சிவாலெனின் | நாட்டின் 15-வது பொதுத் தேர்தலுக்கான அறிகுறி தென்பட தொடங்கியிருக்கும் சூழலில், நாட்டின் அரசியல் நீரோட்டத்தில் மஇகா மீண்டும் உயிர்த்தெழுமா அல்லது அடித்து செல்லுமா எனும் கேள்வி அக்கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி, இந்தியச் சமூகத்திடமும் மேலோங்கியுள்ளது.
அக்கட்சியின் தேசியத் தலைவர் விக்னேஸ்வரன், கட்சியை மீண்டும் சரியான இலக்கில் பயணிக்க வைக்க பல்வேறு யுக்திகளைக் கையாண்டாலும்; அவரது எல்லா முயற்சிகளுக்கும் அக்கட்சியின் மாநில, தொகுதி மஇகாவிடமிருந்து ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகள் உள்ளனவா என்றால், அஃது ஏமாற்றத்தைதான் அளிக்கிறது.
அதுமட்டுமின்றி, அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ, பெர்சத்து மற்றும் பாஸ் ஆகிய கட்சிகள் ஓர் ஆணியில் களமிறங்குவதால், அக்கட்சிகள் இணைந்திருக்கும் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி மஇகாவின் வெற்றியை ஒரு பொருட்டாக கருதவில்லை. இந்நிலை மசீசவிற்கும் பொருந்தும். மஇகாவின் வெற்றிகள் இல்லாமலேயே ஆட்சியை அமைக்க போதுமான பலம் இருப்பதாக கருதும் அக்கூட்டணி, மஇகா வெற்றி பெற சாத்தியமான தொகுதிகளைக் குறி வைத்தும் காய் நகர்த்துகின்றன.
தொடக்கத்திலிருந்தே, இஸ்லாமிய சிந்தனை அரசை நிறுவுவதில் பாஸ் கட்சியும் அம்னோவும் குறியாக இருக்கும் சூழலில், நாட்டின் 15-வது பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேசனல் மத்திய ஆட்சியைத் தக்க வைத்தால், நாட்டில் மலாய் பெரும்பான்மையாக இஸ்லாமிய சிந்தனை ஆட்சியை அமைக்க அது அச்சாரமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.
தேசிய முன்னணி கூட்டணியில் 9 நாடாளுமன்றங்களில் போட்டியிட்ட மஇகா வரும் பொதுத் தேர்தலில் மிகக் குறைவான தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது எனத் தெரிய வந்துள்ளது. அதில் தாப்பா மற்றும் சுங்கை சிப்புட் ஆகிய தொகுதிகள் மட்டுமே உறுதியாக அக்கட்சி போட்டியிடும் தொகுதிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கேமரன் மலை, உலுசிலாங்கூர் ஆகியத் தொகுதிகளில் அம்னோவும் காப்பார் உட்பட சில தொகுதிகளில் பெர்சத்து மற்றும் அஸ்மின் அலி பிரிவைச் சார்ந்தவர்களும் போட்டியிடத் தயாராகி வருவதாகவும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியும் மஇகாவின் கையைவிட்டு போகலாம் என உறுதியாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில், மஇகாவிற்கு சீன வாக்காளர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கவும் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி முன் வந்திருப்பதாகவும் நம்பப்படுகிறது. குறிப்பாக, ஜசெக கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற்ற ஈப்போ பாராட், ஈப்போ தீமோர், பத்து காவான், ஜெலுத்தோங், பூச்சோங் உட்பட சில தொகுதிகளில் போட்டியிட மஇகாவிற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
பரிந்துரைக்கப்பட்டிருக்கும் தொகுதிகளில் மஇகா வெற்றி பெறுவது என்பது சாத்தியமற்றது என அக்கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் கூட புலம்பிக் கொண்டிருக்கும் சூழலில், இந்தப் பரிந்துரைக்குக் கட்சி தலைமைத்துவம் செவிசாய்க்காமல் இதற்கு முன்னர் போட்டியிட்ட தொகுதிகளில் மீண்டும் போட்டியிட ஆக்கப்பூர்வமான நடவடிக்கையைக் கட்சி மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுகிறார்கள்.
