ரோஹிங்கியாக்கள் : மியான்மாரின் பூர்வக்குடிகளா? குடியுரிமை பெற்றவர்களா? அல்லது ஏதிலிகளா? ~ சாந்தலட்சுமி பெருமாள்
மியான்மாரின் மேற்கே, வங்கக் கரையோரம் அமைந்துள்ளது ரகைன் மாநிலம். இங்குப் பௌத்தர்கள் (பெரும்பாலும் ரகைன் இனம்), இஸ்லாமியர்கள் (ரோஹிங்கியா, கரேன், காமன் இனம்) மற்றும் கிருஸ்தவர்களும் பிற சிறுபான்மையினரும் வாழ்கின்றனர்.
‘ரோஹிங்கியா’ என்ற சொல்லின் பொருள், அதன் தொன்மம், ஆணிவேர், வரலாறு போன்றவைக் குறித்து, பல்வேறான மாறுபட்ட கருத்துகள் நிலவிவருகின்றன. இதுவரை ரோஹிங்கியாக்களின் உண்மை வரலாறு இதுதான் என எங்கும் வரையறுத்துக் கூறப்படவில்லை.
என் தேடலின் போது கிடைத்த சில தகவல்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
அரக்கானின் அசல் குடியேறிகள் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. கிமு 3000 முதல் ரகைன்கள் அரக்கானில் வசித்து வந்ததாக ஆர்கானீஸ் நாளேடுகள் கூறுகின்றன. 4-ம் நூற்றாண்டில், அரக்கான் தென்கிழக்காசியாவின் ஆரம்பகால இந்தியமயமாக்கப்பட்ட இராஜ்யங்களில் ஒன்றாக மாறியது. முதலில் தன்யாவடியிலும், பின்னர் சக்தி வைதாலி நகருக்கும் அரக்கனீஸ் மாநிலம் மாற்றப்பட்டது. இப்பகுதியில் உள்ள சமஸ்கிருத கல்வெட்டுகள், முதல் அரக்கனீஸ் மாநிலங்களின் நிறுவனர்கள் இந்தியர்கள் என்பதைக் குறிக்கின்றன, அரக்கான் சந்திர வம்சத்தால் ஆளப்பட்டது என்று கூறப்படுகிறது. பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் டேனியல் ஜார்ஜ் எட்வர்ட் ஹால் கூறுகையில், “பர்மியர்கள் கி.பி. 10-ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை அரக்கானில் குடியேறியதாகத் தெரியவில்லை. எனவே, முந்தைய வம்சங்கள் இந்தியர்கள் என்றும், வங்காள சாயல் கொண்ட மக்கள் மீது ஆட்சி செய்யப்பட்டுள்ளதாகவும் கருதப்படுகிறது.
நிற்க ……
வங்காள விரிகுடாவில், அரக்கானின் கடற்கரைப்பகுதி, பர்மாவிற்கும் வெளி உலகத்திற்கும் இடையிலான கடல்சார் வர்த்தக மற்றும் கலாச்சாரப் பரிமாற்றத்தின் முக்கிய மையமாக இருந்தது. அரசியல், அறிவியல் அறிஞரான சைட் இஸ்லாத்தின் கூற்றுப்படி, அரபு வணிகர்கள் மூன்றாம் நூற்றாண்டிலிருந்து அரக்கானுடன் தொடர்பு கொண்டிருந்தனர், 9-ம் நூற்றாண்டிலிருந்து அரக்கானின் எல்லையில் தென்கிழக்கு வங்காளத்தின் கரையோரப் பகுதிகளில் அரபு வர்த்தகர்களின் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளது. ரோஹிங்கியா மக்களின் வரலாற்றை இந்தக் காலகட்டத்தில் இருந்து கணிக்கலாம்.
