மீண்டும் 3 இடைநீக்கம்: இடைநீக்க எம்.பி.க்கள் எண்ணிக்கை 146 ஆக உயர்வு

மக்களவையில் அமளியில் ஈடுபட்டதால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று எம்.பி.க்கள் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது.

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் முதல், மக்களவையில் இருந்து 97 எம்பிகள், மாநிலங்களவையில் இருந்து 46 எம்பிகள் என 143 பேர் மொத்தமாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். தற்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் டி.கே.சுரேஷ், நகுல் நாத், தீபக் பைஜ் ஆகிய மூவர் மக்களவையில் இருந்து இன்று இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். அவையில் மோசமாக நடந்து கொண்டதால் மூவரும் இடைநீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இந்நிலையில், தற்போதைய சஸ்பெண்ட் எம்.பி.க்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது.

மக்களவையில், ‘இண்டியா’ கூட்டணியைச் சோ்ந்த எதிா்க்கட்சிகளின் மொத்த எண்ணிக்கை 138 ஆகும். இதுவரை 100 போ் இடைநீக்கம் செய்யப்பட்டுவிட்ட நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உட்பட 38 போ்தான் மிச்சம் இருக்கின்றனர். திமுகவின் மொத்தமுள்ள 24 எம்.பி.க்களில் 16 பேரும், திரிணமூல் காங்கிரஸின் 22 எம்.பி.க்களில் 13 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாநிலங்களவையில் திங்கள்கிழமை ஒரே நாளில் 45 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத்தில் இருந்து எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்’ என்ற பதாகை ஏந்தி எதிர்க்கட்சியினர் இன்று பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து டெல்லியில் உள்ள விஜய் சவுக் வரை ஊர்வலமாக சென்றனர்.

பெரும்பாலான எதிர்க்கட்சி எம்.பி.கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா 2023 வியாழக்கிழமை மக்களவையில் நிறைவேறியது. முன்னதாக, இம்மாதத்தின் துவக்கத்தில் மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், மாநிலங்களவையில் இன்று தொலைத்தொடர்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. இதேபோல், பத்திரிகைகள், இதழ்கள் ஆகியவற்றை பதிவு செய்வதற்கான சட்ட மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மக்களவையில் அறிமுகப்படுத்தினார். இது தொடர்பாக ஏற்கெனவே உள்ள பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் பதிவுச் சட்டம் 1867-க்கு மாற்றாக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இந்த மசோதா ஏற்கனவே மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

-ht