அம்னோ ஆட்சி அதிகாரத்தில் நிலையாக அமர்ந்துகொள்ள துடிக்கும் நிலையில், மஇகாவின் நிலைக்காக அது ஒருபோதும் உதவிட முன் வரவில்லை. நாட்டின் 15-வது பொதுத் தேர்தலில், தான் வலுவாக இருப்பதையும் அதிக தொகுதிகளை வெற்றி கொண்டு நாட்டின் அரசியல் நீரோட்டத்தில் தனக்கான ஆளுமையை மெய்பித்துக் கொள்ள முனையும் வேளையில், மஇகா குறித்த எந்த அக்கறையையும் கவலையையும் அம்னோ கொண்டிருக்கவில்லை.
தேசிய முன்னணி ஆட்சியில், மஇகா அக்கூட்டணியின் பெரும் கட்சிகளோடு ஒட்டியிருந்ததேத் தவிர, அது வலுவாய் இல்லை, வாய் இருந்தும் ஊமையாகவே இருந்தது எனும் குற்றச்சாட்டு பரவலாக இருந்ததை மறுத்திடலாகாது. இந்நிலையில், நாட்டின் 15-வது பொதுத் தேர்தலில் மஇகா அடையாளத்தை இழந்தால் கூட்டணியில் இருந்தும் நடைபிணத்திற்கே அது ஈடானது.
புதியக் கூட்டணியில் சொகுசாய் ஒட்டிக் கொண்ட அம்னோ, நீண்டக்கால நண்பனை நட்டாற்றில் விட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதேவேளையில், மஇகாவும் அம்னோவின் கட்டளைக்கு அடிப்பணிந்து தங்களுக்கான உரிமையை விட்டுக் கொடுக்க முனைந்து விட்டனர். அம்னோவே பிடுங்கிக் கொள்வதைக் காட்டிலும் விட்டுக்கொடுப்பது விவேகம் என மஇகாவில் கருதுகிறார்கள் போலும்.
இதற்கிடையில், மாநில, தொகுதி நிலையிலான மஇகாவினரின் செயல்பாடுகள் பெரும் ஏமாற்றம் அளிக்கின்றன. அவர்கள் இன்னமும் வெற்றியின் மயக்கத்தில் மிதப்பது போலவே உலா வருகிறார்கள். தத்தம் தொகுதிகளில் அவர்களின் செயல்பாடு என்பது வெறும் கடமைக்கானதாக உள்ளதேத் தவிர அதில் விவேகமும் அக்கறையும் துளியும் இல்லை.
அண்மைய காலமாய் மஇகாவின் செயல்பாடுகள் ஒவ்வொரு இடத்திலும் ‘போட்டோக்கு போஸ்’ கொடுப்பதும், அதை ‘வாட்சாப்’பில் பதிவேற்றம் செய்வதுமாக மாறிவிட்டது. புலனத்தில் நூறு பதிவுகள் வந்தால், அதில் ஒன்னு, ரெண்டுதான் உயிர்மையான மக்கள் சேவையாகவும் மக்களுக்கான பணியாகவும் இருப்பதைக் காண முடிகிறது.
பெரிக்காத்தான் கூட்டணி அடுத்தத் தேர்தலில் தொடர்ந்தால் அதில் பெர்சத்து, அம்னோ, பாஸ் கட்சியோடு அஸ்மின் அலியின் பிரிவினரும் பெரும்பான்மை தொகுதிகளை மையமிட்டுக் கொள்ளும் நிலையில், மஇகாவின் நிலை பரிதாபத்திற்குரியதாக உருமாறும் என்பதில் ஐயமில்லை.