சைட் இஸ்லாத்தின் கூற்றுப்படி, அரக்கானில், ஆரம்பகால முஸ்லீம் குடியேற்றங்கள் 7-ம் நூற்றாண்டில் தொடங்கின. அரபு வர்த்தகர்களும் மதப் போதகர்களாக செயல்பட்டு, உள்ளூர் பௌத்த மக்களை இஸ்லாத்திற்கு மாற்றத் தொடங்கியுள்ளனர். உள்ளூர்வாசிகள் இஸ்லாமிற்கு மாறியது தவிர, அரபு வணிகர்கள் உள்ளூர் பெண்களை மணந்து பின்னர் அரக்கானில் குடியேறினர். திருமணம் மற்றும் மத மாற்றத்தின் விளைவாக, அரக்கானில் முஸ்லீம் மக்கள் தொகை அதிகரித்தது.
அவ்வாறிருக்க…………
தென்கிழக்காசிய பௌத்த வரலாற்று அறிஞரும், ஒரு புத்தப் பிக்குவுமான அஷோன் நயனுதாராவின் கூற்றுப்படி, அரக்கான் மக்கள் மற்றும் ரகைன் மாநிலத்தின் ஆரம்பகால அரசியல் மற்றும் மத வரலாறு குறித்த வரலாற்றுத் தகவல்களும் தொல்பொருள் சான்றுகளும் மிகக் குறைவு. அவை பெரும்பாலும், 4-ம் நூற்றாண்டில், சாண்ட்ரா பௌத்த வம்சத்தின் கீழ், பௌத்தம் மற்றும் மகாயான பாரம்பரியம் நிறுவப்பட்டது என்று கூறுகிறது. முஸ்லீம் சமூகத்தின் விரிவாக்கம் மற்றும் இஸ்லாத்தின் வளர்ச்சி ஆகியவை பின்னர் வங்காளதேசத்தின் ஒரு பகுதியில் இருந்து வந்ததாகவும், “ரோஹிங்கியா” என்ற சொல் அந்தக் காலகட்டத்தின் எந்தவொரு வட்டார உரையிலும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 20-ம் நூற்றாண்டில், ‘சிட்டகாங்’ (வங்காளதேசத்தின் ஒரு பகுதி) மாவட்டத்திலிருந்து குடியேறியவர்களின் நேரடி சந்ததியினராக இருந்த ஒரு சில வங்காள முஸ்லீம் கல்விமான்களால், இச்சொல் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக வரலாற்றாசிரியர் ஆயே சான் கூறுகிறார்.
https://en.wikipedia.org/wiki/Rohingya_people
ரோஹிங்கியாக்கள் மியான்மாரின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் வாழ்ந்தவர்கள். பெரும்பான்மை இஸ்லாமியர்களைக் கொண்ட இவர்களில், இந்துக்களும் சிறிய எண்ணிக்கையில் இருந்துள்ளனர்.
1430-களில், அரக்கான் கடலோரப் பகுதிகளுக்கு முஸ்லீம் குடியேறிகள் வந்தனர். 1784-ல் பர்மிய இராஜ்ஜியத்தால் அரக்கான் கைப்பற்றப்பட்டபோது, முஸ்லீம் மக்கள் ஒரு சிறு அளவில் அம்மாநிலத்தில் வாழ்ந்தனர். 1824-ல், பர்மா மீது போர் தொடுத்து வென்ற பிரிட்டன், 1948 வரை, பிரிட்டிஷ்-இந்தியாவின் ஒரு பகுதியாக பர்மாவை ஆண்டது. அந்நேரத்தில், வங்காளத்தைச் சேர்ந்த மற்ற முஸ்லிம்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக பர்மாவுக்குள் நுழைந்து, 40 ஆண்டுகாலத்தில் நாட்டின் முஸ்லீம் மக்களின் எண்ணிக்கையை மூன்று மடங்காக உயர்த்தினர். முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக பர்மாவில் வாழ்ந்திருந்தாலும், இரண்டாம் உலகப் போரில் தங்களுக்கு உதவியதற்காக ரோஹிங்கியாக்களுக்கு ஒரு தன்னாட்சி அரசை வழங்க பிரிட்டன் உறுதியளித்தது, ஆனால், 1948-ல் மியான்மாருக்குச் சுதந்திரம் வழங்கியபோது, அவ்வாக்குறுதியைப் பிரிட்டன் நிறைவேற்றவில்லை. ‘ரோஹிங்கியா’ என்ற பெயரைப் புலம்பெயர்ந்த மற்றும் அரக்கானில் வாழ்ந்த சிறுபான்மை முஸ்லிம்கள் ஏற்றுகொண்ட போதிலும், அரசாங்கம் அப்பெயரை ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், பர்மிய மக்கள் ரோஹிங்கியர்களை அந்நியத் தொழிலாளர்களாகவே பாவித்து, அவர்களை எதிர்த்து வந்தனர்.
