8 படங்கள் ஓடிடி தளத்தில் நேரடி வெளியீடு: தியேட்டர்கள் அதிர்ச்சி

சென்னை : கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் திறக்க இன்னும் சிலகாலம் ஆகும் என்பதால் இந்திய அளவில் 8 படங்கள் ஓடிடியில் (ஓவர் தி டாப் மீடியா – அதாவது இணையதளங்களில் நேரடியாக வாடிக்கையாளர்கள் பார்வைக்கு வருவது) வெளியாகின்றன. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்து, இப்படியே போனால் தொடர்ந்து தியேட்டர்களை நடத்த முடியுமா என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

கொரானோ ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு 50 நாட்களுக்கும் மேலாகிறது. படங்களைத் தயாரித்து முடித்து ஏப்ரல், மே மாதங்கள் வெளியீட்டிற்காக வைத்திருந்தவர்களின் நிலை கடினமான சூழலை சந்திக்க வேண்டி இருக்கிறது.

எனவே, தியேட்டர்களில் வெளியிடுவதற்கு முன்பாகவே ஓடிடி தளங்களில் சில படங்களை வெளியிட பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என்ற தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து மேலும் சில தமிழ்ப் படங்கள் வெளிவரும் என்று சொல்லப்பட்டது.

அந்த வரிசையில் அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ள ‘பெண்குயின்’ படமும் இடம் பிடித்துவிட்டது. ‘பொன்மகள் வந்தாள்’ படம் மே 29ம் தேதியும், ‘பெண்குயின்’ படம் ஜுன் 19ம் தேதியும் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நேற்று இந்தியில் அமிதாப்பச்சன் நடித்துள்ள ‘குலாபோ சித்தாபோ’ படம் ஜுன் 12ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இப்போது மேலும் 4 படங்கள் நேரடியாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

‘லா’ என்ற கன்னடப் படம் ஜுன் 26ம் தேதியும், ‘பிரெஞ்ச் பிரியாணி’ என்ற கன்னடப்படம் ஜுலை 24ம் தேதியும், வெளியாக உள்ளன.

‘சகுந்தலா தேவி’ என்ற ஹிந்திப் படம், ‘சுபியும் சுஜாதாவும்’ என்ற மலையாளப் படம் தேதி குறிப்பிடாமல் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அடுத்தடுத்து தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய படங்கள் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ஒட்டு மொத்த திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு

ஓடிடியில் ரிலீஸ் செய்வதால் தயாரிப்பாளர்களுக்கு ஓரளவுக்கு லாபம் தான். அதிலும் தற்போதைய சூழலில் வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட முடியாமல் படத்தை முடித்தும் ரிலீஸ் செய்ய முடியாத சூழல் நிலவுவதால் தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர். ஏதோ கிடைத்த வரைக்கும் லாபம் என தயாரிப்பாளர்கள் பலரும் ஓடிடி தளத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே தியேட்டருக்கு வரும் மக்களின் கூட்டம் நாளுக்கு நாள் குறைந்து வரும் சூழலில் மக்கள் வீட்டில் இருந்தே படம் பார்க்க தயாராகிவிட்டால் எதிர்காலத்தில் தியேட்டர்களின் நிலைமை கேள்விக்குறியாகிவிடும் என இவர்கள் பயப்படுகின்றனர்.
ஓடிடியில் ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளர்களின் படங்களை எதிர்காலத்தில் இனி தியேட்டரில் திரையிட போவது இல்லை என தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் வருங்காலங்களில் தியேட்டர் உரிமையாளர்கள் – தயாரிப்பாளர்கள் இடையே பிரச்னை உருவாக வாய்ப்புள்ளது. இதை எப்படி தீர்ப்பது என தமிழ் திரையுலகின் பல்வேறு பிரிவை சேர்ந்து கூடி பேசி ஒரு முடிவெடுத்தால் மட்டுமே நல்ல தீர்வு கிடைக்கும்.

dinamalar