பாக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை இழந்து பெரிக்கத்தான் கூட்டணி ஆட்சியில் அமர்ந்தபோது, அக்கூட்டணி ஆட்சியின் கீழ் மஇகா இளவுகாத்த கிளியாய் காத்துக்கிடக்கிறது. அதற்கான எந்தவொரு உரிமையும் கூட்டணி தர்மத்தின் கீழ் வழங்கப்படவில்லை என்பதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஓர் அமைச்சரோடு நாடாளுமன்றத்தில் கதவடைப்பு செய்துவிட்ட பெரிக்காத்தான், மாநில ரீதியில் அக்கட்சிக்கு எந்தவொரு வாய்ப்பையும் வழங்கவில்லை என்பது பெரும் ஏமாற்றமானது.
பெரிக்காத்தான் கூட்டணியில் பெரிய இந்தியக் கட்சியாக வலம் வரும் மஇகாவிற்கு மாநிலச் சிறப்பு அதிகாரி, மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர், மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரி உட்பட அமைச்சர் மற்றும் துணை அமைச்சர்களின் சிறப்பு அதிகாரி நியமனங்கள் கூட இல்லாமல்; மாநில, தேசிய நிலையில் இந்தியர்களின் பிரதிநிதி யார் எனும் கேள்வியோடு இந்தியச் சமூகம் பெரும் கேள்விக்குறியோடு வலைந்து கிடக்கிறது.
மாநில ரீதியில் இந்தியர்களின் விவகாரங்களைக் கவனிக்கவும் அவர்களின் பிரச்னைகளைத் தீர்க்கமாகவும் விவேகமாகவும் முன்னெடுக்க வழியின்றி மஇகா பல் புடுங்கப்பட்ட பாம்பாக இருக்கிறது. மஇகாவின் அரசியல் பலத்தைப் பெரிக்காத்தான் கூட்டணி பெரும் பலவீனமாக உருமாற்றி விட்டது. அண்ணன் எவ்வழியோ, தம்பியும் அவ்வழி என்பது போல, அம்னோவை நம்பி பெரிக்காத்தான் கூட்டணியோடு கைகோர்த்த மஇகா நாட்டின் 15-வது பொதுத் தேர்தலில் நிலைக்குமா எனும் கேள்வி அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழவேச் செய்கிறது.
பாக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின் போது, அந்த அரசாங்கத்தின் மீது இந்தியச் சமூகத்தின் நம்பிக்கை சரியத் தொடங்கியதை அரசியல் கருத்துகள் மெய்பித்துக் கொண்டிருந்த நிலையில், கொஞ்சங் கொஞ்சமாக இந்தியர்களின் நம்பிக்கை மஇகா பக்கம் திரும்பியதை மறுத்திட முடியாது. அதற்குச் சான்றாக அக்காலக்கட்டத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் இந்தியர்களின் ஆதரவு தேசிய முன்னணிக்குச் சாதகமான வெற்றிகளைக் குவித்ததையும் குறிப்பிடத்தான் வேண்டும்.
ஆனால், பெரிக்காத்தான் கூட்டணியில் அம்னோவோடு மஇகாவும் கூட்டணி கொள்கைக்காகக் கைகோர்த்த வேளையில், இந்தியர்களின் ஆதரவு மஇகாவிற்கு அந்நியமாகத் தொடங்கியிருப்பதை அக்கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் உணராமல் இல்லை. கூட்டம் சேர்ப்பதாலும் ஆர்ப்பாட்டம் செய்வதாலும் இந்தியர்களின் ஆதரவு மஇகாவிற்கு இருப்பதாக நம்புவது அறிவிலித்தனமானது.
பெரிக்காத்தான் கூட்டணியில் மஇகா முழுமையான இந்தியப் பிரதிநிதித்துவக் கட்சியெனக் கூறிக்கொண்டாலும், பாஸ் கட்சியில் இருக்கும் முஸ்லிம் அல்லாத பிரிவான பாஸ் பேரவையிலும் பெர்சத்துவில் விரைவில் அமையவிருக்கும் முஸ்லிம் அல்லாதவர் பிரிவிலும் அங்கத்துவம் பெற்றிருக்கும் இந்தியர்களுக்கும் அக்கட்சிகள் சார்ந்த தொகுதிகளோ அல்லது முக்கியத்துவமோ வழங்கப்படுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை.