(Erin Blakemor.(2019).Who are the Rohingya people? https://www.nationalgeographic.com/)
மியான்மர் அரசாங்கம் “ரோஹிங்கியா” என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல், அவர்களை வங்காளிகள், வெளிநாட்டினர், மோசமான பயங்கரவாதிகள் என்றுதான் கூறிவருகிறது. ரோஹிங்கியாக்கள் பல நூற்றாண்டுகளாக, பெரும்பான்மை பௌத்தர்களைக் கொண்ட மியான்மாரில் வாழ்ந்து வருகின்றனர். 1824 முதல் 1948 வரையில், பிரிட்டிஷ் காலனித்துவத்தின் கீழ் பர்மா இருந்தபோது, இந்தியா மற்றும் வங்காளதேசத்துக்கு இடையே குறிப்பிடத்தக்க இடப்பெயர்வு நடந்தபோது இவர்கள் பர்மாவில் குடியேறினர்.
1945-ல் பர்மா சுதந்திரம் பெற்றவுடன், அரசாங்கம் யூனியன் குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது, அதில், குறிப்பிடப்பட்ட 135 அதிகாரப்பூர்வ “பூர்வீக”இனக்குழுக்களில் ரோஹிங்கியாக்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை.
1962-ம் ஆண்டு, இராணுவ ஆட்சி, ரோஹிங்கியாக்களுக்குக் குறைவான அதிகாரப்பூர்வ ஆவணங்களை அளித்ததோடு, அவர்களின் புதிய தலைமுறையினரை முழுமையாக அங்கீகரிக்க மறுத்துவிட்டது.
(Aamna Mohdin.(2017).A brief history of the word “Rohingya” at the heart of a humanitarian crisis. https://qz.com/search/)
பல வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் அரக்கான் ரோஹிங்கியா தேசிய அமைப்பின் கூற்றுப்படி, 12-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து, பர்மாவின் அரக்கான் மாநிலத்தில், தற்போது ரகைன் என்று அழைக்கப்படும் பகுதியில் முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர்.
அதேசமயம், மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch), பிரிட்டிஷ் ஆட்சியின் போது, இன்றைய இந்தியா மற்றும் வங்காளதேசத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் இவர்கள் எனக் கூறுகிறது. இவர்களின் (தொழிலாளர்கள்) இடப்பெயர்வு, பெரும்பான்மை பூர்வீக மக்களால் எதிர்மறையாகப் பார்க்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, பிரிட்டிஷ் ஆட்சியின் போது நடந்த இடப்பெயர்வு “சட்டவிரோதமானது” என்று கருதிய அரசாங்கம், ரோஹிங்கியாக்களின் குடியுரிமையை மறுத்தது. (2000-ம் ஆண்டு மனித உரிமைகள் கண்காணிப்பக அறிக்கை)
2018.Who are the Rohingya? https://www.aljazeera.com/
பிரிட்டிஸ் காலனித்துவக் காலத்தில் இந்தியா, பர்மா, வங்காளதேசம் ஆகிய மூன்று நாடுகளிலும் மக்கள் பரிமாற்றங்களும் குடியேற்றங்களும் நிகழ்ந்தபோது, வங்காள தேசத்தின் ‘சிட்டகாங்’ வட்டாரத்திலிருந்து, ‘ஆயிரக்கணக்கான கூலிகள்’ நிலம் வழியாகவும் நீர் மார்க்கமாகவும் அரக்கான் பகுதிக்குக் குடிபெயர்ந்து வந்ததைப் பிரிட்டிஷ் ஆவணங்கள் பதிவு செய்துள்ளன. ரோஹிங்கியா மக்களின் பேசு மொழியான ‘ரோஹிங்கியா’வின் வேர் மொழி வங்காளம். வங்காளதேசத்தின் ‘சிட்டகாங்’ வட்டார வழக்கின் சாயலை இது கொண்டிருக்கிறது.
