நெருக்கடி காலத்தில், நமது தேவை என்ன? நாம் தேடுவது என்ன? ~ எஸ் அருட்செல்வன்

முதலாளித்துவத்தின் மிகப்பெரிய குறைபாடுகளில் ஒன்று நெருக்கடி மற்றும் பொருளாதார வளர்ச்சிக் காலப் பிரச்சினை ஆகும். பொருளாதார வளர்ச்சியின் போது பெரும் இலாபத்தை ஈட்டும் முதலாளிகள், பங்குதாரர்களுக்கு அதிக ஈவுத்தொகையை வழங்குகிறார்கள். அதேசமயம், நெருக்கடி மற்றும் பொருளாதார மந்தநிலையின் போது, பெரும் முதலாளிகள் சிறு முதலாளிகளைத் தங்கள் செல்வ பலத்தால் வாங்குதல், தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்தல் போன்றவற்றோடு, தங்கள் முதலீடுகளைப் பாதுகாக்க, அரசாங்கத்தின் தலையீடு தேவை என அரசாங்கத்தை வற்புறுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் இறங்குவார்கள். அதுமட்டுமின்றி, அந்த நேரத்தில் வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கும் நபரையும் அவர்கள் தேடுவார்கள், உண்மையான நெருக்கடி மற்றும் குற்றவாளிகளிடமிருந்து மக்களின் பார்வையைத் திசைதிருப்ப, அவர்களுக்கு இது எப்போதும் தேவை. நெருக்கடி மற்றும் மந்தநிலையின் போது, மக்கள் கவனம் செலுத்த அவர்களுக்குப் பிரச்சினைகள் தேவை, அவர்களுக்குப் புதிய எதிரிகள் தேவை, அவர்களுக்கு வீழ்ந்துகொண்டிருக்கும் ஒரு நபர் தேவை.

இன்று ஒரு தொற்றுநோயைத் தொடர்ந்து உலக மந்தநிலை உருவாகியுள்ளது.  உலகெங்கிலும் இனவெறி மற்றும் இனவாதம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன. இது புதியது அல்ல, மிகவும் பழக்கமானது. கறுப்பு மரணத்தின் (Black Death – மனித வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிக ஆபத்தான தொற்றுநோய், இதனால் யூரேசியா மற்றும் வட ஆப்பிரிக்காவில் 75-200 மில்லியன் மக்கள் வரை இறந்தனர், 1347 முதல் 1351 வரை ஐரோப்பாவில் அதிக உயிர் இழப்புகள்…. ஐரோப்பாவின் மக்கள் தொகை முந்தைய நிலைக்கு மீட்க 200 ஆண்டுகள் ஆனது) போது யூதர்களின் துன்புறுத்தல், ஏய்ட்ஸ் நோய் கடுமையாக இருந்தபோது எல்.ஜி.பீ.டி.கியூ. சமூகங்களுடன் எச்.ஐ.வி. இணைக்கப்பட்டது, இபோலா வெடித்தபோது மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் இப்போது கோவிட்-19 தொற்றுநோயின்போது, டிரம்ப் விவரித்ததைப் போன்று ‘சீன வைரஸ்’ எனப் பல்வேறு வகையான களங்கம் விளைவிக்கும் வரலாறுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆக, இந்தக் கோவிட் தலைமையிலான பொருளாதார நெருக்கடியின் போது வீழ்ச்சியடைந்தவர்கள் யார்? நிச்சயமாக குடியேறியவர்கள். கடந்த ஏப்ரல் 20-ம் தேதி, டொனால்ட் டிரம்ப் ஒரு டுவீட் செய்திருந்தார், “கண்ணுக்குத் தெரியாத ஓர் எதிரியின் தாக்குதலினாலும், நமது அமெரிக்க குடிமக்களின் வேலைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தினாலும், அமெரிக்காவில் பிற நாட்டினர் குடியேறுவதைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க ஒரு நிறைவேற்று ஆணையில் கையெழுத்திடவுள்ளேன்.” எனவே, அடிப்படையில் இப்போது மோதல் நமக்கும் குடியேறியவர்களுக்கும் இடையில்தான்…. குடிமக்கள் மற்றும் குடியேறியவர்கள்.

