கார்ல் மார்க்ஸ் : தொழிலாளர் வர்க்கத்தின் மூலதனம்!

சிவாலெனின் | வறுமையும் துயரங்களும் விடாமல் துரத்திக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் கூட, தனது ஏழ்மை குறித்து சிந்திக்காமல் தனது குடும்ப வறுமைக்கு வழிதேடி அலைந்து கொண்டிருக்காமல், உலகமெங்கும் ஒடுக்கப்பட்ட, வறுமையில் உழன்ற, முதலாளிகளால் உழைப்பு சுரண்டப்படும் தொழிலாளர் வர்க்கம் குறித்து சிந்தித்த மாபெரும் சமூகச் சிந்தனையாளர்தான் கார்ல் மார்க்சு என்னும் மகத்தான சமூக விஞ்ஞானி.

உலகில் தோன்றிய அனைத்து தத்துவங்களும் உலகம் எப்படி தோன்றியது, இயங்குகின்றது என சிந்தித்துக் கொண்டிருந்த சூழலில், உலகம் எப்படி தோன்றியது என்பதைக் காட்டிலும், இந்த உலகத்தை எப்படி மாற்றியமைப்பது என்றும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் சிந்தித்த தொழிலாளர் வர்க்கத்தின் மூலதனமான மார்க்சு “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள், நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால், உங்களுக்காகப் பொன்னான ஓர் உலகம் காத்திருக்கிறது” என்று தொழிலாளர் வர்க்கத்தை ஒன்றிணைக்கும் மகத்தான பணியில் மூழ்கினார்.

உலகத் தொழிலாளர்களை ஒன்றுபட அறைகூவல் விடுத்து, முதலாளி வர்க்கத்திற்குச் சிம்ம சொப்பனமாய் விளங்கிய தொழிலாளர் வர்க்கத்தின் மூலதனமும் மனித விடுதலை சிந்தனையாளருமான மார்க்சின் 202-வது பிறந்தநாள் இன்று. தான் வாழ்ந்த காலத்தில் மட்டுமின்றி, தனக்குப் பின்னரும் தனது சிந்தனை இந்தத் தொழிலாளார் வர்க்கத்திற்கு அரணாக இருக்கும் என்னும் கருத்தியலையும் செயல்பாடுகளையும் இந்த உலகிற்கு விட்டுச் சென்ற மாபெரும் சமூகப் போராளியாகவே மார்க்சு வாழ்ந்தார்.

“உலகுக்கு எந்தச் செய்திகளையும் சொல்லாத முட்டாள்தான், இறக்கும்போது கடைசியாக ஏதாவது சொல்ல வேண்டும்” என்னும் கருத்தில், உறுதியாக இருந்த மார்க்சு தாம் வாழும் காலத்திலேயே மக்களுக்காக, தொழிலாளர் வர்க்கத்திற்காக நிறைவாகவே செய்துவிட்டார் என்பது மறுத்திட முடியாத உண்மையாகும்.

வாழும் போது அவர் சரியான நகர்வையும் செயல்பாடுகளையும் செய்திருந்த காரணியத்தால், அவர் மறைந்து 137 ஆண்டுகள் கடந்தும், அவர் பிறந்து 202 ஆண்டுகள் கடந்தும், நாம் இன்னமும் தொழிலாளர் வர்க்கத்தின் ஒவ்வொரு நகர்வுகளிலும் மார்க்சின் நினைவுகளையும் அவரது காலத்தை வென்ற தத்துவங்களையும் போராட்டங்களின் வாயிலாக முன்னெடுத்துக் கொண்டு வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலாளி வர்க்கத்தால் அடிமைப்பட்டு கிடந்த தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலையைத் தனது முதன்மை இலக்காகக் கொண்டு இயங்கிய மார்க்சு, ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலில் இருந்து அவர்களை விடுவிக்கும் மாற்றத்திற்கான வழிகளைத் தனது வாழ்நாள் முழுவதும் தேடலாகக் கொண்டு களப்பணி செய்த, இந்நூற்றாண்டுகளின் சிறந்த சிந்தனையாளார் என்பதை மறுக்க முடியாது.

