நிலையில்லாத அரசியலில் மகாதீரின் மகன் முக்ரீஸ்!

இராகவன் கருப்பையா – முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகும் தறுவாயில் இருக்கும் இவ்வேளையில் அவருடைய புதல்வர் முக்ரீஸ் மகாதீரின் அரசியல் எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாகி உள்ளது.

தனக்கென ஒரு பாதையை வகுக்காமல் இதுநாள் வரையில் தந்தையின் நிழலிலேயே குளிர்காய்ந்து வந்த அவர், .செ.க. அல்லது அமானா போன்ற ஏதாவது ஒரு கட்சியில் இணைவது குறித்து அவசரமாக முடிவெடுக்க வேண்டும்.

இல்லையெனில் மிக விரைவில் அவருடைய அரசியல் பயணம் மறக்கப்பட்ட ஒரு சரித்திரமாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.

மகாதீருக்குப் பின் அவருடைய அரசியல் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று யூகிக்க முடியாத அளவுக்கு அடிமட்ட ஆதரவு இல்லாத ஒரு அரசியல்வாதியாகவே இதுகாறும் அவர் காலத்தைக் கடத்தியுள்ளார்.

அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தரப் பகைவனும் இல்லை என்ற கூற்று அண்மைய காலமாக நம் நாட்டில் தெருவுள்ளத் தெளிவாக நிரூபிக்கப்பட்டு வருகிற போதிலும் மகாதீரின் மீது உள்ள வெறுப்பினால் பெரும்பாலான கட்சிகள் அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு நல்கும் வாய்ப்பு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மலேசியாவில் வாரிசு அரசியல் அதிகம் இல்லை என்ற போதிலும் குறிப்பிட்ட ஒரு சிலர் தங்களுக்கென நிலையான இடங்களைப் பிடித்துள்ளது நாம் அறிந்த ஒன்றுதான்.

நாட்டின் 2ஆவது பிரதமர் துன் ரசாக்கின் மரணத்தைத் தொடர்ந்து அவருடைய மகன் நஜீப் தனது 22ஆவது வயதிலேயே அரசியலில் நுழைந்தார்.

முக்ரீஸைப் போல் இல்லாமல் தமது தந்தையின் அரவணைப்போ ஆதரவோ செல்வாக்கோ இல்லாமலேயே பிரதமர் பதவி வரையில் தன்னைத்தானே அவர் உயர்த்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

அதே போல 3ஆவது பிரதமர் துன் ஹுசேன் ஒனின் மகன் ஹிஷாமுடின் அரசியலில் பிரவேசித்து ஓராண்டு காலத்திற்குள் அவருடைய தந்தை மரணித்தார்.

இருந்த போதிலும் அம்னோவின் உதவித் தலைவர் பதவி வரையில் ஹிஷாமுடின் உயர்ந்ததும் நாம் அறிந்த ஒன்றே.

பி.கே.ஆர். கட்சித் தலைவர் அன்வாரின் புதல்வி நூருல் இஸ்ஸாவும் கூட 1998ஆம் ஆண்டில் தமது தந்தை சிறையில் அடைக்கப்பட்டு சில ஆண்டுகளுக்குப் பின்னரே அரசியலில் நுழைந்தார்.

இதுவரையில் அரசாங்கத்தில் எந்த ஒரு உயர் பதவியையும் அவர் அலங்கரிக்கவில்லை என்ற போதிலும் நாட்டின் புகழ்பெற்ற இளம் அரசியல்வாதிகள் பட்டியலில் அவர் முதலிடத்தில் உள்ளார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

மூத்த அரசியல்வாதி லிம் கிட் சியாங்கின் புதல்வர் லிம் குவான் எங்கின் நிலையும் அதே மாதிரிதான்.

எதிர்க்கட்சியில் இருந்தவாறே 36 ஆண்டுகளாக தமது திறமையை வளர்த்துக் கொண்ட அவர் கடந்த 2018ஆம் ஆண்டில் பலம் பொருந்திய நிதியமைச்சர் பொறுப்புக்கு நியமனம் பெற்றார்.

60 வயதான அவர் நாட்டின் மிகப் பிரபலமிக்க அரசியல்வாதிகளில் ஒருவர் என்பது மறுக்க முடியாத உண்மை.

நிலைமை இவ்வாறு இருக்க, சுமார் 16 ஆண்டுகளுக்கு முன் அரசியலில் காலடி வைத்த 55 வயதுடைய முக்ரீஸ் அண்மைய காலம் வரையில் தமது தந்தையின் அதீத செல்வாக்கு இருந்தும் கூட மலேசிய அரசியல் வானில் மின்ன இயலாமல் போனது வியப்பாகத்தான் உள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டில் அனைத்துலக தொழில்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்ட அவர் பிறகு 2013ஆம் ஆண்டில் கெடா மாநில மந்திரி பெசாராக பொறுப்பேற்றார்.

ஆனால் அப்போது பிரதமராக இருந்த நஜிப்பை மகாதீர் பகைத்துக்கொண்டதால் மூன்றே ஆண்டுகளில் அந்த மாநில அரசு கவிழ்ந்தது நாம் அறிந்த ஒன்று.

பிறகு 2018ஆம் ஆண்டில் மகாதீர் பிரதமரான போது மீண்டும் கெடாவுக்கு மந்திரி பெசாராக நியமனம் பெற்ற அவருடைய செல்வாக்கு இரண்டே  ஆண்டுகளில் மண்ணைக் கவ்வியது.

இவ்வாண்டு தொடக்கத்தில் மத்திய அரசைக் கவிழ்த்து பிரதமரான முஹிடின் யாசினை மகாதீர் பகைத்துக்கொண்டதால் முக்ரீஸ் தலைமையிலான அந்த மாநில அரசு கடந்த மாதத்தில் மீண்டும் கவிழ்ந்ததையும் மக்கள் அறிவார்கள்.

ஆக, கடந்த 2016ஆம் ஆண்டில் அம்னோவிலிருந்து நீக்கப்பட்டிருந்த முஹிடினுக்கும் தமக்கும் அரசியலில் புத்துயிரளிக்கும் பொருட்டு எந்த கட்சியை மகாதீர் தோற்றுவித்தாரோ, அதே பெர்சத்து கட்சியிலிருந்து தந்தையும் மகனும் தற்போது நீக்கப்பட்டுள்ளது பரிதாபகரமான ஒன்றுதான்.

எனவே மகாதீரின் செல்வாக்கு எந்த காலக்கட்டத்திலும் இல்லாத அளவுக்கு தற்போது படுவீழ்ச்சி கண்டுள்ள நிலையில் முக்ரீஸின் அரசியல் எதிர்காலம் ஒரு பட்டாம்பூச்சியின் வாழ்க்கையாகிவிடும் போல் தெரிகிறது.