‘தமிழ்வின்’ இணையத்தளம்
இப்படியாக, ரோஹிங்கியா மக்களின் பூர்வீகம் குறித்து பலதரபட்ட தகவல்கள் உள்ளபோதிலும், பிரிட்டனின் காலனித்துவ ஆட்சியின் போது, ஆசிய நாடுகளுக்கு மத்தியில் நடந்த தொழிலாளர்கள் இடப்பெயர்வில், வங்காளதேசத்திலிருந்து ரகைன் வந்த முஸ்லிம்கள்தான் ‘ரோஹிங்கியாக்கள்’ என்பதற்கான சான்றுகளே அதிகமாக உள்ளன.
பிரிட்டனின் மூலவள சுரண்டலுக்கு மத்தியில் ஆசிய மக்களின் இடப்பெயர்வு
பிரிட்டன் தனது வணிகத்திற்காக, ஆசியக் காலனித்துவ நாடுகளில் இருந்து மூலவளங்களைச் சுரண்டியது; அந்நாட்டு மக்களின் விவசாய விளைபொருள்களைப் பறித்ததோடு, அதிக வரி மற்றும் சட்டதிட்ட அடக்குமுறைகளையும் கட்டவிழ்த்துவிட்டது. இதனால் ஏற்பட்ட உணவு பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் செத்து மடிந்த நேரத்தில், எஞ்சிய மக்கள் பஞ்சம் பிழைக்க தங்கள் பூர்வீக இடத்தைவிட்டு நாடோடிகளாக வெளியேறினர்.
பிரிட்டன் காலனியாதிக்கம், தமிழக மக்களை உலக நாடுகள் பலவற்றிற்குக் கூலிகளாகப் பஞ்சம் பிழைக்க இழுத்துச் சென்றதுபோல, வங்காளதேசப் பஞ்சத்தின் போது அந்நாட்டு மக்களைப் பர்மாவுக்கு அடிமைகளாகக் கூட்டிச்சென்றது.
அக்காலகட்டத்தில், ‘ஆசியாவின் தானியக் கிண்ணம்’ என்று அழைக்கப்பட்ட பர்மாவில் அதிகளவு நெல் உற்பத்தி செய்யப்பட்டதோடு; பர்மா தேக்குகளும் உலகப் புகழ் பெற்றிருந்தன. ஆக, தேக்கு மரம் மற்றும் நெல் உற்பத்திக்காக ‘பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி’யால் வங்காள தேச இஸ்லாமியர்கள் பர்மாவுக்குக் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஒரே ஆட்சியின் கீழ் இருந்த வங்காள தேசத்திற்கும் பர்மாவுக்கும் இடையிலான இடப்பெயர்வாகவே இது கருதப்பட்டது. வங்க இஸ்லாமியர்களை ‘அந்நியர்கள்’ அல்லது ‘கலார்’ (Kalar – அந்நியர் என்ற பொருள்) என்றே பர்மா நிர்வாக ஆவணங்களில் பிரிட்டிஷ் குறிப்பிட்டிருந்தது. இரண்டாம் உலகப் போரின் போது, பிரிட்டன், நேச நாடுகளுக்கு ஆதரவாக ரகைன் இஸ்லாமியர்களும், ஜப்பானியப் படைக்கு ஆதரவாக ரகைன் பௌத்தர்களும் போரிட்டனர்.
இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்த நிலையில், பிரிட்டன் பர்மாவை விடுதலை செய்து, பெரும்பான்மை பௌத்தர்களிடம் ஒப்படைத்தது. பௌத்தர்களின் நிர்வாக அதிகாரத்தை எதிர்த்த ரோஹிங்கியா முஜாஹிடின்கள், தங்களுக்கான ‘இஸ்லாமிய தன்னாட்சி பிரதேசம்’ கோரி ஆயுதப் போராட்டத்தில் இறங்கினர்.
இரண்டாம் உலகப் போரின் போது, ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் ரகைனின் வடக்குப் பகுதியிலும் பௌத்தர்கள் தென் பகுதியிலும் குடியேறினர். ரோஹிங்கியாக்கள் வடக்குப் பகுதியை, கிழக்கு பாக்கிஸ்தானாக இருந்த இன்றைய வங்காளதேசத்துடன் இணைக்கக்கோரினர்.
ரோஹிங்கியர்கள் மீதான இன ஒடுக்குமுறை
பர்மாவின் பல தேசங்களை, ‘ஒன்றியம்’ என்ற ஒற்றை நிர்வாகத்திற்குள் வடிவமைத்து ஆண்டது பிரிட்டன். இதனால், பெரும்பான்மை தேசிய இனங்களால் சிறுபான்மை தேசிய இனத்தவர் ஒடுக்குமுறைக்கு ஆளாயினர். இது ஒருபுறம் இருக்க, பண்பாடு, மொழி, இனம், மதம் என அனைத்தாலும், மியான்மார் பௌத்தர்களிடமிருந்து வேறுபட்டிருந்த ரோஹிங்கியாக்கள் அரசாலும் இராணுவத்தாலும் ஒடுக்கப்பட்டு வந்தனர். 2010-க்குப் பிறகு அமைந்த சீர்திருத்தப்பட்ட ஜனநாயக ஆட்சியிலும் ரோஹிங்கியாக்களுக்கு எதிரான இன அழிப்பு தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. அந்நாட்டின் 135 தேசிய இனங்களின் பட்டியலில் சேர்க்கப்படாமல், ரோஹிங்கியாகளின் அடிப்படை குடியுரிமை மறுக்கப்பட்டதற்கு, முறையாக ஆவணப்படுத்தாத பிரிட்டனின் அலட்சியப்போக்கும் ஒரு காரணம்.
இரண்டாம் உலகப் போரின் காரணமாக, பர்மாவிலிருந்து இந்தியா மற்றும் பாக்கிஸ்தானுக்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர்கள், ‘பாக்கிஸ்தானியர்கள்’ என்று கூறப்பட்டு, 1948-க்குப் பிறகு, தங்கள் வாழிடங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்படவில்லை. 1971-ல், பாக்கிஸ்தானில் இருந்து வங்காளதேசம் பிரிந்தபோது, ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ரகைனுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தனர்.
ரகைனிலிருந்து இந்தியா, பாக்கிஸ்தானுக்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர்கள், பாக்கிஸ்தானிலிருந்து (வங்காளதேசம்) ரகைனுக்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர்கள், நூற்றாண்டுகளாக ரகைனிலேயே வாழ்ந்த இஸ்லாமியர்கள் என 3 பிரிவுகளைச் சார்ந்த இஸ்லாமியர்கள் இருந்தபோதும், அனைவரையும் ‘வந்தேறி வங்காளிகள்’ எனத் திட்டமிட்டு, அரசாங்கத்தால் கருத்து பரப்புரை செய்யப்படுகிறது.
1978-ல், சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அரசு மேற்கொண்ட கடும் இராணுவ நடவடிக்கை ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் வங்காளதேசத்திற்குப் புலம் பெயரக் காரணமாக அமைந்தது.