மார்க்சு என்னும் மந்திரச் சொல், முதலாளி வர்க்கத்திற்குக் கடும் சினத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தும் சூழலில், முதலாளி வர்க்கம் மார்க்சை வெறும் சிந்தனையாளராக சித்தரித்து அவரது ஆளுமையை ஒருவட்டத்தில் அடைக்கப் பார்க்கிறது. ஆனால், மார்க்சு தனது சிந்தனைகளுக்கும் எழுத்துகளுக்கும் சற்றும் முரண்படாமல் நேர்மையான  புரட்சியாளனாகவே இறுதி வரை வாழ்ந்தார். மனித குலத்தின் ஒட்டுமொத்த விடுதலைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் மார்க்சு தனது அத்தனை ஆற்றலையும் செலுத்தியது தான் அவர் இன்றைக்கும் பல கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களின் நினைவுகளிலும் சமத்துவத்திற்காகப் போராடும் பலரின் உணர்வுகளிலும் ஒரு பெரும் வரலாற்று பாத்திரமாக நிரப்ப செய்துள்ளது என்பது பெருமிதமான வரலாறாகும்.

1818-ம் ஆண்டு, ஜெர்மன் நாட்டின் டிரயர் நகரத்தில், நடுத்தரப் பொருளாதார வசதியுள்ள குடும்பத்தில் பிறந்தார் காரல் மார்க்சு. அங்கேயே ஆரம்ப கல்வியைக் கற்றார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் கார்ல் மார்க்ஸ் சட்டம் பயின்று கொண்டிருக்கும்போதே, ‘தத்துவம் இல்லாமல் எதுவும் முழுமை பெறாது’ என்று நம்பினார். அந்தக் காலகட்டத்தில், ஹெகலின் இயக்கவியல் தத்துவம், அன்றைய இளம் தத்துவவியல் மாணவர்களிடம் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. அதில் ஒருவராக தொடக்கத்தில் இணைந்த மார்க்ஸ், “தத்துவவாதிகள் உலக வாழ்க்கையை வியாக்கியானம் செய்கிறார்களேத் தவிர, சமூக அமைப்பை மாற்றுவது எப்படி என்பதே முக்கியமாகும். உலகைமாற்ற வெறும் சிந்தனை மட்டும் போதாது, நடைமுறை செயலாக்கம் தேவை”, என்று கூறினார்.

1844-ம் ஆண்டு, பாரிசில் முதன்முதலில் பெடரிக் ஏங்கல்சை சந்தித்தார் மார்க்சு. முதல் சந்திப்பிலேயே ஏற்பட்ட நட்பு வாழ்நாள் இறுதி வரையில் இரட்டையர்கள் என்று அழைக்கும் அளவிற்குத் தொடர்ந்தது. மார்க்சியத் தத்துவத்தை, ‘வறுமையின் தத்துவம்’ என்று விமர்சித்த புரூதோனுக்குப் பதில் கூறும் விதமாக, மார்க்ஸ் 1847-ம் ஆண்டு எழுதி வெளியிட்ட நூல் தான் “தத்துவத்தின் வறுமை”.

பெல்ஜியம் நாட்டின் பிரஸ்சல் நகரத்தில், இரகசியமாக இயங்கி வந்த ‘லீக் ஆப் ஜஸ்ட்’ என்ற அமைப்பை மக்கள் மத்தியில் பகிரங்கமாக, வெளிப்படையாக இயங்க அறிவுறுத்தினார், மார்க்ஸ். கம்யூனிஸ்டு லீக்கிற்காக மார்க்சும், ஏங்கெல்சும் இணைந்து எழுதி, 1848-ம் ஆண்டு ஜெர்மன் மொழியில் முதல் பிரதியாக வெளியிட்ட கொள்கை விளக்க குறிப்பேடுதான், உலகில் 95 மொழிகளுக்கும் அதிகமாக மொழி பெயர்க்கப்பட்ட நூலான “கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை” ஆகும். அறிக்கையின் முதல் வரிகளை “இதுவரை உள்ள வரலாறுகள் அனைத்துமே வார்க்கப் போராட்டத்தின் வரலாறுகளே” என்று மனிதகுல வரலாற்றை முழுமையாக அறிவியல் பூர்வமாக இருவரும் ஆராய்ந்து எழுதியிருப்பர். தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட கம்யூனிஸ்டு அறிக்கையை, 1930-ம் ஆண்டு குடியரசு பத்திரிகையில் முதலில் வெளியிட்டவர் தந்தை பெரியார் ஆவார்.