மலேசியாவில், வீழ்ச்சியடைவது வேறு யாராக இருக்க முடியும்? நாம் முதலில் யாரைத் துடைத்தொழிக்க முடியும்? நிச்சயமாக வங்காளதேசம், நேபாளம், இந்தோனேசியாவில் இருந்து குடியேறியவர்கள் மற்றும் அகதிகளாக – மியான்மர், ரோஹிங்கியா – தஞ்சம் வந்தவர்களைதான்.

சமீபத்தில், செலாயாங் சந்தையில் குடியேறியவர்கள் மீதும், ரோஹிங்கியாவிலிருந்து படகு வழி வந்த மக்கள் மீதும் மலேசியர்கள் அதிக கோபமும் விரக்தியும் கொண்டதைக் காண முடிந்தது. புலம்பெயர்ந்தோர் சந்தைக்குப் படையெடுத்துள்ளதாக ம.இ.கா. தேசியத் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கடுமையாக சாடினார். மியான்மார் குடியேறிகள் உணவுத் தொழிலுக்கு 1 பில்லியன் இழப்பை ஏற்படுத்திவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். அவர்களை முறையாகக் கையாளவில்லை என்றால், அது புற்றுநோயைப் போல பரவிவிடும் என்று அவர் அரசாங்கத்தை எச்சரித்தார். சட்டங்களைப் பின்பற்றாத புலம்பெயர்ந்தோரின் அணுகுமுறை காரணமாக, கோவிட்டுக்கு எதிரான நமது போராட்டம் தோல்வியடையும் என்றும் அவர் கூறினார். விக்னேஸ்வரனின் கருத்துக்கள் பலரால் ஆதரிக்கப்பட்டன. நிச்சயமாக உணவகங்கள் மற்றும் முடிதிருத்தும் கடைகளில் உள்ள இந்தியத் தொழிலாளர்களைப் பற்றி அவரிடம் கேட்டிருந்தால், அவர் அதைப் பற்றி மற்றொரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கலாம்.

பல அரசியல் கட்சிகளும் வலதுசாரி தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளைத் தாக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகின்றன. ஏனென்றால், அவர்கள் எளிதான இலக்குகள், அவர்களுக்கு வீடுகள் இல்லை, மிக முக்கியமாக அவர்கள் தேர்தலில் வாக்குகளை கொண்டு வரப்போவதில்லை.

கடந்த ஒரு வருடத்தில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த இரண்டு கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன்; ஒன்று, மனிதவள அமைச்சு மற்றும் முதன்மை தொழில்துறை அமைச்சாலும் மற்றொன்று, ஹிஷாமுடின் யூனுஸ் தலைமையிலான வெளிநாட்டு தொழிலாளர்கள் சுயாதீன குழுவினராலும் ஏற்பாடு செய்யப்பட்டவை. வெளிநாட்டு தொழிலாளர்களின் கொள்கைகள் மற்றும் நிர்வாகத்தை சீராக்க பக்காத்தான் ஹராப்பான் அமைச்சரவையால் அமைக்கப்பட்ட குழு இதுவாகும்.

இந்த இரண்டு கூட்டங்களிலும், 80 விழுக்காடு முதலாளிகளே கலந்துகொண்டனர், அரசாங்கம் அந்நியத் தொழிலாளர்களை நாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதிலேயே அவர்கள் குறியாக இருந்தனர். மலேசியத் தொழிலாளர்கள் சோம்பேறிகள், வேலைகளை அதிகம் தேர்வு செய்பவர்கள் என்று அவர்கள் கடுமையாக வாதிட்டனர். மகாதீர்கூட இதைச் சொல்லியிருக்கிறார். இந்தச் சந்திப்புகளின் போது, ​​என்னைப் போன்ற சிறுபான்மையினர் புலம்பெயர்ந்தோரைக் கையாள்வதில் மிகவும் வெளிப்படையான கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டுமென வாதிடுவோம், மலிவான தொழிலாளர் கொள்கைகள் வேண்டாம் எனவும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குச் சிறந்த வசதிகள் – வேலையிடம் மற்றும் அவர்கள் வசிக்கும் விடுதிகள் – ஏற்பாடு செய்துகொடுக்க வேண்டும் என்றும் வாதிடுவோம். ஆனால், பொதுவாக எங்கள் கருத்துக்கள் மிகவும் செல்வாக்கற்றவையாகவே இருக்கும்; மேலும், இந்தத் தொழில்களுக்குத் தொழிலாளர்களை வழங்க முடியுமா என எங்களுக்கு எப்போதும் சவால்கள் விடப்படும்.

மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) பிற அமைப்புகளுடன் – புலம்பெயர் தொழிலாளர் உரிமை சீரமைப்புக் கூட்டணி (The Migrant Workers Right to Redress Coalition (MWR2R)) – இணைந்து, புலம்பெயர்ந்தோர் பிரச்சனைகளைக் கையாள்வது குறித்து சில விரிவான திட்டங்களை வகுத்துள்ளோம். இந்தத் திட்டங்களுக்குத் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளிடம் இருந்தும்கூட ஒருமித்த கருத்து வந்தது. ஆனால், இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், சிறப்பு சுதந்திர அமைச்சரவைக் குழுவின் அறிக்கை பொதுவில் இது பகிரப்படவில்லை. இந்த அறிக்கை அரசாங்கத்தின் மற்றும் பெருவணிகங்களின் நலனுக்கு எதிரானது என்பதால் பொதுவில் இது பகிரப்படாது என்பது எங்கள் கருத்து. ‘புலம்பெயர்ந்த தொழிலாளர்’ என்பது பெரிய வணிகச் சந்தையாகும், என்னை நம்பவில்லை என்றால், ஜாஹிட் ஹமீடியிடம் கேளுங்கள்.

இன்று மலேசியர்கள் சிங்கப்பூரில் நடப்பதைப் பற்றி கவலைப்படுகிறார்கள். சிங்கப்பூரில் மொத்தம் 13,624 கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளன, தென்கிழக்கு ஆசியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அது திகழ்கிறது. பாதிக்கப்பட்ட ஐந்து பேரில் நால்வர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், காரணம் அவர்கள் தங்கும் இடங்களின் நெருக்கடியான சூழல். நாம் எப்போதும் சிங்கப்பூரைப் பணக்கார நாட்டிற்கு உதாரணமாகவே பார்க்கிறோம், ஆனால் சிங்கப்பூரில் குடியேறியவர்கள் சுரண்டப்படுவதும் அவர்களின் வாழ்க்கை நிலை மோசமாக இருப்பதும் இப்போதுதான் தெளிவாகியுள்ளது, அங்கு 300,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நெரிசலான தங்குமிடங்களில்தா வாழ்கின்றனர்.

இப்போது சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியாவிலிருந்து திரும்பி வருபவர்களைப் பார்த்து நாம் அஞ்சுகிறோம். ஆகவே, மிகவும் அடிப்படையான, கணிசமான மற்றும் மனிதாபிமான தீர்வுகளைத் தேடுவதைக் காட்டிலும், நாம் பலிகடாக்களைத் தொடர்ந்து தேடிக் கொண்டிருக்கிறோம். பெரு நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படும் உலக ஊடகங்கள் இனவெறி, இனவாதம் மற்றும் அறிவியல் பூர்வமற்ற வாதங்களைத் தொடர்ந்து பரப்பியும் ஊக்குவித்தும் வருகின்றன.

வீழ்ச்சியை நோக்கி செல்லும் ஒருவனைத் தேடும் நடவடிக்கையில், நாம் இழக்க வேண்டிய சூழலே இறுதியில் அமையும். பல்வேறு மதங்கள் மற்றும் இன பின்னணியைச் சேர்ந்த மக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதன் மூலம்தான் இந்த நெருக்கடியை நாம் சமாளிக்க முடியும். நெருக்கடி காலத்தில்; உடல்நலம், உணவு பாதுகாப்பு, வீட்டுவசதி மற்றும் புலம்பெயர்ந்தோருடன் இணக்கமாக வாழ்வது போன்ற சோசலிசக் கருத்துக்கள் உலக மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கங்களாக மாறியுள்ளன. மக்களின் தேவைகளுக்காக உலகை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியக் காலகட்டத்தில் நாம் உள்ளோம், பெரு முதலாளிகளின் பேராசையை நிறைவேற்றும் நேரம் இதுவல்ல.

எஸ் அருட்செல்வன், மலேசிய சோசலிசக் கட்சியின் தேசியத் துணைத் தலைவர்

தமிழாக்கம் :- சாந்தலட்சுமி பெருமாள்