குடியுரிமை மறுப்பு
1974-ம் ஆண்டு, பர்மாவில் உள்ள அனைத்து குடிமக்களும் ‘தேசியப் பதிவு அட்டை’களைப் பெற்றபோது, ரோஹிங்கியாக்கள் ‘வெளிநாட்டு பதிவு அட்டை’களைப் பெற மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். 1982-ல் வந்த புதிய குடியுரிமை சட்டம் நிலைமையை மேலும் மோசமாக்கியது, பிற மியான்மர்களுக்கு நடுவே, ரோஹிங்கியாக்கள் இரண்டாந்தர குடிமக்களாக வாழ நேர்ந்தது. அவர்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டன, அனுமதியில்லாமல் அவர்கள் இடமாற்றம் மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டது, இதனால் அவர்கள் வேலை செய்ய இயலாமல் நெருக்கடியில் சிக்கினர்.
அதுமட்டுமின்றி, அரசிற்கெதிராக நடத்தப்பட்ட தேசிய இனங்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த, ரகைன் மாநிலத்தில் இராணுவ முகாம்களும் குடியிருப்புகளும் அமைக்க; 1990-களில் ரோஹிங்கியா இஸ்லாமியர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன. இதனால் அவர்கள் உள்நாட்டு அகதிகளாக, தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேறி, வடப் பகுதியை நோக்கி நகர்ந்தனர்.
அதேக் காலகட்டத்தில், ‘மாதிரி கிராமங்கள்’ என்ற ஒரு திட்டத்தை அரசாங்கம் அறிமுகம் செய்தது. இத்திட்டத்திற்காகவும் இஸ்லாமிய ரோஹிங்கியாக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டதோடு, உருவாக்கப்பட்ட மாதிரி கிராமங்களில், மியான்மாரின் அங்கீகரிக்கப்பட்ட இனங்களின் குடியேற்றம் நிகழ்த்தப்பட்டது. இதன்வழி, அதிகமான ரகைன் பௌத்தர்கள் அங்கு குடியேற்றப்பட்டனர்.
இனப்பெருக்கக் கட்டுப்பாடு
1990-ல், மியான்மார் அரசாங்கம், ரகைன் மாநிலத்தவர் திருமணம் செய்துகொள்ள, அரசிடம் கட்டாயம் அனுமதி பெற வேண்டுமெனச் சட்டம் போட்டது. ரகைன் மாநிலம் என்று குறிப்பிட்ட போதிலும், இது ரோஹிங்கிய இஸ்லாமியர்களைக் குறிவைத்து இயற்றப்பட்ட சட்டமாகும். இந்த ‘அரசின் அனுமதி சீட்டு’ பெற அவர்கள் சில பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர், இப்பரிசோதனைகளில் சில, இஸ்லாமியர்களின் மத உணர்வுக்கு எதிராக இருந்தன. அனுமதி சீட்டு வழங்குதல் மற்றும் பரிசோதனை செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்ட மியான்மார் காவல்துறையினருக்கு ரோஹிங்கியர்கள் இலஞ்சம் கொடுத்தனர், பல சமயங்களில் காவல்துறையினரின் பாலியம் தொந்தரவுக்கு ரோஹிங்கியப் பெண்கள் பலியாயினர்.
அனுமதி பெறச் செல்லும் பெண்களிடம் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது என்று மியான்மார் அரசாங்கம் உறுதிமொழி வாங்கிக்கொண்டது. வாக்குறுதியை மீறும் பெண்களுக்குப் பத்தாண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்பட்டது. 2008-ம் ஆண்டு, ‘மக்கள் தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கை’ என்ற பெயரில், ரோஹிங்கியாக்களிடம் இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு உபகரணங்கள் கட்டாயமாக திணிக்கப்பட்டன.
அரசாங்கம் மேற்கொண்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, ரகைன் இஸ்லாமியர்கள், ‘ரோஹிங்கியாக்கள்’ என்று பதிவு செய்யாமல், ‘வங்காளிகள்’ என்று பதிவு செய்ய வற்புறுத்தப்பட்டனர். அதனை மீறி, ரோஹிங்கியா என்று பதிவு செய்தவர்களைக் கைது செய்து அச்சுறுத்தியது அரசாங்கம்.