இன்றையத் தலைமுறை வாசிக்க தயங்கும் சூழலில், மார்க்சு தனது வாழ்நாளின் பெரும் பகுதியைக் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து படித்தும், பத்தாண்டுகளுக்கு மேல் குறிப்புகள் எடுத்தும், ஏங்கெல்சின் ஒத்துழைப்போடு எழுதிய நூல் தான் “மூலதனம்” ஆகும். உலகத் தொழிலாளர்களின் புனித நூலாகவும் உரிமை பொக்கிசமாகவும் இன்றைக்கும் போற்றப்படும் நூல்தான் மூலதனம்.

முதலாளிகள் தொழிலாளர்களின் உழைப்பை மட்டும் சுரண்டுவதில்லை, மாறாக, அவர்களின் அடக்க முடியாத பேராசைகளால், மனித இனமே வாழத் தகுதியற்ற நிலையில் இந்தப் பூமியின் இயற்கை வளங்களையும் அவர்கள் அழித்துவிடுவார்கள் என்று அன்றே அவர் எச்சரித்தும் உள்ளார். முதலாளி வர்க்கத்தின் கோர கரங்கள் நீண்டதால்தான், இன்றைக்குப் புவி வெப்பமயம் உலக நாடுகளின் முக்கியப் பிரசனையாக எழுந்துள்ளது எனலாம். மார்க்சின் சூழலியல் சிந்தனை தூரநோக்குடையதாக அன்றே உதிர்த்திருந்தது. மலேசியாவில் கூட நாம் தொடர்ந்து இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், அது தொடர்ந்து அழிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் போராடிக்கொண்டுதான் கொண்டிருக்கிறோம்.

மலேசியா உட்பட உலகின் பெரும் நாடுகளில், அரசை மக்களேத் தேர்வு செய்தும் அந்த அரசு மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாத சூழலில், உலகம் முழுவதும் கார்ப்ரெட் நிறுவனங்களும் வலதுசாரிகளின் பலமும் ஓங்கி இருக்கும் இன்றைய சூழலில், சுற்றுச்சூழலையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க கல்வி, வேலை, மருத்துவம், ஊதியம் போன்ற அடிப்படை உரிமைகளுக்கும் தொழிலாளர் வர்க்கம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் கட்டாயம் இங்கு நிலவுகிறது.

மார்க்சின் சிந்தனையும் அவரது தத்துவங்களும் தொழிலாளர் வர்க்கத்தின் சிந்தையில் மையம் கொள்ளாத வரையில், மலேசியாவில் உழைக்கும் வர்க்கம் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்க வேண்டும். மலேசியாவின் தொழிலாளர் வர்க்கமும் அதன் போராட்டங்களும் நீண்டதொரு வரலாற்றைக் கொண்டிருந்தாலும்; இன்னமும் தொழிலாளர் வர்க்கம் உரிமைக்காகத் தெருவில் போராடுவது வேதனையாகவும் வருத்தமாகவும் தான் உள்ளது.

மலேசியத் தொழிலாளர் வர்க்கம் ஒன்றிணைந்து விடக்கூடாது என்பதற்காகவே நாட்டில் இயங்கிக் கொண்டிருந்த தொழிற்சங்கங்களில் பெரும்பான்மை பிரிட்டிஷ் அரசு காலம் தொட்டே அழிக்கும் நடாவடிக்கை ஆக்கப்பூர்வமாக முதலாளி வர்க்கத்தால் மேற்கொள்ளப்பட்டும் வந்துள்ளது. நடப்பில் இருக்கும் ஒருசில தொழிற்சங்கங்களும் சத்தம் இல்லாமல் முதலாளிகளுக்காகப் பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்களின் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கிறது.

