டெல்லியில் கடும் பனிப்பொழிவு காரணமாக விமானங்கள் தாமதம்

டெல்லியில் கடும் பனிப்பொழிவு காரணமாக 30 விமானங்கள் தாமதமாக தரையிறக்கப்பட்டன. 5 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன.

டெல்லியில் காலை வேளையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், கடந்த 3 நாட்களாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவது மற்றும் தரையிறக்குவதில் சிரமம் உள்ளது. இன்றும் 30 விமானங்கள் தாமதமாக தரையிறக்கப்பட்டன. இது குறித்து டெல்லி விமான நிலைய தகவல் பலகையில், கடும் பனிப்பொழிவு காரணமாக தரையிறங்குவது மற்றும் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், 30 விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரைக்குள் தரையிறங்க வேண்டிய 5 விமானங்கள் அருகில் உள்ள ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்ப்பட்டுள்ளது.

கடும் பனிப்பொழிவு காரணமாக நேற்று காலை 6 மணி முதல் 9 மணி வரை டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 8 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. 7 விமானங்கள் ஜெய்ப்பூருக்கும் ஒரு விமானம் அகமதாபாத்துக்கும் திருப்பிவிடப்பட்டன. இதனிடையே, வரும் 28-ம் தேதி வரை டெல்லியில் கடும் பனிப்பொழிவும், 30-ம் தேதி வரை பனிப்பொழிவும் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, குறைந்தபட்ச வெப்பநிலை மேலும் சில புள்ளிகள் குறையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லி மட்டுமல்லாது, பஞ்சாபின் சில பகுதிகள், ஹரியானா, கிழக்கு உத்தரப்பிரதேசம், மேற்கு மத்தியப் பிரதேசம், ஒடிஷா ஆகிய பகுதிகளிலும் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு உத்தரப்பிரதேசம், சண்டிகர், பிஹார், கடலோர ஆந்திரப்பிரதேசம், திரிபுரா ஆகிய இடங்களில் மிதமான பனிப்பொழிவு இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

-ht