வழிபாட்டுத் தளங்கள் & பள்ளிகள் மீது தாக்குதல்
2001-ல், அரசாங்கத்தின் ஆதரவோடு ரோஹிங்கியாக்களின் வழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் (கும்பல் தாக்குதல் – mob attacks) நடத்தப்பட்டது. இதன்போது, கிட்டதட்ட 28 மசூதிகள் மற்றும் இஸ்லாமியப் பள்ளிகள் தாக்கப்பட்டன. 2002-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை ஒன்று, அங்கீகரிக்கப்படாத மசூதிகள் மற்றும் இஸ்லாமியப் பள்ளிகளை மூட உத்தரவிட்டது. இவ்வாறு மூடப்பட்ட ரோஹிங்கியாக்களுக்குச் சொந்தமான கட்டடங்களில் அரசாங்க நிர்வாக அலுவலகங்கள் அமைக்கப்பட்டன. 2003-ம் ஆண்டு, அஷின் விராத்து எனும் தேரவாத பௌத்த துறவியின் தலைமையில், பௌத்தர்களுக்கிடையே, இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இதன் காரணமாக கைது செய்யப்பட்ட அஷின் விராத், பின்னர் விடுதலை செய்யப்பட்டார். 2012-ல் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்த தாக்குதலுக்கு அவரும், அவரின் ‘969’ இயக்கமும்தான் முக்கியக் காரணமாக அமைந்தது.
அரசியல் பலியாடுகளான ரோஹிங்கியாக்கள்
சுமார் அரை நூற்றாண்டு காலமாக, நிலையில்லா அரசியல், வன்முறை, தொடர் இடர்பெயர்வுகளால் ரகைன் மாநிலம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளது. தேசிய இனங்களின் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக, இராணுவத்திற்கு அதிகம் செலவிட்ட அரசாங்கத்தால், மக்களுக்கான சமூக நலத் திட்டங்களுக்காக செலவிட முடியவில்லை.
பறிபோகும் தங்களது உரிமைகளை நிலைநிறுத்த, ரகைன் பௌத்தர்கள் குறைந்தபட்சம் தன்னாட்சி அதிகாரம் கொண்ட மாநிலம் வேண்டுமெனக் கோரினர். ஆனால், திருத்தியமைக்கப்பட்ட சட்டத்தால், கொஞ்ச நஞ்சமிருந்த மாநில அதிகாரங்களும் பறிக்கப்பட்டதோடு, அதிகாரம் மிகுந்த மியான்மார் மத்திய (பெரும்பான்மை பாமர் இனம்) அரசாங்கத்துடன் ரகைன் இணைக்கப்பட்டது. பாமர் இன ஆட்சியாளர்களால் அரசியல் மற்றும் இன ரீதியாக புறக்கணிக்கப்பட்ட ரகைன் பௌத்தர்களின் கோபம், மதவெறியின் அடிப்படையில் ரகைன் இஸ்லாமியர்கள் மீது திருப்பிவிடப்பட்டது.
மியான்மாரின் இராணுவ அடக்குமுறை ஆட்சிக்கு, உலக அளவில் எழுந்த அழுத்தம் மற்றும் உள்நாட்டுப் போராட்டங்கள் காரணமாக 2010-ல் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதுவரை, குடியுரிமை இல்லாமல் வாழ்ந்த ரோஹிங்கியாக்களுக்குத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அடையாள அட்டை வழங்கப்பட்டது, இதனை மறுக்கப்பட்ட தங்களின் உரிமைகளை மீளப்பெறுவதற்கான ஒரு வாய்ப்பாக ரோஹிங்கியாக்கள் நம்பினர். ஆனால், ரோஹிங்கியாக்களுக்கு வழங்கப்பட்ட இந்த வாய்ப்பை, தங்களுக்கு எதிரான அச்சுறுத்தலாக ரகைன் பௌத்தர்கள் எண்ணினர். அதனைத் தொடர்ந்து, மதவெறியர்களால் திட்டமிடப்பட்ட வன்முறைக் கருத்துகள் பரப்பப்பட்டன; ரோஹிங்கியாகளுக்கு வாக்குரிமை வழங்கக்கூடாது எனப் புத்தப் பிக்குகளால் நாடு தளுவிய அளவில் போராட்டங்கள் வெடித்தன.
