இராகவன் கருப்பையா -மலேசிய அரசியல் வானில் ஒரு சகாப்தம் என இதுநாள் வரையில் கருதப்படும் துன் டாக்டர் மகாதீர் தற்போது தரைதட்டிய கப்பலைப் போன்ற ஒரு முட்டுக்கட்டையான சூழலில் சிக்கித் தவிப்பதைப் போல் தெரிகிறது.
கடந்த 1981ஆம் ஆண்டிலிருந்து 22 ஆண்டுகளுக்கு மலேசியாவை மிகச் சிறப்பாக வழிநடத்தி அதனை அசுர வளர்ச்சிக்கு இட்டுச் சென்ற அவர் பிறகு 2018ஆம் ஆண்டில் மீண்டும் பிரதமர் பொறுப்பை ஏற்றது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
நான்கு மாதங்களுக்கு முன் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென தமது பிரதமர் பதவியைத் துறந்த அவர் தற்போது 3ஆவது முறையாக அப்பதவிக்குக் குறி வைத்துள்ளதுதான் வேடிக்கையாக உள்ளது.
நாட்டின் மிகச் சிறந்த அரசியல் சாணக்கியர் என அரை நூற்றாண்டுக்கும் மேல் புகழின் உச்சியில் கோலோச்சி நின்ற அவருடைய செல்வாக்கு தற்போது படுவீழ்ச்சி கண்டுள்ளது பரிதாபமான ஒன்றுதான்.
எனினும் ‘தன் வினை தன்னையே சுடும்’ எனும் கூற்றுக்கு ஏற்ப அவருடைய இந்த மோசமான சூழலுக்கு அவரேதான் முழுக் காரணம் என்பதே மறுக்க முடியாத உண்மை.
கடந்த பிப்ரவரி மாதத்தில் ஆட்சியை இழந்த பக்காத்தான் கூட்டணி மீண்டும் ஆதனைக் கைப்பற்றும் முயற்சியில் பல்வேறு வியூகங்களை தற்போது ஆராய்ந்து வரும் வேளையில், பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வதில் இழுபறி நிலையில் தள்ளாடுகிறது.
பெர்சத்து கட்சியிலிருந்து கடந்த மாதம் அதிரடியாக நீக்கப்பட்ட மகாதீரும் மேலும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்போது எந்தவொரு கட்சியிலும் அங்கம் வகிக்காமல் கட்சியற்ற நிலையிலேயே உள்ளனர். ஆக, 4 நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே தன் வசம் வைத்துக்கொண்டு சிறு பிள்ளை மிட்டாய்க்கு அழுது அடம்பிடிப்பதைப் போல மீண்டும் பிரதமராவதற்கு அவர் பிடிவாதமாக இருப்பது வியப்பாகவே உள்ளது.
‘ஆறு மாதங்களுக்கு மட்டுமே நான் பிரதமராக இருப்பேன், பிறகு அன்வாரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைப்பேன்’ என வாதிடும் அவருடைய பேச்சை கூட்டணியின் பங்காளிக்கட்சிகள் மட்டுமின்றி நாட்டு மக்களில் பெரும்பாலோரும் கூட நம்பத் தயாராய் இல்லை என்பதும் உண்மைதான்.
பக்காத்தான் கூட்டணியின் மிகப் பெரிய கட்சியான ஜ.செ.க.வும் அமானா கட்சியும் வேண்டா வெறுப்பாக இந்த ஏற்பாட்டுக்கு இணக்கம் தெரிவிக்கும் போதிலும் அன்வாரின் பி.கே.ஆர். கட்சி மகாதீரை அடியோடு வெறுப்பதாகத் தெரிகிறது.
மகாதீரிடம் பிரதமர் பதவியை ஒப்படைத்தால், ‘பழைய குருடி கதவைத் திறடி’ என்ற நிலைக்கு நாம் ஆளாகிவிடுவோம் என்று வாதம் செய்யும் பி.கே.ஆர். கட்சியின் மத்திய செயலவையினர், மகாதீர் நம்மையெல்லாம் பிறகு நற்றாற்றில் கைவிட்டு அம்னோவுடன் கூட்டு சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என எச்சரிக்கின்றனர்.
மகாதீரை பிரதமராக்கி மீண்டும் ஒருமுறை அவருடன் அல்லோகலப்படுவதைவிட அடுத்த பொதுத் தேர்தல் வரை எதிர்க்கட்சியாகவே இருந்துவிடலாம் என அவர்கள் ஆதங்கப்படுவதற்கான காரணங்களையும் நாட்டு மக்கள் அறிவார்கள்.
இந்த இழுபறி நிலையை ஒரு முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்தில், அவருக்கு நாங்கள் விசேஷமாக மதிவுரை அமைச்சர் பதவியை வழங்கத் தயாராய் உள்ளோம் என்ற அன்வாரின் பரிந்துரையையும் கூட மகாதீர் நிராகரித்தார்.
அது மட்டுமின்றி தமக்கு பிரதமர் பதவி வழங்கப்படவில்லையென்றால் பக்காத்தானை விட்டு நிரந்தரமாக விலகப்போவதாகவும் கூட அவர் மிரட்டியுள்ளது சற்று வேடிக்கையாகவே உள்ளது.
அநேகமாக, உலகிலேயே 95ஆவது வயதில் 3ஆவது முறையாக ஒரு நாட்டுக்குப் பிரதமராகத் துடிக்கும் ஒரு அரசியல் தலைவர் என்றால் அது மகாதீராகத்தான் இருக்கும்.
இந்த வயதிலும் நாட்டை ஆட்சி செய்வதற்கு அவர் கொண்டுள்ள தன்னம்பிக்கையை நாம் பாராட்டத்தான் வேண்டும். இருந்த போதிலும் 22 மாதகால பக்காத்தான் ஆட்சியின் போது இதர உறுப்புக் கட்சிகள் மட்டுமின்றி பல வேளைகளில் பொதுமக்களின் அபிலாஷைகளுக்கும் கூட செவிசாய்க்காமல் தான்தோன்றித்தனமாக அவர் செய்த பல முடிவுகளின் பலன்களை இப்போது அனுபவிக்கின்றார் என்றுதான் சொல்ல வேண்டும்.
தனது நிலையை வலுப்படுத்தும் நோக்கத்தில் பிரதமர் முஹிடின் எல்லா கோணங்களிலும் அனுதினமும் பலதரப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற போதிலும் அவருடைய பதவிக்கு உத்தரவாதம் இணலையென்றேத் தெரிகிறது.
ஆளும் கூட்டணியிலேயே அப்பதவிக்கு கழுகைப் போல் பலர் காத்திருக்கும் நிலையில் மகாதீரின் கனவுகள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் சற்று கம்மியாகத்தான் உள்ளது.
எனவே தமது சொந்த நடவடிக்கைகளினால் நாட்டு மக்களின் செல்வாக்கை பெருமளவில் இழந்துவிட்ட மகாதீர் அரசியலிலிருந்து கௌரவமாக ஓய்வு பெறுவதே சாலச்சிறந்தது.