இதன் மூலம் மஇகாவிற்கு வழங்கப்பட வேண்டிய முக்கியத்துவங்களும் அரசியல் ரீதியிலான வாய்ப்புகளும் அவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் நிலையில், மஇகா அதன் நிலையிலிருந்து சரிய வேண்டிய சூழல் இயல்பாகவே உருவெடுக்கும். இவ்விவகாரத்தில் மஇகாவின் செயல்பாடு காலத்தை வென்ற அரசியல் யுக்தியாக இருந்தால் மட்டுமே தனக்கான நிலையை அக்கட்சியால் தற்காத்துக் கொள்ள முடியும்.
நடப்பில் மஇகாவிற்காக ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் நாடாளுமன்றங்களில் அக்கட்சி வெற்றி பெறும் என நம்பிக்கையோடு கூறும் தொகுதியாக தாப்பாவையும், அடுத்து 50-50 எனும் நிலையில் சுங்கை சிப்புட் தொகுதியைத் துணிந்து கூறலாம். மற்றத் தொகுதிகளில் அதன் வெற்றி என்பது கானல்நீர்தான். இது அக்கட்சியினருக்கேத் தெரிந்திருந்தும் அவர்கள் துணிந்து கருத்துரைக்காமல் மௌனமாய் இருப்பதுதான் வேடிக்கையானது.
இந்நிலையில், அக்கட்சி எடுத்திருப்பதாக நம்பப்படும் வெற்றி பெற சாத்தியமற்ற தொகுதிகளைக் கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுப்பது என்பது அக்கட்சியைப் பலமான சூழலுக்கு இட்டுச்செல்வதைக் காட்டிலும் பலவீனமான நிலைக்கு தள்ளிவிடும் என்று பரவலாக முணுமுணுக்கப்படுகிறது. இதில் அக்கட்சியின் பாரம்பரியத் தொகுதிகளும் அடங்கியுள்ள நிலையில், அத்தொகுதிகளை விட்டுக் கொடுப்பதால் கட்சிக்குப் பெரும் இழப்பு காத்திருப்பதாக அதன் பற்றாளர்களும் உறுப்பினர்களும் அதிருப்திக்கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டின் முந்தையத் தேர்தல்களில் மஇகா தோல்வியுற்றத் தொகுதிகளோடு வெற்றி பெற்ற தொகுதிகளையும் கூட்டணி கட்சிக்காக, குறிப்பாக அம்னோவிற்கு விட்டுக் கொடுத்துள்ளது. அவ்வாறு விட்டுக் கொடுக்கும் ஒவ்வொரு தொகுதியும் அம்னோவைப் பலப்படுத்தி, மஇகாவைப் பலவீனப்படுத்தியிருப்பதை அவ்வளவு எளிதில் மறந்திடமுடியாது. அம்னோவுக்குக் கொடுக்கப்படும் மஇகா தொகுதிகளில், அம்னோ வெற்றி பெறுவதும் மாற்றாக வழங்கப்படும் தொகுதியில் மஇகா தோல்வியடைவதும் இதற்கு முன்னர் நிகழ்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் மஇகா விட்டுக் கொடுத்த தொகுதிகளில் கூட்டணி கட்சியான அம்னோ சொகுசாய் அதன் அடையாளத்தைப் பதிவு செய்திருக்கும் நிலையில்; மீண்டும் அத்தொகுதிகளைக் கோரும்பட்சத்தில் அம்னோ நிச்சயம் அதனை மஇகாவிற்கு விட்டுக் கொடுக்காது. வெற்றி பெற சாத்தியமுள்ள உத்தான் மெலிந்தாங், பேராங், பாசீர் பஞ்சாங் ஆகிய சட்டமன்றங்களையும் கேமரன் மலை உட்பட உலுசிலாங்கூர் போன்ற நாடாளுமன்றங்களில் போட்டியிடவும் மஇகாவிற்கு வாய்ப்பு வழங்குமா அம்னோ எனும் கேள்விக்கு விடை கிடைப்பது அவ்வளவு எளிதல்ல.
நாட்டின் 15-வது பொதுத் தேர்தலில், மஇகா போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் போது, இனி வருங்காலங்களில் மலேசிய அரசியல் நீரோட்டத்தில் மஇகா அதன் அடையாளத்தைத் தொலைத்துவிட்டு கூட்டணியில் ஒரு கட்சியாக இருக்குமேத் தவிர, அரசாங்கத்தில் பிரதிநிதிதுவம் பெறுவதில் பெரும் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும் என்பது வெறும் வார்த்தையாக இல்லாமல், எச்சரிக்கையாகவே சொல்ல வேண்டியுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு நடந்த நாட்டின் 12-வது பொதுத் தேர்தல் முதல், மஇகா அதன் பாரம்பரியத் தொகுதிகளில் பலவற்றைக் கூட்டணி கட்சிகளுக்காக விட்டுக் கொடுத்துள்ளது. இந்த விட்டுக்கொடுத்தலின் மூலம் மஇகா பெரும் இழப்பைச் சந்தித்துள்ளதையும் மறந்திடக்கூடாது. இந்நிலையில், இனியும் பாரம்பரியத் தொகுதிகளை விட்டுக் கொடுக்கும் சூழலை மஇகா உருவாக்கிக் கொள்ளக்கூடாது.
கட்சியின் எதிர்காலத்தையும் நாட்டின் அரசியல் நீரோட்டத்தில் கட்சியின் நிலையான தன்மையையும் நிலைநிறுத்திக் கொள்ள பாரம்பரியத் தொகுதிகளைக் கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்கும் போக்கை மஇகா கைவிடவேண்டும். வெற்றி பெறும் தொகுதிகளுக்குக் குறி வைக்கும் மஇகா சொந்த தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்களை ஆராய வேண்டும் என்பதே அக்கட்சியினரின் விருப்பமாக உள்ளது.
கூட்டணிக்காக விட்டுக் கொடுத்து மலேசிய அரசியல் நீரோட்டத்தில் தொலைந்துப் போவதைக் காட்டிலும், உறுதியான நிலைப்பாட்டில் நின்று தம்வசம் இருக்கும் தொகுதிகளில் வெற்றி பெறத் தீவிர முனைப்புக்காட்ட மஇகா அதன் ஆக்கப்பூர்வமான அரசியல் வியூகத்தை அமைக்க வேண்டும். இல்லையேல், பெரிக்காத்தான் கூட்டணி நாட்டின் அரசியலில் மஇகாவைக் குழித்தோண்டி புதைத்துவிடும் என்பது நிச்சயம்.
நடப்பு அரசியல் சூழலுக்காக மஇகா சிந்திக்க தொடங்கினால், அதன் எதிர்காலம் இருள் சூழ்ந்து மீண்டும் வெளிச்சத்தைப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு விடும். வருங்காலத்தை நினைப்பில் வைத்து, நிகழ்கால முன்னெடுப்புகளை அக்கட்சி மேற்கொண்டால் நாட்டின் 15-வது பொதுத் தேர்தல் மட்டுமின்றி, இனி வரும் பொதுத் தேர்தல்களிலும் அக்கட்சி உயிர்பெற வாய்ப்பு உள்ளது. இல்லையேல், அதன் எதிர்காலமும் அக்கட்சி உறுப்பினர்களின் எதிர்காலமும் கேள்விக்குறிதான்.
ம இ கா தோல்விகளிலிருந்து பாடம் படிக்காமல்,ஆட்சி மாற்றத்தால் பதவியில் ஒட்டிக் கொண்டு அரசாங்கத்திற்கு வால் பிடிக்கிறார்கள்…நாடாளுமன்றத்தில் கூஜா தூக்குகிறார்கள்.
நிலைத்தால் கட்சி தலைவர்களுக்கு நல்லது…அடித்து சென்றால் இந்திய சமுதாயத்திற்கு நல்லதோ,நல்லது
போட்டோக்கு போஸ்ட் கொடுக்கும் ம இ கா தலைவர்கள்
மக்களுக்கு உருப்படியா எதுவும் செய்யறத்து இல்லை…..இதை சொன்ன எதிர்கட்சிகாரன் உலறரானு சொல்லுவாங்க…