வட இந்தியாவை வாடி வதைக்கும் குளிர் – ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிப்பு

வட இந்தியாவில் நிலவும் அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக டெல்லியில், 110 விமானங்கள், 25 ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் கடும் குளிர்நிலை தொடர்வதால் தேசிய தலைநகருக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சில நாட்களுக்கு பனி மூட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.

பனிமூட்டம் காரணமாக உத்தரப் பிரதேசத்தில் பல விபத்துக்கள் பதிவாகியுள்ளன. ஆக்ரா – லக்னோ விரைவு சாலையில் பல்வேறு வாகனங்கள் மோதிக்கொண்டதில் 12 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். பரேலியில், பரேலி – சுல்தான்பூர் சாலையில் வேகமாக வந்த ட்ரக் ஒரு வீட்டின் மீது மோதியது.

இதனிடையே, பஞ்சாப், ஹரியாணா, டெல்லி, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பனிமூட்டம் அடர்த்தியானது முதல் மிக அடர்த்தியானதாக நிலவும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியைத் தவிர வட இந்தியா முழுவதும் அதிகாலை முதலே பனி மூட்டம் நிலவியதால் சாலையில் எதிரிலிருப்பவர்களை பார்ப்பது சிரமமாக இருந்தது. பாட்டியாலா, லக்னோ மற்றும் பிரயக்ராஜ் பகுதிகளில் காட்சித் திறன் நிலை (visibility) 25 மீட்டர் தூரத்துக்கும் குறைவாக இருந்தது. அமிர்தசரசில் இது பூஜ்யமாக பதிவாகி இருந்தது.

வானிலை ஆய்வுநிலையத்தின் கூற்றுப்படி, பனியின் ஊடே பார்க்கும் திறன் நிலை0- 50 மீட்டர் தூரமாக இருந்தால் அது அடர்த்தியான மூடு பனி நிலை, 51 முதல் 200 மீட்டர் வரை இருந்தால் அடர்த்தி, 201 முதல் 500 மீட்டர் வரை இருந்தால் மிதமாகவும், 500 முதல் 1,000 மீட்டர் வரை இருந்தால் மோசமில்லை என்றும் அர்த்தம்.

 

 

 

-ht