திலும் மழை பெய்யும் ஒரு நகரமாகவும் விளங்கினாலும் அப்பெருமைகளுக்குப் பெருமை சேர்க்கும் அருந்தமிழ் அடையாளமாக ஐயா மா.செ.மாயதேவன் அந்நகரில் வாழ்ந்து வருவது தைப்பிங் நகருக்கு மட்டுமின்றி அங்கு வாழும் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் ஒன்றாக விளங்குகிறது.
தனது வாழ்நாளின் பெரும் பகுதியைத் தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் அர்ப்பணித்த தமிழ்த்திரு மா.செ.மாயதேவன் இன்றையத் தமிழ் சமூகத்திற்கு முன்மாதிரியாகவும் அவர்கள் வாழும் காலத்தின் வாழ்வியல் சான்றாகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தகையப் பெருமைக்குரிய மனிதரை மீண்டும் நினைவுக்கூறுவதில் பெருமைக் கொள்ளும் அதேவேளையில் தமிழ், தமிழ் இலக்கியப் பணிகளை இலாபத்திற்காக இல்லாமல் நம்மினத்தின் அடையாளம் காக்க ஐயா மா.செ.மாயதேவன் போன்று அனைத்து தமிழ் நெஞ்சங்களும் கரம்கோர்த்து பயணித்தால் மலேசியத் திருநாட்டில் தமிழும் தமிழினமும் அழியாத முகவரியோடு பயணிக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.