எரிமலையால் பாதிக்கப்பட்ட பபுவா நியூ கினியாவுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பிய இந்தியா

 எரிமலை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பபுவா நியூ கினியாவுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை சிறப்பு விமானம் மூலம் இந்தியா நேற்று அனுப்பியது. தெற்கு பசிபிக் நாடான பபுவா நியூ கினியாவில் உள்ள ‘உலவுன்’ என்ற எரிமலை கடந்த நவம்பர் 20-ம் தேதி சீறி புகையை வெளியேற்றியது. இந்த சாம்பல் புகை வானில் 15 கி.மீ உயரத்துக்கு எழும்பியது. 1,700-ம் ஆண்டுகளில் இருந்து அவ்வப்போது இந்த எரிமலை வெடித்து வருகிறது. கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டில் உலவுன் எரிமலை வெடித்தது. அப்போது சுமார் 5 ஆயிரம் பேர் இப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தற்போது இப்பகுதியில் இருந்து 26,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உடனடியாக மனிதாபிமான உதவிகள் தேவை என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பில், இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக பபுவா நியூகினியா உள்ளது.

இதனால் பபுவா நியூகினியா மக்களுக்கு உதவ இந்தியா முடிவு செய்தது. அதன்படி ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களை பபுவா நியூ கினியாவக்கு இந்தியா நேற்று சிறப்பு விமானம் மூலம் அனுப்பியது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: எரிமலை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பபுவா நியூகினியாவுக்கு, 1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் நிவாரணப் பொருட்களை அனுப்பும் என இந்தியா அறிவித்திருந்தது. அதன்படி நிவாரணப் பொருட்களுடன் சிறப்பு விமானம் டெல்லியிலிருந்து நேற்று பபுவா நியூகினியா சென்றது.

எப்போதும் உதவும் இந்தியா இதில் கூடாரங்கள், படுக்கை விரிப்புகள், சுகாதார பொருட்கள், ரெடிமேட் உணவுப் பொருட்கள், தண்ணீர் சேமிப்பு தொட்டிகள், அத்தியாவசிய மருந்துகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள், சானிட்டரி நாப்கின்கள் போன்ற 11 டன் நிவாரணப் பொருட்களும், 6 டன்கள் மருத்துவ உதவி பொருட்களும் அனுப்பப்பட்டன. இவ்வாறு அரிந்தம் பாக்சி கூறினார். பபுவா நியூ கினியாவில் இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போதெல்லாம், இந்தியா உதவியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு பபுவா நியூ கினியாவில் பூகம்பம் ஏற்பட்டபோதும், 2019-ம் ஆண்டில் எரிமலை சீற்றம் ஏற்பட்டபோதும், இந்தியா ஏற்கனவே உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.

 

 

-ht