அரசு ஆதரவும் பொறுப்பற்ற தொழிற்சங்கங்களின் ஆதரவும் தங்கள் வசம் இருப்பதால் முதலாளி வர்க்கம் இந்நாட்டில் தொடர்ந்து அவர்களின் அட்டூழியங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. இன்னமும் போராட்டங்கள் மீதும், தொழிலாளர் ஒற்றுமை மீதும் நம்பிக்கை வைத்துள்ள அமைப்புகளும் தொழிலாளர் வர்க்கமும் தங்களின் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்தாலும், முதலாளி வர்க்கம் அதனை ஒரு பொருட்டாகவே மலேசியாவில் நினைப்பதில்லை.

‘பசித்தவன் வயிற்றில் தான் புரட்சி வெடிக்கும்’ என்னும் மார்க்கிய சிந்னைக்கு ஒப்ப, ஒருநாள் மலேசியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் வீதி போராட்டங்களும் உரிமை குரல்களும் புரட்சியாக வெடிக்கும். அப்போது இந்நாட்டில் அரசும் முதலாளி வர்க்கமும் தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிக்குப் பலியாவதை யாரும் தடுக்க முடியாது. தொழிலாளர் வர்க்கத்தின் கைகள் ஓங்கும் போது, முதலாளி வர்க்கம் அவர்கள் முன் மண்டியிட்டுத்தான் கிடக்கும் என்பது மறுக்க முடியாத தத்துவ உண்மையாகும்.

 

மார்க்சு இன்று நம்மோடு இல்லாவிட்டாலும் அவரது சிந்தனையும் தத்துவமும் அவர் விட்டுச் சென்ற சமூகப் போராடங்களும் தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலை சிந்தனையும் நம்மை தொடர்ந்து அவரோடு பயணிக்கச் செய்கிறது. இன்றைக்கும் உலகின் ஏதோ ஒரு மூளையில் தொழிலாளர் வர்க்கத்தின் குரலாக மார்க்சின் புகைப்படம் முதலாளி வர்க்கத்தின் சுரண்டலைத் தடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.

மார்க்சு வாழ்ந்த மாமனிதர் அல்ல, அவர் இன்றைக்கும் வாழும் புரட்சியாளர். அவரது பிறந்தநாளில், மலேசியத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் …… நமது உரிமைக்கும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம், பாதுகாப்பான வேலை இடம், எல்லா துறைகளிலும் தொழிற்சங்கம், பாலின வேறுபாடு இன்றி ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிநிகர் ஊதியம் மற்றும் நம் அடிப்படை தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென நமது முழக்கத்தை அரசிடமும் முதலாளி வர்க்கத்திடமும் முன் வைப்போம்.

தொழிலாளர் வர்க்கத்திற்காக குரல் எழுப்பும் அமைப்புகளோடும் சோசலிச அரசியல் கட்சிகளோடும் பொதுவுடமை அமைப்புகளோடும் தொழிலாளர் வர்க்கமே ஒன்றுசேர், புரட்சி செய், மார்க்சின் தத்துவங்களையும் சிந்தனை புரட்சியையும் உள்வாங்கிக் கொண்டு; தொழிலாளர் வர்க்கத்தின் கைகள் ஓங்கி உயரக் களம் காண்போம்.

தொழிலாளர் வர்க்கத்தின் கைகள் ஓங்கி உயர, கார்ல் மார்க்சு என்னும் புரட்சியாளனின் சிந்தனை நம் அனைவரிடமும் ஆழமாய் பற்றிக்கொள்ள வேண்டும். தொழிலாளர் வர்க்கம் இருக்கும் வரை வர்க்கப் போராட்டம் உயிர்ப்பிக்கும். வர்க்கப் போராட்டம் இருக்கும் வரை மார்க்சு என்னும் புரட்சி ஆயுதம் நம்மோடு பயணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது