பிரதமர் மோடியின் ‘வெட் இன் இந்தியா’ – முதல் மாநிலமாக அமல்படுத்தும் உத்தராகண்ட்

பிரதமர் மோடியின் ‘வெட் இன்இந்தியா (இந்தியாவில் திருமணம்)’ யோசனையை முதல் மாநிலமாக உத்தராகண்ட் அரசு அமல்படுத்துகிறது.

உத்தராகண்டில் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை கடந்த 8-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் பேசிய அவர், ‘தானா சேட்’ எனும் பெரும் செல்வந்தர்கள் தங்கள் குடும்ப திருமணங்களை வெளிநாடுகளில் நடத்துகின்றனர். இதற்காக மிக அதிக தொகையை செலவிடுகின்றனர். இதுபோன்ற திருமணங்களை இந்தியாவில் ’வெட் இன் இந்தியா’ எனும் பெயரில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பிரதமர் மோடியின் இந்தயோசனையை முதல் மாநிலமாக அமல்படுத்த பாஜக ஆளும் உத்தராகண்ட் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, ருத்ரபிரயாக் மாவட்டத்தின் திரியுங்கிநாராயண் மற்றும் தில்வாரா, சமோலி மாவட்டத்தின் காலேஷ்வர், டேராடூன் மாவட்டத்தின் தாக்பத்தர் மற்றும் நைனிடால் மாவட்டத்தின் நவ்க்சியாதால் ஆகிய 6 இடங்களில் திருமண மையங்களை நிறுவ முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட் டுள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை கடுவால் மண்டல் விகாஸ் நிகாம் மற்றும் குமாவ் மண்டல் விகாஸ் நிகாம் ஆகியவை செய்து வருகின்றன. இவை அனைத்தும் உத்தராகண்டின் சுற்றுலா மற்றும் புனிதத்தலங்கள் உள்ள குளிர்பிரதேசங்கள் ஆகும்.

இதுகுறித்து கடுவால் மண்டல் விகாஸ் நிகாம் நிர்வாக இயக்குநர் வினோத் கிரி கோஸ்வாமி கூறும்போது, ‘‘இந்த ஆறு மையங்களிலும் பல நவீன வசதிகள் செய்து சர்வதேச திருமண மையங்களாக மாற்றப்படும். இவற்றைச் சுற்றி தங்கும் இடங்கள் அமைக்கப்படும். இங்கு நடைபெறும் திருமணங்களால், இப்பகுதியில் வேலைவாய்ப்பும் வியாபாரமும் பெருகும். உத்தராகண்டுக்கு வரும் சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கையும் கூடும்’’ என்றார்.

கான்பெடரேஷன் ஆப் ஆல் இந்தியா டிரேடர்ஸின் (சிஏஐடி) ஒரு தோராயப் புள்ளி விவரப்படி, ஆண்டுக்கு 5,000 முதல் 7,000 திருமணங்களை இந்தியர்கள் வெளிநாடுகளில் நடத்துகின்றனர். இதற்காக ரூ.75,000 கோடி முதல் ரூ.1 லட்சம் கோடி வரை இந்தியர்கள் செலவிடுகின்றனர்.

இதுகுறித்து சிஏஐடியின் நிர்வாகி பிரவீண் கந்தேல்வால் கூறும்போது, ‘பிரதமர் மோடியின் வெட் இன் இந்தியா திட்டம் இந்தியாவில் முழுமையாக அமலானால் குறைந்தட்சம் ரூ.50,000 கோடி வெளிநாடுகளுக்கு செல்வது தடுக்கப்படும்.

இதற்கு பொருத்தமாக இந்தியாவின் சுமார் 100 முக்கிய நகரங்களில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான அதிநவீன வசதிகள் கொண்டதிருமண மையங்கள் அமைக்கலாம். இதில், டெல்லி, கோவா,லோனேவாலா, மஹாபலேஷ்வர், மும்பை, ஷிர்டி, நாசிக், நாக்பூர், துவாரகா, அகமதாபாத், ஜோத்பூர்,உதய்பூர், சென்னை, திருச்சி, ஏலகிரி மலை, ஊட்டி, கோயம்புத்தூர் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன’ எனத் தெரிவித்தார்.

வட மாநிலங்களில் குளிர்காலங்களில் மட்டுமே அதிக அளவில் திருமணங்கள் நடைபெறுகின்றன. கோடை வெயில் திருமண நிகழ்ச்சிகளுக்கு உகந்ததல்ல என வடஇந்தியர்கள் கருதுவதே இதற்குக் காரணம். இதை மனதில் வைத்து வருடத்தின் பெரும்பாலான மாதங்களும் குளிர் பிரதேசங்களாக இருக்கும் உத்தராகண்டில் திருமண மையங்களை அமைப்பது பொருத்தமாக இருக்கும் என அந்த மாநில அரசு கருதுகிறது.

இந்த ஆறு மையங்களுக்கும் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மேலும் பல திருமண மையங்கள் நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

-ht