இந்திய எல்லையை இணைத்து வரைபடம் – நேபாளத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு

இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா

இந்திய எல்லையை நேபாளத்துடன் இணைத்து புதிய வரைபடம் வெளியிடப்பட்டதற்கு இந்தியா தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி: இந்தியாவுக்கு மிக நெருங்கிய நட்பு நாடாக நேபாளம் இருந்து வந்தது. இந்த நிலையில் சமீப காலமாக அதன் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே 1800 கி.மீ. நீள எல்லை உள்ளது. இதில் உத்தரகாண்ட் மாநிலத்தில் லிபுலேக் என்ற கணவாய் இருக்கிறது. அதையொட்டி லிம்பியாதுரா, கலாபாணி ஆகிய இடங்களும் அமைந்துள்ளன. இவை இந்தியாவுக்கு சொந்தமான பகுதியாகும்.

ஆனால் நேபாள அரசின் நில மேலாண்மை துறை நேற்று புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டது. அதில் இந்த 3 பகுதிகளையும் நேபாள பகுதியாக காட்டி வரை படத்தை தயாரித்து உள்ளனர்.

இதன்படி சுமார் 335 கி.மீ. நீள இந்திய பகுதியை தங்கள் நாட்டின் பகுதி என்று காட்டி இருக்கிறார்கள்.

இமயமலையில் உள்ள இந்துக்களின் புனித இடமான கைலாச மலைக்கு செல்வற்கான புதிய பாதை ஒன்றை இந்தியா உருவாக்கி உள்ளது. 80 கி.மீ. தூரம் கொண்ட இந்த பாதை லிபுலேக் வரை செல்கிறது.

இந்த பாதையை ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கடந்த 8-ந்தேதி தொடங்கி வைத்தார். இதற்கு அப்போதே நேபாளம் எதிர்ப்பு தெரிவித்தது.

இதுசம்பந்தமாக நேபாளத்தில் உள்ள இந்திய தூதரை அழைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள்.

இந்த நிலையில் தான் இந்த புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 3 பகுதிகளையும் தங்கள் நாட்டின் பகுதி என்று காட்டியிருக்கிறார்கள்.

1816-ம் ஆண்டு நேபாளத்துக்கும், அப்போதைய இந்திய ஆங்கிலேயே அரசுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதுசம்பந்தமாக நேற்று பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய நேபாள பிரதமர் கே.பி. சர்மாஒலி வரை படத்தில் உள்ள அனைத்து இடங்களும் நேபாளத்திற்கு சொந்தமானது. ஆனால் அங்கு இந்தியா ராணுவத்தை நிறுத்திக் கொண்டு நேபாள மக்கள் அங்கு செல்வதை தடுத்து வருகிறது என்று கூறினார்.

இதுசம்பந்தமாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறும் போது, நேபாள – இந்தியா இடையேயான எல்லைப் பகுதி எது என்பது நேபாளத்திற்கு நன்றாக தெரியும். இப்போது வெளியிட்ட வரைபடம் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒருதலைபட்சமானது. வரலாற்று ரீதியாகவும், நியாயப்படியும் தவறான செயல்.

இது இந்திய இறையாண்மைக்கு இந்த பகுதி ஒற்றுமைக்கும், இழுக்கை ஏற்படுத்தும் செயலாகும். இந்த எல்லை பிரச்சினை தொடர்பாக உரிய பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று கூறியுள்ளார்.

இதுசம்பந்தாக ராணுவ தளபதி நாராவானே கூறும் போது, சிலர் தூண்டுதலால் இதுபோன்ற எல்லை பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அந்த பகுதியில் புதிதாக அமைத்துள்ள சாலை முழுவதும் இந்திய பகுதியிலேயே அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதில் பிரச்சினையே இல்லை என்று கூறினார்.

சீனாவை குறிப்பிட்டே அவர் சிலர் தூண்டுதல் இருக்கிறது என்று மறைமுகமாக குற்றம்சாட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

malaimalar