கடந்த 2019-ல் காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தாக்குதல் போன்று மீண்டும் நடைபெறும் என்று அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஜார்க்கண்டை சேர்ந்த மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை உத்தரப்பிரதேச போலீஸார் கைது செய்துள்ளனர்.
அந்த மாணவர் ஜார்க்கண்டைச் சேர்ந்தவர் என்றும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் “புல்வாமா தாக்குதல் போன்று விரைவில் தாக்குதல் நடக்கும்” எனப் பதிவிட்டிருந்தார் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மாணவரிடம் விசாரணை நடந்தி வருகின்றனர். இந்தத் தகவலை சஹாரன்புர் காவல்துறை அதன் எக்ஸ் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. அந்தப் பதிவில், “ஆட்சேபனைக்குரிய வகையில் இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் ஒரு பதிவிட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் முக்கியத்துவம் கருதி தியோபாண்ட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் செவ்வாய்க்கிழமை மூன்று பேரை கைது செய்த பாதுகாப்புப் படையினர் அவர்களிடம் இருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். அந்த சந்தேக நபர்களிடம் ராணுவமும் போலீஸாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2019, பிப்ரவரி 14-ம் தேதி, ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி 78 பேருந்துகளில் சிஆர்பிஎப் படை வீரர்கள் பயணித்தனர். காஷ்மீரில் புல்வாமா மாவட்டம், அவந்திபோராவில்- ஜம்மு காஷ்மீர் நெடுஞ்சாலையில் துணை ராணுவப் படையினர் வாகனங்கள் வரிசையாக சென்றன. அப்போது, தேசிய நெடுஞ்சாலையோடு இணைக்கும் கிராமப்புறச் சாலையில் இருந்த ஒரு சிறிய கார் வேகமாக வந்து துணை ராணுவப்படையினர் சென்ற ஒரு பேருந்து மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் மிகப்பெரிய சத்தத்துடன் அந்த கார் வெடிக்கப் பேருந்தில் இருந்த 40 துணை ராணுவப்படையினரும் உடல் சிதறி பலியானார்கள். பின்னர் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
-ht