72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்

தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் விஜயகாந்தின் குடும்பத்தினர், நெருங்கிய நட்பு வட்டம், முதல்வர் ஸ்டாலின், இந்நாள் – முன்னாள் அமைச்சர்கள், சில திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு வரையிலான இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு கண்ணீருடன் தங்கள் கேப்டனுக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்ட விஜயகாந்தின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு,மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், உதயநிதி ஸ்டாலின், திமுக எம்பி டி.ஆர்.பாலு ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக, தெலங்கானா ஆளுநர் தமிழிசை, பாஜக முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து விஜயகாந்தின் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட விஜயகாந்தின் உடல் சந்தனப் பேழையில் வைக்கப்பட்டது. இதற்காக 50 கிலோ எடை கொண்ட பிரத்யேக சந்தனப் பேழை தயார் செய்யப்பட்டிருந்தது. அந்த சந்தனப் பேழையின் ஒருபுறத்தில் ‘புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ என்கிற வாசகமும், நிறுவனத் தலைவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்கிற வாசகமும், அதேபோல் அவரின் பிறப்பு மற்றும் இறப்பு தேதிகளும் இடம்பெற்றிருந்தன. இதேபோல் சந்தனப் பேழையின் மற்றொரு பக்கத்தில் ‘கேப்டன்’ என்றும் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த சந்தனப் பேழையில் வைக்கப்பட்ட உடல் அடக்கம் செய்யப்படுவதற்காக குழிக்குள் இறக்கப்பட்டபோது உறவுகளும், நண்பர்களும், தொண்டர்களும் கதறி அழும் காட்சி காண்போரை கண்கலங்கச் செய்தது.

முன்னதாக, விஜயகாந்தின் உடல் தீவுத்திடல் மைதானத்தில் அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டது. மக்கள் அஞ்சலி செலுத்தி சென்று திரும்ப ஏதுவாக பாதைகள் அமைக்கப்பட்டன. இதனால் மக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான போலீஸார் ஈடுபட்டனர்.
பின்னர், தீவுத்திடலில் தொடங்கிய இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும், ரசிகர்களும் கலந்துகொண்டு கண்ணீருடன் பிரியாவிடை அளித்தனர். தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு வரையிலான இறுதி ஊர்வலம் முழுவதுமே மக்கள் வெள்ளத்தாலும், அவர்களின் கண்ணீராலும் நிரம்பின.

 

 

 

-ht