பிரதமர் மோடி ரஷ்யா வர அழைப்பு விடுத்தார் ரஷ்யா அதிபர் புதின்

பிரதமர் மோடி ரஷ்யா வர வேண்டும் என, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அவர் ரஷ்யதுணைப் பிரதமர் டெனிஸ் மான்ட்ரோ, வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் உட்பட பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதினை, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அப்போது அதிபர் புதின் கூறியதாவது: உக்ரைன் விஷயத்தில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து பிரதமர்மோடியுடன் பேசினேன். இப்பிரச்சினையை அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகிறார் என்பதை நான் அறிவேன். இந்த விவகாரம் குறித்து இந்தியாவும், ரஷ்யாவும் தொடர்ந்து ஆலோசிக்கும்.

உலகளவில் எல்லாவிதமான நெருக்கடிகள் ஏற்பட்டபோதிலும், ஆசியாவில் உள்ள எங்களின் உண்மையான நட்பு நாடான இந்தியாவுடன் உறவு படிப்படியாக அதிகரித்து வருவதை கண்டு ரஷ்யா மகிழ்ச்சியடைகிறது. எங்களின் அன்புக்குரிய நண்பர் பிரதமர் மோடிரஷ்யா வந்தால் நாங்கள் நிச்சயமாக மகிழ்ச்சியடைவோம். இருதரப்பு உறவு, உலக விஷயங்கள் குறித்து நம்மால் ஆலோசிக்க முடியும். நாங்கள் பிரதமர் மோடியை பார்க்க விரும்புகிறோம் என்பதை அவரிடம் தெரிவிக்க வேண்டும்.

இந்தியாவில் அடுத்தாண்டில், பொது தேர்தல் நடைபெறவுள்ளதால், அரசியல் நிகழ்ச்சிகள் மிகவும் பரபரப்பாக இருக்கும். எங்கள் நண்பர்களுக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துகள். எந்த அரசியல் அணி ஆட்சிக்கு வந்தாலும், நமது நாடுகள் இடையேயான பாரம்பரிய நட்பு எப்போதும் நிலைத்து நிற்கும். இவ்வாறு அதிபர் புடின் கூறினார்.

இந்தியா மற்றும் இந்திய தலைவர்களுக்கு, ரஷ்ய அதிபர் புதின் அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்கு, உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடந்த கொண்டவிதம் முக்கிய காரணம். இது போருக்கான காலம் இல்லை என ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்கள் இருவரிடமே பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

மேலும் உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷ்யாவுக்கு மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைவிதித்தும், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது. இதுகுறித்து வெளியுறவத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஏற்கெனவே கூறுகையில், ‘‘உலக நாடுகளுடன் நாம் நட்புறவை வளர்க்க வேண்டும். அதே நேரத்தில், நாட்டு நலனுக்கு எது நன்மையோ, அதற்கு தேவையானதை செய்யும்படி என பிரதமர் மோடி தெரிவித்து விட்டார்’’ என்றார்.

 

 

-ht