இராகவன் கருப்பையா – நாட்டின் 4ஆவது பிரதமராக 22 ஆண்டுகளும் 7ஆவது பிரதமராக 22 மாதங்களும் மலேசியாவை வழி நடத்திய துன் டாக்டர் மகாதீர் நமது அரசியல் வானில் இன்னமும் ஓரளவு செல்வாக்கு மிக்க ஒரு சக்தியாகவே உள்ளார் என்பதை யாரும் மறுக்க முடியாது.
கடந்து பிப்ரவரி மாதத்தில் 3ஆவது முறையாக பிரதமராகும் வாய்ப்பை நூலிழையில் நழுவவிட்ட அவருடைய அடுத்த நகர்வை பெரும்பாலோர் கணிக்க முடியவில்லை என்ற போதிலும் திரைமறைவில் அரசியல் நாடகம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதை மக்கள் உணராமல் இல்லை.
எது எப்படியாயினும் பக்காத்தான் உறுப்புக் கட்சிகள் மட்டுமின்றி பெரும்பாலான மக்களும் அவர் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் என்பதுதான் நிதர்சன உண்மை.
கடந்த 2018ஆம் ஆண்டில் பக்காத்தான் கூட்டணி ஆட்சியை கைப்பற்றுவதற்கு மாபெரும் பங்காற்றிய அதே மகாதீர்தான் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி ஆட்சி கவிழ்வதற்கும் காரணமாக இருந்தார் என்பது வெள்ளிடை மலை.
2 ஆண்டுகளுக்கு முன் தாம் சிறையில் இருந்த போதும் பிறகு நீதிமன்ற வளாகத்திலும் தம்மை சந்திக்க வந்த மகாதீர் மகவும் நம்பிக்கையுடன் பேசியதாக பி.கே.ஆர். கட்சித் தலைவர் அன்வார் கடந்த மாதம் கருத்துரைத்தார்.
ஆனால் அண்மைய சம்பவங்களுக்குப் பிறகு இனிமேலும் அவரை நம்பத் தயாராயில்லை என அயல்நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
அடுத்தடுத்து தொடர்ந்தார்போல் பல வாக்குறுதிகளை அவர் மீறிவிட்டதாக அன்வார் தமது ஆதங்கத்தைக் கொட்டினார்.
ஆட்சியமைத்து 2 ஆண்டுகளில் பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது பக்காத்தானின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான ஒப்பந்தமாகும்.
ஆனால் ஒரு ஆண்டைக் கடந்தவுடன் இந்த பதவி ஒப்படைப்பு தொடர்பாக மகாதீர் அவ்வப்போது முன்னுக்கு பின் முரணாக கருத்துகளை வெளியிடத் தொடங்கியது அனைவருக்கும் சற்று அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
இதனால் அவர் மீதான நாட்டு மக்களின் நம்பிக்கை சன்னம் சன்னமாக குறைய ஆரம்பித்த போதிலும் அன்வார் தமது உணர்வுகளை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் சமாளித்துக்கொண்டார்.
அன்வாரிடம் பதவி ஒப்படைக்கும் எண்ணம் தொடக்கத்திலிருந்தே மகாதீரிடம் இல்லை என்ற உண்மையை பிறகுதான் எல்லாருமே உணர்ந்தார்கள்.
பிரதமர் பதவிக்காக அன்வார் அலைகிறார் என ஆட்சி கவிழ்ந்தவுடன் சற்றுத் திமிராக பேசிய மகாதீர் மீது மக்கள் வெறுப்படையத் தொடங்கி விட்டனர் என்றால் அது மிகையாகாது.
தம்மை வெளிப்படையாகவே இவ்வாறு அவமானப்படுத்திய மகாதீர் மீது ஆத்திரமடையாத அன்வார் பெருந்தன்மையோடு மௌனம் காத்து தமது மதிப்பை உயர்த்திக்கொண்டார்.
பி.கே.ஆர். கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் அஸ்மின் அலி சிலாங்கூர் மந்திரி பெசாராக சிறப்பாகவே செயலாற்றுவதால் அவரை மத்திய அமைச்சரவைக்குக் கொண்டு வர வேண்டாம் என 14ஆம் பொதுத் தேர்தலுக்குப் பிறகு மகாதீருக்கு ஆலோசனை கூறினார் அன்வார்.
ஆனால் அதனை சற்றும் பொருள்படுத்தாத மகாதீர், பொருளாதார அமைச்சு என்ற பலமிக்க ஒரு புதிய அமைச்சை உருவாக்கி அஸ்மினிடம் அதனை ஒப்படைத்தார்.
அஸ்மினின் அரசியல் ஆதிக்கத்தை வலுவாக்கி அன்வாருக்கும் அவருக்கும் இடையில் ஒரு விரிசலை உருவாக்குவதே அதன் நோக்கம் என்பதனையும் பிறகுதான் மக்கள் தெரிந்துகொண்டார்கள்.
அந்த முயற்சியில் மகாதீர் வெற்றிகண்ட போதிலும் மக்களின் வெறுப்பை அதிக அளவில் தற்போது சம்பாதித்துக்கொண்டார்.
தமது எல்லா தவறுகளுக்கும் எப்பொழுதுமே மற்றவர்களையே பழி சொல்லி பழகிவிட்ட மகாதீர், ஆட்சி கவிழ்ந்ததற்குக் கூட முன்னாள் பிரதமர் நஜிப்தான் காரணம் என்று கூறியது வேடிக்கையாகவே உள்ளது.
எனவே மகாதீரின் சுயரூபம் வெட்ட வெளிச்சமாகிவிட்ட நிலையில், அடுத்து பொதுத் தேர்தலில் அவருடைய நிழலை விட்டு விலகி சுயமாக செயல்படுவதே விவேகமாகும்.
மக்களின் ஆதரவு இருந்தால் மீண்டும் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என்று அவர் சொன்னாலும் இனியும் ‘மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது’ என்று பக்காத்தான் கூட்டணி கட்சிகளுக்கு நன்றாகவே தெரியும்.