ரோஹிங்கியாக்களுக்கு வழங்கப்பட்ட வாக்களிப்பு உரிமை காரணமாக, தனது வெற்றிவாய்ப்பு பறிபோகக்கூடும் என ரகைன் தேசிய வளர்ச்சி கட்சி எண்ணியப் போதிலும், தேர்தல் முடிவுகள் அவர்களுக்குச் சாதகமாகவே அமைந்தது. இருப்பினும், அக்கட்சியைச் சார்ந்த ரகைன் இன வேட்பாளரை முதல்வராக நியமிக்காமல், மியான்மார் இராணுவத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான மவுங்க் மவுங்க் ஓன் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால், ரகைன் மாநில மக்கள் கோபமடைந்தனர். அரசிற்கெதிரான கொந்தளிப்பை மத ரீதியாக திசைத்திருப்ப, ‘969 இயக்கம்’ ரகைன் பௌத்தர்களை, ரோஹிங்கியா இஸ்லாமியர்களுக்கு எதிராக திசை திருப்பியது, ‘வந்தேறி வங்காளிகள்’ என்ற வெறுப்புப் பிரச்சாரங்கள் மீண்டும் ஆங்காங்கே வலுபெற்றன.
2017, ஆகஸ்ட் மாதத்தில், ரோஹிங்கியாக்களுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து அவர்களைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட ‘அரக்கான் ரோஹிங்கியர் பாதுகாப்பு இராணுவம்’, மியான்மார் பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 12 பேரைத் தாக்கிக் கொன்றது. அதனைத் தொடர்ந்து, ரோஹிங்கியாக்களுக்கு எதிரான இன அழிப்பு உச்சக்கட்டத்தை அடைந்தது.
இதற்கு இனவாத பௌத்தம் மட்டும் காரணமல்ல, மாறாக இதற்குப் பின்னால், இந்தக் கொடூரங்களை ஆதரிக்கும் சீனா, அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் மௌனமும், அதன் விளைவாக மியான்மார் அரசாங்கம் பெருகின்ற இராணுவ, வணிக நலனும்கூட இருக்கிறது.
அன்று பிரிட்டன் தனது வல்லாதிக்கத்தைக் காலனித்துவ ஆசிய நாடுகளில் நிலைநாட்ட தொடக்கி வைத்த இன அழிப்பை, இன்று இவை தங்கள் அரசியல் நலனுக்காக, வணிக இலாபத்திற்காக தொடர்கின்றன, அதில் இந்த இஸ்லாமிய ரோஹிங்கியாக்கள் பந்தாடப்படுகின்றனர்.
பிரிட்டனின் காலனித்துவ ஆட்சியின் அலட்சியப் போக்கும், நவீனகால மியான்மார் நூற்றாண்டுகளாக அங்கு வாழ்ந்து வரும் அந்த மக்களை அங்கீகரிக்க மறுத்துவிட்டதும், இன்று அரங்கேறி கொண்டிருக்கும் ரோஹிங்கியா மக்கள் இனப்படுகொலைக்கும் இடப்பெயர்வுக்கும் மூலக்காரணமாக அமைந்துவிட்டன.
‘வல்லரசுகளுடனான மியான்மாரின் உறவு’
அடுத்தப் பகுதியில் தொடரும்….
குறிப்புகள் / மேற்கோள்கள் :-
- Aamna Mohdin.(2017).A brief history of the word “Rohingya” at the heart of a humanitarian crisis. https://qz.com/search/)
- 2018.Who are the Rohingya? https://www.aljazeera.com/
- Erin Blakemor.(2019).Who are the Rohingya people? https://www.nationalgeographic.com/)
- Figure at a Glance.UNHCR-Malaysia 2001-2020
- http://www.keetru.com/
- https://en.wikipedia.org/wiki/Main_Page
- https://en.wikipedia.org/wiki/Rohingya_people
- https://www.tamilwin.com/
- https://www.vinavu.com/